Daily Thanthi |
- இன்று முதல், இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை–கொல்கத்தா அணிகள் ராஞ்சியில் மோதல்
- சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெயிலில் குண்டுகள் வெடித்தன; பெண் பலி 14 பேர் படுகாயம்
- ‘லட்சுமணின் ஆலோசனை சாதிக்க உதவியது’ –இர்பான் பதான்
- டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது, ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டியில் இந்தியா முதலிடம்
- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் கூச் நீக்கம்
- பந்து வீச்சில் தாமதம்: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்ஷர்மாவுக்கு அபராதம்
- தந்தையானார், கம்பீர்
- ‘எங்கள் அணியில் எல்லோரும் கதாநாயகர்கள் தான்’ ராஜஸ்தான் வீரர் பாட்டியா சொல்கிறார்
- போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் சானியா ஜோடி
- மருத்துவ கல்லூரிக்கான விளையாட்டு: கால்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி
| இன்று முதல், இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை–கொல்கத்தா அணிகள் ராஞ்சியில் மோதல் Posted: 01 May 2014 01:07 PM PDT ராஞ்சி 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டத்தில் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும். இதன் படி ராஞ்சியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை–கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மறுபடியும் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் வந்ததால் பாதுகாப்பு தர இயலாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 7–வது ஐ.பி.எல். தொடரில் முதற்கட்டமாக 20 லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் ஏப்ரல் 16–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் வாகை சூடி மூக்கின் மீது விரலை வைக்க வைத்தது. அதே சமயம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 5 ஆட்டங்களிலும் தோற்று பரிதாபப் பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டிகள் நிறைவடைந்து, இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா இந்தியாவில் அரங்கேறப்போகிறது. முதல் இரு வாரம் தேர்தல் முடிவடைந்த மாநிலங்களில் மட்டும் ஆட்டங்கள் நடக்கும். ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு வழக்கம் போல் அனைத்து நகரங்களிலும் நடைபெறும். ஐ.பி.எல். போட்டி இந்தியாவுக்கு திரும்பியிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வியூகங்களை வேறு விதமாக அமைத்துக் கொள்வார்கள். சாதகமான அம்சங்கள் உள்ள சொந்த ஊரில் முழு பலத்தை காட்ட முயற்சிப்பார்கள். அது மட்டுமின்றி, இனிமேல் தான் ரசிகர்களிடம் இருந்தும் உண்மையான ஆரவாரத்தை காண முடியும். சென்னை–கொல்கத்தா இந்திய மண்ணில் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் டோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 205 ரன்கள் குவித்தும் தோற்ற சென்னை அணி அதனால் துவண்டு போய் விடவில்லை. அதன் பிறகு டெல்லி, ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத் அணிகளை வரிசையாக வீழ்த்தி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2–வது இடம் வகிக்கிறது. சென்னை அணியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரன்டன் மெக்கல்லமும், வெய்ன் சுமித்தும் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். சுமித் இதுவரை 3 அரைசதம் 15 சிக்சருடன் 240 ரன்களும், பிரன்டன் மெக்கல்லம் 2 அரைசதத்துடன் 193 ரன்களும் குவித்துள்ளனர். இவர்களின் அதிரடியை பொறுத்தே சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே போல் மொகித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே, ஹில்பனாஸ், அஸ்வின் ஆகியோரும் பந்து வீச்சில் கலக்கி வருகிறார்கள். இதே கூட்டுமுயற்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், வெற்றிப்பயணத்தை சிரமமின்றி தொடர முடியும். நரின் மீது... கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (மும்பை, பெங்களூருக்கு எதிராக), 3 தோல்விகளுடன் (டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானுக்கு எதிராக) 4–வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் 3 முறை டக்–அவுட் ஆன கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர், ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்ததன் மூலம் அவருக்கு நம்பிக்கை வந்திருக்கும். மற்றபடி காலிஸ், உத்தப்பா, பாண்டே சூர்யகுமார் யாதவ், ஷகிப் அல்–ஹசன் என்று திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் வினய்குமார், மோர்னே