Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மோடி அரசு 'மக்கள் நல அரசாக செயல்படாவிட்டால் தாக்குவோம்' மம்தா பானர்ஜி

Posted: 30 May 2014 08:29 AM PDT

கொல்கத்தா,

மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நல அரசாக செயல்படாவிட்டால் தாக்குவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார்.

வார்த்தை யுத்தம்

பாராளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான வார்த்தை யுத்தங்களை நடத்தியவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி. தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு வங்காளத்தைப் பொருத்தமட்டில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.

மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. விழாவில் அவர் கலந்து கொள்ளாவிட்டாலும், தனது சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் ராயையும், மாநில நிதி மந்திரி அமித் மித்ராவையும் அனுப்பி வைத்தார்.

ஆக்கப்பூர்வமானவர்கள்

இந்த நிலையில், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி, தனது கட்சித்தலைவர்கள், எம்.பி.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மூடிய அரங்கத்தில் இந்த ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'நாம் எப்போதுமே ஆக்கப்பூர்வமானவர்கள். எதிர்மறையானவர்கள் அல்ல. (மோடி அரசில்) மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாம் தாக்குவோம். அதே நேரத்தில் மத்திய அரசு மக்களுக்கு நன்மைகள் செய்தால், நாம் பொறுத்திருந்து பார்த்து விவாதிப்போம். நாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போல் அல்ல' என கூறியதாக கட்சி முன்னணியினர் தெரிவித்தனர்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதற்கு காங்கிரஸ்தான் காரணம் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசுகையில், 'நாம் மத்திய அரசில் இருந்து விலகிய பின்னர், காங்கிரஸ் கட்சியின் கெட்ட காலம் தொடங்கி விட்டது. அவர்கள் கூட்டணி கட்சிகள் யாரையும் நம்பவில்லை. நமது எதிர்ப்புக்கு மத்தியிலும் நேரடி அன்னிய முதலீடு, சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்தது, பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியது, உர விலையை உயர்த்தியது மக்கள் விரோத நடவடிக்கைகளாக அமைந்தது' என கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

category:

News Group Category:

உரிமையாளரின் முதுகில் சவாரி செய்யும் ஆடு

Posted: 30 May 2014 08:19 AM PDT

எத்தியோப்பியா,
 
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் மக்கள் நடமாட்ட அதிகமுள்ள ஒரு சாலையில் திடீரென்று கைக்கிளில் வெள்ளாட்டுடன் வந்த மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்புக்கு காரணம் அந்த ஆடு சைக்கிள் ஓட்டுபவரின் முதுகில் குழந்தை போன்று கட்டிப்பிடித்து கொண்டிருந்தது தான் காரணம். இக்காட்சி வீடியோவில் எடுக்கப்பட்டு கடந்த மே 28ம் தேதி யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.  இதனை இதுவரை சுமார் 140000 பேர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இக்காட்சியை வீடியோவில் பார்த்த சிலர் ஆட்டின் காலை கட்டி முதுகில் தொங்கவிட்டு கொண்டு சென்றதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
 
image: 

category:

News Group Category:

2–வது தகுதி சுற்று ஆட்டம்: டாஸ் வென்ற சென்னை பீல்டிங் தேர்வு; பஞ்சாப் 19/0 (3/20)

Posted: 30 May 2014 07:53 AM PDT

மும்பை,

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இறுதிப்போட்டிக்குள் நுழையும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2–வது தகுதி சுற்று ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. பஞ்சாப் 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. வோக்ரா 8 ரன்னுடனும், சேவாக் 10 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
 

category:

News Group Category:

அரியலூர் அருகே பஸ்–லாரி மோதி பயங்கர விபத்து; 6 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாப பலி 32 பேர் படுகாயம்

Posted: 30 May 2014 07:42 AM PDT

அரியலூர்,

அரியலூர் அருகே பஸ்சுடன் லாரி மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்–லாரி மோதல்

அரியலூரில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சேட் (வயது 30) ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஓட்டக்கோவிலுக்கும், பொய்யாதநல்லூருக்கும் இடையே 3.30 மணி அளவில் பஸ் சென்ற போது எதிரே செந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி அதிவேகத்துடன் லாரி வந்தது.

இதனால் பயந்து போன பஸ் டிரைவர் சேட் பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதையடுத்து பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியுடன் டமார் என மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் வலது பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சில் வந்த பயணிகள் உயிர் பயத்தில் கூக்குரலிட்டனர்.

மீட்பு பணி

இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ், சிமெண்ட் ஆலை ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அங்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்களும் உதவி செய்தனர்.

