விழியே பேசு... |
- நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வந்தார்!
- ரஞ்சிதா என்னுடன் இல்லை: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா பதில்
- ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர்
- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி
- ராவணனே விடுதலையாகும் போது ராசா ஆகக் கூடாதா?... கருணாநிதி கேள்வி
- ஐ.பி.எல். கிரிக்கெட்: முக்கியமான ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
- தாராளமா கேமரா கொடுங்க, வச்சுக்கிறேன்.. திருப்பனந்தாள் ஆதீனம் பதிலடி
- நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?
- 'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!
- அண்ணன் கொடுத்த கேட்ச்..கோட்டைவிட்ட இர்பான்-சகோதர பாசம் காரணமா?
- 100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த 178 படங்கள்!
- 2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா..
- கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பாய்கிறார் சச்சின்!
| நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வந்தார்! Posted: 09 May 2012 10:57 PM PDT துறவு என்பது பெருமளவுக்கு இந்தியச் சமயங்களுக்கு உரியது! துறவு என்பது உடைமைத் துறவு மற்றும் காமநீக்கம்! பற்று நீக்கம் என்பது துயர நீக்கம்! துயரம் என்பது உடைமை சார்ந்தும், காமம் சார்ந்தும் வருவதால், துயரத்திலிருந்து முற்றாக விடுபட விரும்புபவர்கள் இவை இரண்டிலிருந்தும் முற்றாக விடுபட்டு விடுவார்கள்! பற்றில் உழல்பவர்களைப் பற்றற்ற துறவிகளே தூக்கி நிறுத்த முடியும் என்பதால், துறவிகளுக்கு இலக்கணம் வகுக்கின்ற பணியைப் புத்தன் செய்தான்! ஒரே வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் பிச்சை கொள்ள வேண்டாம் என்றான் புத்தன்! அது அவ் வீட்டாரோடு தொடர்பும், அதன் வழியாகப் பற்றும் வளரக் காரணமாகுமாம்! ஒரே மரத்தடியில் மூன்று நாட்களுக்கு மேல் படுத்துறங்க வேண்டாம் என்றும் சொல்கிறான். வேறொருவன் அங்கு படுத்துறங்க நேரிட்டால், அவனிடம், ""எழுந்திரு; இந்த இடம் என்னுடையது'' என்று மல்லுக்கு நிற்க நேரிடும். எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்து, கேவலம் இந்த மரத்தடி இடத்தை உரிமை பாராட்டுகின்ற அசிங்கங்கள் நேரிடும்! மனத்தின் நீர்மை இப்படிப்பட்டதுதான் என்பதால், "கருத்தோடிருங்கள், கருத்தோடிருங்கள்' என்று பன்னிப் பன்னிச் சொல்லுவான் புத்தன்! புத்தன் மன்னனாக இருந்தவன்; எல்லையற்ற செல்வத்தின் மீது மட்டுமன்று; மக்களின் மீதும் அதிகாரம் உடையவனாக இருந்தான்! பல்லாயிரம் பேருக்கு வகைப்பாடுடைய விருந்தளிக்க முடிந்தவன், ஒரு மஞ்சளாடை அணிந்து தன்னுடைய உணவுக்காக ஓர் எளிய குடிசையின் முன்னால் கையேந்தி நிற்பதற்கு முன் வந்ததையும், அதிகார மணிமுடியைத் துறந்துவிட்டுத் தலையை முண்டிதம் செய்து கொண்டதையும் சிந்தித்துப் பார்க்கும்போது, துறவு நிலை அரச நிலைக்கும் மேலானதாய் இருக்க வேண்டும் என்று புத்தனின் துறவால் உய்த்தறிய முடிகிறது! அரசனாக இருந்து துறவியாக மாறிய இன்னொருவன் பத்ரகிரி. ஒரு கோயிலின் மேற்கு வாயிலில் பிச்சையைப் பெறுவதற்கு ஓர் ஓட்டினை வைத்திருந்ததற்காகவும், தன்னை ஒட்டிக் கொண்ட நாயை விரட்ட மனம் ஒப்பாது அதை வளர்த்து வந்ததற்காகவும், "பத்ரகிரி ஒரு சம்சாரி' என்று அந்தக் கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பட்டினத்தார் கேலி செய்தாராம்! காரணம் ஓர் ஓடு கூட ஓர் உடைமைப் பொருளாகும் என்றெண்ணிப் பட்டினத்தார் கைகளைச் சேர்த்தே பிச்சை ஏற்று உண்டவராம்! ""உடை கோவணம் உண்டு; உறங்கப் புறந்திண்ணை உண்டு; பசி வந்தால் உணவிட வீதிக்கு நல்ல மாதர்கள் உண்டு இந்த மேதினியில்! ஏதுக்கு நீ சலித்தாய் மனமே'' என்று மனத்தினைச் சவுக்கால் அடித்து ஒழுங்கு செய்யும் இயல்பினர் பட்டினத்தார்! காவி என்பது துறவின் அடையாளம்; அதை அதற்குத் தகுதியில்லாதவன் அணியக் கூடாது! பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று' (273). ஆதீனங்களாக இருப்பவர்கள் பேசும்போது, "நான் சொன்னேன்' என்று