மோர்கல், சுனில் நரின் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். குறிப்பாக மாயாஜால சுழல் வித்தகர் சுனில் நரின் தான் அவர்களின் துருப்பு சீட்டு. சிக்கனமாக பந்து வீசுவதில் கெட்டிக்காரரான நரின் 5 ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், ஓவருக்கு சராசரியாக 5.35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். மறுபடியும் வெற்றிப்பயணத்திற்கு திரும்பும் உத்வேகத்துடன் கொல்கத்தா அணி தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8–ல் சென்னையும், 4–ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இந்த சீசனில் இந்தியாவில் நடக்கும் முதல் ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் விவரம் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:– சென்னை: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், டோனி (கேப்டன்), மிதுன் மன்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஹில்பனாஸ், மொகித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே. கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), மன்விந்தர் பிஸ்லா அல்லது யூசுப் பதான், காலிஸ், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஷகிப் அல்–ஹசன், ராபின் உத்தப்பா, வினய்குமார், பியுஷ் சாவ்லா, சுனில் நரின், மோர்னே மோர்கல். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. image: category: |
| சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெயிலில் குண்டுகள் வெடித்தன; பெண் பலி 14 பேர் படுகாயம் Posted: 01 May 2014 01:06 PM PDT சென்னை, தினமும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்திக்கு சென்னை வழியாக வாரம் 3 முறை (புதன், வியாழன், வெள்ளி) கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12509) இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து வழக்கமாக சென்னை சென்டிரலுக்கு காலை 5.40 மணிக்கு வரும் இந்த ரெயில், மீண்டும் 6.20 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட்டு செல்லும். பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில், 1லு மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.05 மணிக்கு புறப்பட்டது. சுமார் 6 மணி நேர பயணத்திற்கு பிறகு, நேற்று காலை 7.05 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள 9-வது பிளாட்பாரத்தை அந்த ரெயில் வந்தடைந்தது. ரெயிலில் குண்டுகள் வெடித்தன ரெயில் நின்றதும் சென்னையை சேர்ந்த பயணிகள் இறங்கியபடி இருந்தனர். மற்ற பயணிகள் டீ, காபி குடித்தபடி யும், பிளாட்பாரத்தில் நின்று பேசிக்கொண்டும் இருந்தனர். அப்போது, திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் காலை 7.20 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட எஸ்-4 முன்பதிவு பெட்டியில் 'டமார்' என்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித் தது. அடுத்த சில வினாடிகளில் அருகில் இருந்தஎஸ்-5 பெட்டியில் மற்றொரு குண்டு வெடித்தது. எஸ்-4 பெட்டியில் வெடித்த குண்டு அதில் உள்ள 70-வது இருக்கைக்கு அடியிலும், எஸ்-5 பெட்டியில் 30-வது இருக்கைக்கு அடியிலும் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. குண்டு வெடித்த அதிர்ச்சியில் அந்த பகுதி சிதைந்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் சென்டிரல் ரெயில் நிலையமே அதிர்ந்தது. குண்டு வெடித்த பெட்டிகளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடிவந்தனர். மற்ற பெட்டிகளில் இருந்தும் பயணிகள் ஓட்டம் பிடித்தனர். பிளாட்பாரத்தில் இருந்தவர்களும் உயிர் பிழைக்க ஓடினார்கள். மற்ற பிளாட்பாரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாக தெரியாமல் பதற்றம் அடைந்தனர். இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், சென்னை மாநகர போலீசாரும் குண்டு வெடித்த பிளாட்பாரத்தில் குவிக்கப்பட்டனர். ரெயில்வே அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அதே இடத்தில் பலியானார். ரத்த சேற்றில் கிடந்த அவரது உடலை டிராலி வண்டியில் வைத்து அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். மேலும், காயம் அடைந்த 14 பேரை ஆம்புலன்ஸ் வேன் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், குண்டு வெடிப்பில் பலியான இளம்பெண் யார்? என்று உடனடியாக அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் சுவாதி (வயது 24). ஆந்திர மாநிலம் குண்டக்கல் அவரது சொந்த ஊர் ஆகும். திருமணம் ஆகாத இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பெங்களூரில் இருந்து சுவாதி தனது சொந்த ஊருக்கு ரெயிலில் சென்ற போது தான் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகிவிட்டார்.