இந்த விபத்தில் பொய்யாதநல்லூரை சேர்ந்த பச்சையப்பன் மனைவி அலமேலு (45), உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு மனைவி ஆனந்தி (30), நாகல்குழியை சேர்ந்த சுரேஷ் (25), சரவணன் மனைவி ஜெயந்தி (37), செதலவாடியை சேர்ந்த தனவேல் (65), ஆதிகுடிகாடை சேர்ந்த செல்லமுத்து, வீராக்கன் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் மனைவி கவிதா (24) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 34 பேர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

9 பேர் பலி

இதில் ஆர்.எஸ்.மாத்தூரை சேர்ந்த தங்கவேலு மனைவி ஜெயலட்சுமி (25), பிரபாதர்ஷினி (6) ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து காயமடைந்த 32 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Group Category:

ராகுலை 'கோமாளி' என்று கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை டி.எச்.முஸ்தபா

Posted: 30 May 2014 07:36 AM PDT

திருவனந்தபுரம்,

ராகுல் காந்தியை பற்றி ஏற்கனவே தான் கூறிய கருத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட டி.எச்.முஸ்தபா கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டது. ஒட்டுமொத்த தோல்விக்கு மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியும், ஊழல் பிரச்சினைகளும், விலைவாசி உயர்வும்தான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து மூத்த உறுப்பினர் டி.எச்.முஸ்தபா சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தி கோமாளி என்று கூறி இருந்தார்.
முஸ்தபாவின் இந்த பேச்சு குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய முஸ்தபாவை தற்காலிக நீக்கம் செய்ய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து டி.எச்.முஸ்தபா நிருபர்களிடம் கூறியதாவது;-

ஏற்கனவே நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சரியான முடிவை எடுக்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஏகாதிபத்திய சிந்தனைக்கு காங்கிரசில் இடமில்லை.  பாரதீய ஜனதா கட்சி சார்பில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், காங்கிரசில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மூத்த உறுப்பினர் என்ற முறையில் கருத்துகளை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்குமேயானால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்து நான் கூறிய கருத்தில் மாற்றமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
 

category:

News Group Category:

கார் தடுப்புசுவரில் மோதி கார் பந்தய வீரர்கள் உள்பட 4 பேர் பலி

Posted: 30 May 2014 07:26 AM PDT

கோவை,

கார் பந்தய பயிற்சியில் பங்கேற்க சென்றபோது கார் தடுப்புசுவரில் மோதி கார் பந்தய வீரர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கார் பந்தய பயிற்சி

கோவையை அடுத்த செட்டிப்பாளையத்தில் 'கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே' என்ற சர்வதேச கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு சர்வதேச, தேசிய அளவிலான கார் பந்தயங்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதவிர கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கார் பந்தய வீரர்கள் இந்த மைதானத்தில் பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

இந்த மைதானத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் மாநில அளவிலான கார் பந்தய போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான கார் பந்தய வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். பந்தயத்தை முன்னிட்டு காலை பயிற்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

3 பந்தய வீரர்கள்

இதனால் போட்டியில் பங்கேற்பவர்கள் காலை 8 மணிக்குள் மைதானத்துக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த கார் பந்தய வீரர்கள் மைதானத்துக்கு கார்களில் விரைந்தனர். கார் பந்தய வீரர்களான கோவை சிட்கோவை சேர்ந்த பிரதீப் (வயது 21), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சனத்குமார் (21), திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தீபக் (21) ஆகியோரும் பயிற்சிக்காக புறப்பட்டனர்.

3 பேரும், கார் மெக்கானிக் சாமிநாதன் (36), அவருடைய உதவியாளர் சரவணன் (22) ஆகியோருடன் ஒரு சொகுசு காரில் கோவை குனியமுத்தூரில் இருந்து மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பிரதீப் காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.

4 பேர் பலி

அந்த கார் போத்தனூர்-செட்டிபாளையம் ரோட்டில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே உள்ள வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோடு ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இதில் தீபக் தவிர மற்ற 4 பேரும், சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த தீபக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பொறியியல் மாணவர்கள்

அவர்கள் தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரதீப், சனத்குமார், மெக்கானிக் சாமிநாதன், சரவணன் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான பிரதீப், சனத்குமார், படுகாயம் அடைந்த தீபக் ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4&ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தனர். அவர்கள் கார் பந்தயத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

மீனாட்சிபுரத்தில் ஆதிவாசி சிறுமி கற்பழித்து கொலை; காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது

Posted: 30 May 2014 07:20 AM PDT

பாலக்காடு,

தமிழக - கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில் ஆதிவாசி சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள்.இதையட்டி காங்கிரஸ் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆதிவாசி சிறுமி

தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் மணக்கடவு கிராமம் அருகே உள்ளது முத்துசாமி புதூர்.இது பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த ஊரை சேர்ந்தவர் செல்வராஜ். ஆதிவாசியான இவரது மகள் மணிமேகலை (வயது 11). செல்வராஜ் அந்த பகுதியில் உள்ள செந்தில்வேல் (வயது 48) என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். செந்தில்வேல், கேரள மாநிலம் மூலத்தரா வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் செந்தில்வேல், செல்வராஜின் மகள் மணிமேகலையை தன் வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு உள்ளார். மணிமேகலையும் 4 ம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் வீட்டில் இருந்து வந்தாள். இதனால் செல்வராஜ் அவளை செந்தில்வேல்  வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

மர்மசாவு

இந்தநிலையில் கடந்த 18ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல தயாரான செல்வராஜை அழைத்த செந்தில்வேல், மணிமேகலை விஷம் குடித்து மயங்கி கிடப்பதாகவும், அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு மணிமேகலை மயங்கிய நிலையில் கிடந்தாள். பதறி துடித்த செல்வராஜ் அவளை மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் இருப்பதையும், கழுத்து நெரிக்கப்பட்டு உள்ளதையும் பார்த்து சந்தேகம் அடைந்த டாக்டர்கள் சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக சித்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கைது

அதன்பேரில் சித்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம், சிறுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளாள் என்று தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை என்றும், கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தோட்ட உரிமையாளர் செந்தில்வேலின் நடவடிக்கைகளில் ஆரம்பம் முதலே சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் ஏதேதோ சொல்லி சமாளித்து வந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் சிறுமி மணிமேகலையை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் செந்தில்வேலை கைது செய்தனர்.

கடையடைப்பு

இந்த தகவல் காட்டுத்தீ போல தமிழக-கேரள எல்லையோர பகுதிகளில் பரவியது. எல்லைக்கோடு என்ற இடத்தில் கடந்த மாதம் ஆதிவாசி பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதே போல் தற்போது இந்த சிறுமியும் கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் ஆதிவாசி மக்கள் கொந்தளிப்படைந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனை அடுத்து மீனாட்சிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. கேரள பகுதியையட்டிய தமிழக பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

போலீசார் குவிப்பு

இதுகுறித்து மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் கூறும்போது, கைது செய்யப்பட்ட செந்தில்வேல்  மூலத்தரா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். எனவே அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து தப்பிக்க கூடும் என்ற அச்சம் உள்ளது.இதனால் அவர்மீது கடும் நடவடிக்கை தேவை என்பதை  வலியுறுத்தியே கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமி மணிமேகலைக்கு மாலை அந்த பகுதியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில்  செந்தில்வேலை போலீசார் நேற்று சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 13&ந்தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

category:

News Group Category:

ஆப்கானில் தாக்கப்பட்ட இந்திய துணை தூதரகத்தை மத்திய வெளியுறவு செயலாளர் பார்வையிட்டார்

Posted: 30 May 2014 07:08 AM PDT

ஹெராத்,

ஆப்கானிஸ்தானில், ஹெராத் நகரில் இந்திய துணை தூதரகம் கடந்த 23–ந்தேதி தாக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட தூதரகத்தை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இன்று பார்வையிட்டார். அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்தார். ஹெராத் சென்ற சுஜாதா சிங், கவர்னர் செயத் பாசுல்லாக், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் அமர் சிங்கா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்த இந்தோ-திபெத்தியன் காவல்படை வீர்களையும் சந்தித்து பேசினார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

category:

News Group Category:

லாஸ் ஏஞ்சல்ஸ் கூடைப்பந்து அணியை வாங்கினார் முன்னாள் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

Posted: 30 May 2014 06:40 AM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்,
 
நம் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பது போன்று அமெரிக்காவில் அங்கு புகழ்பெற்ற விளையாட்டான கூடைப்பந்து அணியை பிரபலங்கள் விலைக்கு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற மைக்ராசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓவான ஸ்டீவ் பால்மர் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை 2 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங"கியுள்ளார். இது அந்த அணி தரப்பினரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.    

category:

News Group Category:

அரசியல் சாசனப்பிரிவு 370 விவகாரத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம்: ராவ் இந்தர்ஜித்

Posted: 30 May 2014 06:37 AM PDT

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப்பிரிவு 370 பற்றிய சர்ச்சைக்குரிய பிரச்சனையை ஊதி பெரிதாக்க வேண்டாம் என மத்திய மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் இன்று தெரிவித்தார்.

இதுகுறித்து, புதிதாக தனிப்பொறுப்பு கொண்ட பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ராவ் இந்தர்ஜித் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியதாவது:-

புதிய அரசு முழுமையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன்னால் சர்ச்சைக்குரிய அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ஊதி பெரிதாக்குவது தேவையில்லாதது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை எதுவும் பாழ்படுத்தி விட முடியாது. ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். புதிய அரசு வழக்கமான அலுவலக பணிகளை முழுமையாக பொறுப்பெடுத்துக் கொள்ளும் முன்பே இவ்வாறு பிரச்சனைகளை எழுப்புவது தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™