சொல்ல மாட்டார்கள். "நாங்கள் சொன்னோம்' என்றுதான் சொல்லுவார்கள்! "நான்' என்பது அகந்தைச் சொல்லாம்; "நான்' "எனது' என்னும் சொற்களைக் கூடத் துறந்து விட்டிருக்க வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், இவர்களின் மடங்களுக்குள் பதுக்கி வைத்திருக்கிற சொத்தையும் பணத்தையும் சோதனையிட வருமானவரித் துறை வருகிறது! "என்னிடம் கோவணத்தையும் உத்திராட்சத்தையும் தவிர வேறென்ன இருக்க முடியும்' என்று சொல்ல வேண்டியதுதானே! "இன்ன மந்திரியின் ஏவல் இது' என்று ஏன் புலம்ப வேண்டும்? ஒரு காலத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல், ஆதீனகர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம் விடப்படுகின்றன. பழைய ஆதீனகர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம்; தங்கச் சிம்மாசனம்; தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ? இந்திய ரூபாய் மதிப்புச் சரிந்து வருவதால் அமெரிக்க டாலராகவே வழங்கப்படலாம்! சர்வதேச மதிப்புக்குச் சம்பந்தர் மடத்தை உயர்த்த வருகிறவருக்கு சர்வதேச மதிப்புள்ள டாலருக்கா பஞ்சம்? இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்களெல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப்படுவதுபோல, இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக் கொண்டபோது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக் கொடுமை! அரசியல்வாதிகள் மீது குற்ற வழக்குகள் பெருகப் பெருக "இவ்வளவுதானே' என்று அவர்கள் வெட்கத்தை உதிர்த்து விடுவது போல, ஆதீனகர்த்தர்களும் சொரணை இல்லாமல் போய் விடுவார்கள் போலிருக்கிறது! ஆதீனகர்த்தர்களின் எண்ணிக்கை இருநூற்றுத் தொண்ணூறைத் தாண்டிவிட்டது. ஞானசம்பந்தரைத் தவிர வேறு யாரையாவது யாருக்காவது நினைவிருக்கிறதா? ஞானசம்பந்தர் தங்கச் செங்கோல் வைத்துக் கொண்டா சைவத்தை வளர்த்தார்? ஞானசம்பந்தர் சைவத்தை வளர்த்தார் என்பதன் பொருள் பெளத்தத்திலிருந்தும் சமணத்திலிருந்தும் எண்ணில் அடங்காதவர்களை மதம் மாற்றினார் என்பதல்லவா! இப்போது சைவம் யாரையும் தன்னுடைய மடிப்புக்குள் புதிதாக அனுமதிப்பதில்லை. ஒருவன் சைவன் என்றால் அவன் சைவனாகவே பிறக்கிறான் என்பதுதான்! ஏனெனில் சைவனாகப் பிறப்பவனுக்குச் சமய அடையாளம் மட்டும் போதாது. அவனுக்குச் சாதி அடையாளமும் வேண்டும்! ஒரு வெள்ளைக்காரனைச் சைவ சமயத்தில் சேர்ப்பதாக இருந்தால், அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பதற்கு விடை கண்டாக வேண்டும்! அவனைச் சேர்த்துக் கொள்ள எந்தச் சாதியும் இசையாது! சாதி உறுப்பினர்கள் சேர்க்கப்படுபவர்கள் அல்லர்; பிறப்பவர்களே! இதே நிலைதான் சைவத்திற்கும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் சைவர்களின் எண்ணிக்கை கூட முடியுமே தவிர, வேறு எந்த விதத்தாலும் கூட்ட முடியாது. சைவ மடங்களை எல்லாம் மூடி விட்டாலும் இந்த எண்ணிக்கை மாறப் போவதில்லை. தமிழனுக்குத் தனியான நிலம் உண்டு; தனியான மொழி உண்டு; தனியான பண்பாடு உண்டு. தனியான சமயங்கள் உண்டு; தனியான மெய்யியல் கொள்கைகளும் உண்டு. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரசாவர்க்கார் காலம் தொட்டுத் தமிழர்களெல்லாம் இந்துக்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். அப்படி ஒரு பொதுமை வழக்கு உருவாக்கப்பட்டு விட்டது. இந்துக்களின் மெய்யியல் நூலாகப் பகவத் கீதை ஆக்கப்பட்டது! தமிழனின் சமய அடையாள இழப்புக் குறித்து எந்தச் சைவ, வைணவ மடங்களாவது போராடியதுண்டா? எதற்கு ஆயிரம் வேலி நிலம்? எதற்குத் தங்கச் செங்கோல்? தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவைதாம். மூதாதையரைத் "தென்புலத்தார்' (43) என்பான் அறிவுப் பேராசான் வள்ளுவன்! தமிழனின் சமய நூல்கள் நாயன்மார்களின் திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களும், திருமுருகாற்றுப் படையும், உலகிலேயே மிகச் சிறிய நூலான பன்னிரண்டே சூத்திரங்கள் அடங்கிய சிவஞான போதமுமேதாம்; தமிழர்கள் எல்லாரும் ஒப்ப முடிந்த வேத நூல் சமயங் கடந்த திருக்குறளாகும்! ஒரு காலத்திலும் கீதை தமிழனின் மெய்யியல் நூலாக முடியாது என்று எந்த ஆதீனமாவது தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுண்டா? ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார்; அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றினார்! சமணம் ஒழிந்தது; சைவம் தழைத்தது; மெத்தச் சரி! திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப்பட்டபோது, எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கழைத்ததுண்டா? அப்படி நினைத்துப் பார்க்கவே உங்களால் முடியவில்லையே! தமிழரின் சமயங் குறித்தும் தமிழின் பெருமை குறித்தும் விழிப்பை உண்டாக்கியவர்களும் அதை இயக்கமாக்கியவர்களும் முதற் கட்டத்தில் மறைமலை அடிகளும், பிற்கட்டத்தில் தேவநேயப் பாவாணரும்தானே! கொழுத்த பணத்தில் புரள்கிற ஆதீனங்கள் இவர்களையாவது ஆதரித்துப் புரந்ததுண்டா? தமிழ்நாட்டை மராத்தியர்களும் நாயக்கர்களும் ஆண்டபோது, தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தித் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் நோக்கம் தெலுங்கரினின்றும், மராத்தியரினின்றும் தமிழ்ச் சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவதுதான்! அதனால்தான் தமிழர்க்கே உரிய முருகன் பாடுபொருளாக்கப்பட்டான்! பெளத்தமும், சமணமும் துறவுதான் பரிநிருவாணத்திற்குரிய வழி என்று வற்புறுத்தியபோது, தமிழ் இளைஞர்கள் இளந்துறவிகளானார்கள்! அப்போது ஞானசம்பந்தர் "எதற்கு இந்த வறண்ட வாழ்க்கை? நீங்கள் இங்கே வாருங்கள்; சிரமமில்லாமல் மண்ணில் பெண்ணோடு நல்ல வண்ணம் வாழலாம்; மேலும் எங்கள் சிவனே பெண்ணோடுதான் இருக்கிறார்' என்று கவர்ச்சியூட்டி ஞானசம்பந்தர் மாற்று மதத்தினரை இழுத்தார்! ""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது! சமயத் தலைவர்கள் ஆதீனங்களில்லை; அவர்கள் மடங்களின் மேலாளர்கள்! வள்ளலார் போன்றவர்களே சமுதாயத்தையே மாற்றி அமைக்க வந்தவர்கள்! வள்ளலார் ஒரு கட்டத்தில் சைவத்திற்கு மாற்று நிலை எடுத்தார். அது முக்கியமில்லை. ""பசிநீக்கம்; உயிரிரக்கம்'' இரண்டையுமே தலையாய கொள்கையாகக் கொண்டார்! பதவியால், பணத்தால், சாதியால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் நிலை போய், ""ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்'' என்றார் பசியை நீக்குவதற்கு அணையாத தீயை அடுப்பில் மூட்டிய வள்ளற்பெருமான்! இவ்வளவு சிறந்த வள்ளலாருக்கு சிவபெருமான் கனவில் வந்து எதுவும் சொல்லவில்லை. ""நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராச நிபுண மணி விளக்கே'' என்றுதான் பாடுகிறார்! மகாத்மா காந்தி "வாய்மைதான் கடவுள்' என்று உய்த்துணர்ந்து சொன்னதற்குக் காரணம் இறைவன் அவருக்கு நேரில் வராததுதான்! நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வருவது நல்லதுதான் என்றாலும், அவர் வந்ததை உயர் நீதிமன்றம் விசாரித்து அறியுமாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கறிஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்! மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம் என்று கிளம்பி விட்டார்கள். ரியல் எஸ்டேட் விலை ஏறி விட்டதுதான் காரணம்! பாண்டியர்கள் தாய் மீனாட்சிக்கு அளித்த சீதனம் அது! எல்லாம் அறிந்தவன் நீ; எல்லாம் வல்லவன் நீ சொக்கா! கடைசியில் உன் மடியிலேயே கை வைத்து விட்டார்கள்! ஆட்டத்தை நிறுத்து சொக்கா! உன் ஆட்டத்தை அல்ல; ஆடக் கூடாதவர்களின் ஆட்டத்தை! ""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது! (பழ. கருப்பையா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருக்கிறார்) நன்றி: தினமணி |