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 14 பேர் பெயர் மற்றும் ஊர் விவரம் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1. மேற்கு வங்காளத்தை சேர்ந்த கிருஷ்ணா (28), 2. தினல்குமார் தாஸ் (43), 3. சரந்திரே வர்மா (31) 4. சகுன்குமார் ராய் (23), 5. ஆந்திராவை சேர்ந்த ஆஞ்சநேயலு(29), 6. முரளி லோக்நாத், 7. வடக்கு திரிபுராவை சேர்ந்த சதன் சந்திர தேட்நாத் (64), 8. சமந்தோ தேட்நாத்(37), 9. மணிப்பூரை சேர்ந்த பிஜன்குமார்(14), 10. அல்தாப் கான், 11. ஜிஜேந்திர முகந்தோ தேகா(51), 12. அசாமை சேர்ந்த உமா உமரி ஹனி (45), 13. பெங்களூரை சேர்ந்த சாரி (21), 14.கொத்வாலி பகுதியை சேர்ந்த ஷபிபுல் அகு(27). காயம் அடைந்தவர்களில் கிருஷ்ணாவுக்கு தொண்டையிலும், சுமந்தோ தேட்நாத்துக்கு காலிலும் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதிகாரிகள்பார்வையிட்டனர் குண்டு வெடிப்பு நடந்த அடுத்த அரைமணி நேரத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஷ்ரா, சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, துணை மேலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டனர். டி.ஜி.பி.ராமானுஜமும் சென்டிரல் ரெயில் நிலையம் வந்து குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சென்னை நகர கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், சண்முகவேல், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால், டி.ஐ.ஜி. பாஸ்கரன், சூப்பிரண்டு கயல்விழி, ரெயில்வே துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோரும் குண்டு வெடிப்பு நடந்த ரெயில் பெட்டிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தின் துணை மேலாளர் பாலசுப்பிரமணி, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். கொலை(இ.பி.கோ.302), கொலை முயற்சி(இ.பி.கோ. 307), சிறு மற்றும் கொடுங்காயங்களை ஏற்படுத்துதல்(இ.பி.கோ.325,326), வெடிகுண்டு தடுப்பு சட்ட பிரிவுகள் 3, 4, 5 மற்றும் ரெயில்வே சட்டப்பிரிவு 151 (ரெயில்வே சொத்துகளை நாசப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டி.ஜி.பி. ராமானுஜம் பேட்டி சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்பு டி.ஜி.பி. ராமானுஜம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரெயில் பெட்டிகளில் சாதாரண ரக குண்டுகள் தான் வெடித்து உள்ளன. இதனால் தான் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படவில்லை. சென்னை நகரை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், சொல்லமுடியாது. இந்த சம்பவம் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஜி.பி.ராமானுஜம் தெரிவித்தார். தீவிர நடவடிக்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஷ்ரா நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். விபத்தில் இறந்த இளம்பெண் சுவாதி என்பவரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த 2 பயணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இனி இதுபோல விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறுகையில், ''இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. குண்டு வைத்த சதிகாரர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது'' என்று தெரிவித்தார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ‘லட்சுமணின் ஆலோசனை சாதிக்க உதவியது’ –இர்பான் பதான் Posted: 01 May 2014 01:05 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியால் 7 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது. ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்–ரவுண்டருமான இர்பான் பதான் 2 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் அச்சுறுத்திக் கொண்டிருந்த மும்பை அதிரடி ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட்டை(6 சிக்சருடன் 78 ரன்) கிளீன் போல்டாக்கியதும் அடங்கும். பின்னர் இர்பான் பதான் கூறுகையில், 'இன்றைய ஆட்டத்திற்கு முன்பாக எங்கள் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ்.லட்சுமணிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'களத்திற்கு வெளியே நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல. 22 யார்டுக்குள் (இரு முனை ஸ்டம்புக்கு இடையே உள்ள தூரம்) நீ வெளிப்படுத்துகிற ஆக்ரோஷம் மற்றும் தாக்கம் தான் கணக்கில் கொள்ளப்படும்' என்று அறிவுரை வழங்கினார். அது எனக்குள் பசையாக ஒட்டிக் கொண்டது. அதுதான் நான் மீண்டும் சாதிக்க உதவியது. அவரது வார்த்தை எப்போதும் எனக்கு உதவிகரமாக இருக்கும்' என்றார். மேலும் இர்பான் பதான் கூறும் போது, 'இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு அடுத்து வரும் போட்டிகளிலும் இன்னும் சிறப்பாக செயல்பட உந்து சக்தியை கொடுக்கும். காயத்தில் இருந்து மீண்டு வந்து உடனடியாக சாதிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இது போன்ற பந்து வீச்சை வெளிப்படுத்தும் போது, பழைய நிலைக்கு வேகமாக திரும்பி விடலாம்' என்றும் குறிப்பிட்டார். 