| ரஞ்சிதா என்னுடன் இல்லை: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா பதில் Posted: 09 May 2012 10:34 PM PDT 293-வது ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமிகள் கூறுகையில், நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை அழைத்து செல்வதாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நித்யானந்தா கூறியதாவது:- நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்து செல்வதாக கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து விளக்க தயாராக இருக்கிறேன். மதுரை ஆதீனமாக நான் பட்டம் சூடிய விசயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட யாரும் தலையிட வேண்டாம். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பபெற வேண்டும். இப்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ஆதரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியதாவது:- காஞ்சி சங்கராச்சாரியார் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர் கூறிய கருத்துக்கள் அவருக்கு தேவையில்லாத ஒன்று. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். அவரது கருத்துக்கள் சைவ சமயத்திற்கு நல்லதில்லை என்று எச்சரிக்கிறோம். 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை பட்டம் சூட்டியதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக எழுப்பப்படும் எந்த விமர்சனத்தையும் ஏற்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். |
| ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர் Posted: 09 May 2012 10:09 PM PDT ஆன்மீக விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன் என்று காஞ்சி ஜெயேந்திரர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி வந்த ஜெயேந்திரர் அங்குள்ள சங்கர மடத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக காசி, நேபாளம், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த விராத் நகர், பீகார் பூரி மடம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டேன். நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் குடும்பங்களில் கூட ஆன்மிகம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவருகிறது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம். இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும். ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மொட்டை போட்டால்தான் சாமியாராக லாயக்கு. அப்புறண், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும். ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன். தமிழக அரசு ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய ஆண்டான நந்தன வருடத்தில் பொதுமக்கள் சகல வசதிகளையும் பெற்று சந்தோஷமாக, ஆனந்தமாக இருப்பார்கள். நந்தனம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் ஆனந்தம் என்று பெயர். அதனால் பொதுமக்கள் நந்தன ஆண்டில் அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள் என்றார் ஜெயேந்திரர். சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஜெயேந்திரர். தற்போது இவர் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி Posted: 09 May 2012 10:04 PM PDT மேட்டூர் தொட்டில் பட்டியில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு 3 ஷிப்டுகளில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு ஷிப்டுக்கு அதிகாரிகள், ஊழியர்கள், உதவியாளர்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று அனல் மின்நிலையத்தில் 3 -வது ஷிப்டில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் பெல்ட் திடீரென தீ பிடித்தது. பின்னர் அது மளமளவென பரவி மில் பிளாண்ட் (நிலக்கிரி அரைக்கும் பகுதி) வரை எரிந்தது. திடீரென கண்வேயர் பெல்ட் எரிய தொடங்கியதால் அனல் மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது. அப்போது அங்கு வேலைப்பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை அறிந்து அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீ பங்கர் டாப் ( நிலக்கரி இருப்பு வைத்துள்ள அறை) வரை எரிந்தது. மேலும் நிலக்கரி கொண்டு செல்லும் கண்வேயர் மற்றும் அதற்குண்டான தளவாடங்கள் அனைத்தும் எரிந்து அப்படியே கீழே விழுந்தது. நிலக்கரியை எடுத்து செல்லும் கண்வேயர் பெல்ட் பூமியில் இருந்து சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தீ பிடித்ததும் அதில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. வெளியில் இருந்து பார்த்த போது அனல் மின்நிலையத்தில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனல் மின் நிலையம் முன்பு திரண்டனர். அதிகளவில் நிலக்கரி இருந்ததால் தீயின் தாக்கம், மற்றும் புகை மூட்டமும் அதிகரித்தது. அப்போது அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்த உதவியாளர் நல்லதம்பி (50) என்பவர் மூச்சு திணறி இறந்து விட்டார். மேலும் கோபால் என்பவர் தீ காயம் அடைந்தார். உடனடியாக அவரை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் உதவி பொறியாளர் அதியமான் என்பவரும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி எழிலரசு, உதவி அதிகாரி முருகேசன் தலைமையில் அனல் மின் நிலைய தீயணைப்பு துறையினர், மற்றும் மேட்டூர், பவானி, ஓமலூர், இடைப்பாடி, ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 9 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், டி.எஸ்.பி. கோபால், அனல் மின் நிலைய தலைமை பொறியாளர்கள் மாது, மனோகரன், மற்றும் கருமலைகூடல் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் |
| ராவணனே விடுதலையாகும் போது ராசா ஆகக் கூடாதா?... கருணாநிதி கேள்வி Posted: 09 May 2012 10:03 PM PDT ராவணனே ஜாமீனில் விடுதலையாகிறார். அப்படி இருக்கும் போது ராசா விடுதலையாகக் கூடாதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை ஜாமீன் கோராமல் இருந்து வந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா முதல் முறையாக ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். இதுகுறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், சட்டப்படி எல்லாம் நடக்கும். ராவணன் விடுதலை ஆகும் போது ராசா ஆகக் கூடாதா என்றார். கனிமொழி ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல ராசாவுக்கும் வரவேற்பு தரப்படுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, யோசிப்போம் என்றார் கருணாநிதி |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: முக்கியமான ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல் Posted: 09 May 2012 10:00 PM PDT 5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 74 லீக் ஆட்டங்களில் 54 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த ஒரு அணியும் இன்னும் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. ஆனால், புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள 7 அணிகள் இடையே தான் `பிளே ஆப்' இடத்திற்கு போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன். இதில் இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 11 புள்ளிகளுடன் பரிதாபமான நிலையில் உள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். குறைந்தது 3 ஆட்டங்களிலாவது வெற்றி பெறுவது முக்கியம். வாழ்வா-சாவா? மோதலான இதில் மைக் ஹஸ்ஸி களம் இறங்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்றபடி டோனி, பிராவோ, ஜடேஜா, ரெய்னா, முரளி விஜய் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்தால், ராஜஸ்தானுக்கு உதை கொடுக்கலாம். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த நம்பிக்கையுடன் ராஜஸ்தானை மீண்டும் சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளை பெற்று, பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. கடந்த இரு ஆட்டங்களில் பஞ்சாப், புனே அணிகளை வீழ்த்திய ராஜஸ்தான் அணி `ஹாட்ரிக்' வெற்றி வேட்கையுடன் தீவிரமாக உள்ளது. வாட்சன், ரகானே, டிராவிட், மெனேரியா, ஷா ஆகியோர் பேட்டிங்கிலும், டெய்ட், போத்தா, திரிவேதி ஆகியோர் பந்துவீச்சிலும் ராஜஸ்தானுக்கு வலு சேர்க்கிறார்கள். பலம் மிகுந்த அணியான ராஜஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் சாய்க்க சென்னை அணி தனது முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். முன்னதாக மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சங்கக்கரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தையும் பிடிக்கும் முனைப்புடன் காணப்படுகிறது. ஏற்கனவே டெக்கானை டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போய் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணி 9 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், ஆறுதல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஓரிரு இடங்களாவது முன்னேற அந்த அணி தீவிரமாக முயற்சிக்கும். |