5–வது தோல்வியை சந்தித்த மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா கூறுகையில், 'தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கத்தில் அவர்களின் சில விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினோம். ஆனால் மிடில் ஓவர்களில் தடுமாறி விட்டோம். இப்போதில் இருந்து நாங்கள் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இனி நாங்கள் எங்களது சொந்த ஊர் சூழலில் விளையாடப்போகிறோம். உள்ளூரில் என்ன செய்யப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என்றார். image: category:Tagging: |
| Posted: 01 May 2014 12:59 PM PDT துபாய் டெஸ்ட் கிரிக்கெட் வரிசையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆஸ்திரேலியா முதலிடம் ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் முடிந்ததும் அணிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இது தவிர ஒவ்வொரு ஆண்டும், பழைய ஆண்டின் முடிவுகளை கழற்றி விட்டு, புதிய சீசனில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற ஒட்டுமொத்த ஆட்டங்களின் அடிப்படையில் அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதுப்பிப்பது உண்டு. இதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர தர வரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் டெஸ்ட் அணிகளின் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி (123 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன் பிறகு எந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டாலும் தசமபுள்ளி வித்தியாசத்தில் அதாவது மயிரிழையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை எட்டி இருக்கிறது. ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை அடைந்து இருக்கிறது. கடைசியாக அந்த அணி 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முதலிடத்தை அலங்கரித்து இருந்தது. இந்தியாவுக்கு 5-வது இடம் தென் ஆப்பிரிக்க அணி (123 புள்ளிகள்) ஒரு இடம் இறங்கி 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியா (102 புள்ளிகள்) இரண்டு இடங்கள் சரிந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஒருநாள் போட்டி தர வரிசையிலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தர வரிசையில் அந்த அணி முதலிடத்தை பிடிப்பது 2008-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 'டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் அணியாக இருப்பது பெருமிதம் அளிக்கிறது. இது தான் எங்களது முக்கியமான இலக்காக இருந்தது' என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். சாம்பியனுக்கு சறுக்கல் 20 ஓவர் போட்டிக்கான சர்வதேச அணிகளின் தர வரிசையில் இந்திய அணி (131 புள்ளிகள்), சமீபத்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கையை (130 புள்ளிகள்) ஓரங்கட்டிவிட்டு மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணிகளின் தர வரிசைப்பட்டியல் வருமாறு:- டெஸ்ட் தர வரிசை: 1. ஆஸ்திரேலியா (123 புள்ளி) 2. தென் ஆப்பிரிக்கா (123) 3. இங்கிலாந்து (104) 4. பாகிஸ்தான் (103) 5. இந்தியா (102) 6. நியூசிலாந்து (92) 7. இலங்கை (90) 8. வெஸ்ட் இண்டீஸ் (76) 9. ஜிம்பாப்வே (40) 10. வங்காளதேசம் (21) ஒருநாள் போட்டி தர வரிசை: 1. ஆஸ்திரேலியா (115 புள்ளி) 2. இந்தியா (112) 3. இலங்கை (111) 4. இங்கிலாந்து (110) 5. தென் ஆப்பிரிக்கா (109) 6. பாகிஸ்தான் (100) 7. நியூசிலாந்து (98) 8. வெஸ்ட் இண்டீஸ் (94) 9. வங்காளதேசம் (73) 10. ஜிம்பாப்வே (61) 20 ஓவர் அணிகளின் தர வரிசை: 1. இந்தியா (131 புள்ளி) 2. இலங்கை (130) 3. பாகிஸ்தான் (123) 4. தென் ஆப்பிரிக்கா (121) 5. ஆஸ்திரேலியா (112) 6. நியூசிலாந்து (110) 7. வெஸ்ட் இண்டீஸ் (110) 8. இங்கிலாந்து (97) 9. அயர்லாந்து (87) 10. வங்காளதேசம் (72) image: category: |
| இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் கூச் நீக்கம் Posted: 01 May 2014 12:56 PM PDT லண்டன் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஆன்டி பிளவர் மாற்றப்பட்டு புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர் மூர்ஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிரகாம் கூச் அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging: |