| தாராளமா கேமரா கொடுங்க, வச்சுக்கிறேன்.. திருப்பனந்தாள் ஆதீனம் பதிலடி Posted: 09 May 2012 09:58 PM PDT தாராளமாக கேமரா கொடுக்கட்டும். எனது அறையில் வைத்துக் கொள்கிறேன் என்று நித்தியானந்தாவுக்கு திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமி சுவாமிகள் பதிலளித்துள்ளார். மதுரை ஆதீன மட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை ஆதீனங்களின் அறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தத் தயாரா. அப்படிச் செய்தால் எத்தனை பேர் மாட்டுவார்கள் தெரியுமா என்று சவால் விட்டிருந்தார். இதற்கு திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமார சுவாமிகள் பதிலளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் வைத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். வெளியிலே நடப்பதுதான் உள்ளே தெரிகிறதே தவிர, உள்ளே நடப்பது வெளியிலே தெரியும்படியாக வைத்துக்கொண்டால் அது வரவேற்கத்தக்கது. என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில் யார் வந்தாலும் எனக்கு நேராகவே தெரியும். எனக்கு எதிராக யாராவது விரோதமாக நடக்கிறார்கள் என்று சந்தேகம் இல்லை. எனவே எனக்கு அது தேவையில்லை. யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் தாராளமாக பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். |
| நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்? Posted: 09 May 2012 08:57 AM PDT அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன. விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது. விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த். இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா? ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்! |
| 'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி! Posted: 09 May 2012 08:44 AM PDT கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும். தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும். பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம். மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம். போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது! |
| அண்ணன் கொடுத்த கேட்ச்..கோட்டைவிட்ட இர்பான்-சகோதர பாசம் காரணமா? Posted: 09 May 2012 08:30 AM PDT ஐபிஎல் 5 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் யூசுப் பதான் கொடுத்த எளிய கேட்ச்சை, அவரது சகோதரரும் எதிரணியின் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான் கோட்டைவிட்டார். இதற்கு இரு வீரர்களிடையிலான சகோதர பாசம் காரணமா என்ற சர்ச்சை கிளம்பி உள்ளது. ஐபிஎல் 5 தொடரில் கடந்த 7ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் 154 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்த போது வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பேட்ஸ்மேன் யூசுப் பதான் மிட் ஆப் பகுதியில் கொடுத்த எளிய கேட்சை, அவரது சகோதரரும் எதிரணியின் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான் கோட்டைவிட்டார். இர்பான் பதான் தனது அண்ணன் மீதான அன்பினால் அந்த கேட்சை பிடிக்க தவறினார் என்ற சர்ச்சை எழுந்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 நாட்கள் ஓய்விற்கு பிறகு போட்டியில் பங்கேற்றதால் தோல்வியைத் தழுவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இர்பான் பதான் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது 6 நாட்கள் ஓய்விற்கு பிறகு போட்டிகளில் பங்கேற்றதால், தோல்வி அடைந்ததாக கருதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் போட்டிகள் இல்லாத நிலையிலும், நாங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டோம். அணியில் உள்ள வீரர்கள் பயிற்சியின் போது, கடுமையாக உழைத்துள்ளனர். எனவே ஓய்விற்கு பிறகு போட்டியில் பங்கேற்றதால், தோல்வி அடைந்ததாக கருதுவது தவறு. நான் சிறந்த கேட்ச் பிடித்ததற்கான கார்பன் கமால் கேட்ச் பாராட்டை பெற்றுள்ளேன். ஆனால் அதன்பிறகு 3 முறை கேட்ச் பிடிக்க தவறி உள்ளேன். யூசுப் பதான் கொடுத்த எளிய கேட்ச் பிடிக்க தவறியது குறித்து, டேவிட் வார்னரிடம் ஆலோசித்தேன். எனது சகோதரனின் கேட்ச்சைப் பிடிக்க தவறிய போதே, பலரின் குற்றச்சாட்டிற்கு ஆளாவேன் என்று நினைத்தேன். ஒரு அணி போட்டியில் தோல்வி அடையும் போது, பல சர்ச்சைகள் எழுவது வழக்கம் என்றார். |
| 100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த 178 படங்கள்! Posted: 09 May 2012 05:51 AM PDT 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்? இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்.. அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா... பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்! எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. |
| 2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா.. Posted: 09 May 2012 04:18 AM PDT 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர். இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மிச்சம் இருப்பது ராசா மட்டுமே. இந் நிலையில் பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ராசா. இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். ராசா சிறையில் ஓராண்டைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. |
| கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பாய்கிறார் சச்சின்! Posted: 09 May 2012 03:10 AM PDT கிரிக்கெட், அரசியலைத் தொடர்ந்து அடுத்து சினிமாவுக்குள்ளும் புகுகிறார் சச்சின் டெண்டுல்கர். விது வினோத் சோப்ராவின் பெராரி கி சவாரி என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் சச்சின் வரப் போகிறாராம். 22 வருடங்களாக விடாப்பிடியாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் சமீபத்தில்தான் அரசியலுக்குள்ளும் தனது வலது மற்றும் இடது காலை எடுத்து வைத்தார். ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் அடுத்து சினிமாவுக்கும் வரப் போகிறார். விதுவினோத் சோப்ரா இயக்கும் புதிய படம் பெராரி கி சவாரி. இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில், சிறப்புத் தோற்றத்தில் சச்சின் வருகிறாராம். இந்தக் காட்சியில் தோன்றுவதற்கு சம்மதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது பெயரையும் பட விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளாராம் சச்சின். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம் சச்சின். சச்சின் செய்யப் போகும் கேரக்டர் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோப்ராவிடம் கேட்டால், சச்சினும் இப்படத்தில் பங்கேற்பது சந்தோஷமாக இருக்கிறது. தனது பெயரையும் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதித்துள்ளார். அவரது ரோல் என்ன என்பது படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இப்போது சொல்ல முடியாது என்றார். ஷர்மான் ஜோஷி நடித்துள்ள இப்படம் ஜூன் 15ம்தேதி திரைக்கு வருகிறதாம். ஒரு குழந்தையின் கிரிக்கெட் கனவை சித்தரிக்கும் படமாம் இது. அதேசமயம் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தையும் படத்தில் வைத்திருக்கிறாராம் சோப்ரா. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















