| பந்து வீச்சில் தாமதம்: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்ஷர்மாவுக்கு அபராதம் Posted: 01 May 2014 12:55 PM PDT துபாய், ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ரோகித்ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டி தொடரில் மும்பை அணி தொடர்ந்து சந்தித்த 5–வது தோல்வி இதுவாகும். இந்த ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இது குறித்து விசாரணை நடத்திய போட்டி அமைப்பு குழு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது. நேற்று முன்தினம் 27–வது பிறந்த நாள் கண்ட ரோகித்ஷர்மாவுக்கு பிறந்த நாள் பரிசாக அபராதமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| Posted: 01 May 2014 12:52 PM PDT கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தந்தையாகியிருக்கிறார். அவரது மனைவி நடாஷாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. கம்பீர்–நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். இந்த தகவலை கொல்கத்தா அணி நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. image: category:Tagging: |
| ‘எங்கள் அணியில் எல்லோரும் கதாநாயகர்கள் தான்’ ராஜஸ்தான் வீரர் பாட்டியா சொல்கிறார் Posted: 01 May 2014 12:51 PM PDT புதுடெல்லி ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்–ரவுண்டர் 34 வயதான ரஜத் பாட்டியா அளித்த ஒரு பேட்டியில், 'ஆக்ரோஷமான அணுகுமுறையை விட நேர்த்தியான கிரிக்கெட்டை விளையாடுவதே சிறந்தது என்பது எங்களிடம் உள்ள நம்பிக்கை. இந்த அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் அணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.' என்றார். அவரிடம் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இரண்டு முறை 'டை' ஆன போதிலும் அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் வெற்றி பெற்றது குறித்து கேட்ட போது, 'சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் 3 ரன்னுக்கு பதிலாக 2 ரன் எடுத்து சமன் (டை) செய்தாலே பவுண்டரி அடிப்படையில் வெற்றி கிடைத்து விடும் என்பதை முன்கூட்டியே எங்கள் வீரர்கள் அனைவருக்கும் தெரியும். இதே போல் களத்தில் நின்ற எங்கள் கேப்டன் ஷேன் வாட்சனும் இதை அறிந்திருந்தார். ஆனால் இது பற்றி கொல்கத்தா வீரர்களுக்கு தெரியுமா? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியாது' என்றார். category: |
| போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் சானியா ஜோடி Posted: 01 May 2014 12:50 PM PDT ஓய்ராஸ், போர்ச்சுகல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஓய்ராஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா–ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்டில் சில்வியா சோலர்–எஸ்பினோசா (ஸ்பெயின்)– சூய் ஜாங் (சீனா) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி 10 நிமிடங்கள் நடந்தது. image: category:Tagging: |
| மருத்துவ கல்லூரிக்கான விளையாட்டு: கால்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி Posted: 01 May 2014 12:49 PM PDT சென்னை, 'தினத்தந்தி' ஆதரவுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி சார்பில் 'ஸ்டான்லியா' என்ற பெயரில் மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ராயபுரத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்திலும் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. போட்டியின் 3–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான கைப்பந்து ஆட்டம் ஒன்றில் மதுரை அணி 25–4, 25–7 என்ற நேர் செட்டில் தூத்துக்குடியை வென்றது. கால்பந்து விளையாட்டில் ஆண்கள் பிரிவில் முத்துகுமரன் அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் 5–3 என்ற கணக்கில் திருவண்ணாமலை அணியை தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் திருச்சியை சேர்ந்த சென்னை மருத்துவ கல்லூரி 1–0 என்ற கோல் கணக்கில் மதுரையை வீழ்த்தியது. இதே போல் செட்டிநாடு அணி தன்னை எதிர்த்த மீனாட்சி அணியை 1–0 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. டேபிள் டென்னிசில் வேலூர் (ஆண்கள்), கோவை பி.எஸ்.ஜி. (பெண்கள்) அணிகளும், செஸ் போட்டியில் சென்னை ஸ்டான்லி (ஆண்கள்), எஸ்.ஆர்.எம். (பெண்கள்) அணிகளும் சாம்பியன் பட்டத்தை வென்றன. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கவுகாத்தி எக்ஸ்பிரஸ்
பயணிகள் ஓட்டம்
பெண் என்ஜினீயர் பலி
காயம் அடைந்தவர்கள்
வழக்குப்பதிவு