Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தமிழகத்தில் உள்ள இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் கருணாநிதி பிரச்சாரம்

Posted: 12 Apr 2014 07:24 AM PDT

தஞ்சை,

தஞ்சையில் டீ.ஆர்.பாலுவை ஆதரித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது;

அம்மையார் ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாகிவிட்டது. மின்வெட்டு பிரச்னையை தீர்க்க முடியாமல் தவிக்கும் முதல்-அமைச்சர் மின்வெட்டுக்கு சதிதான் காரணம் என குறைகூறி உள்ளார்.தமிழகத்தில் உள்ள இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

மக்களுக்கு தொண்டாற்றவே ஜனநாயகப் பணியில் திமுக ஈடுபடுகிறது.மக்களுக்காக யார் தொண்டாற்றுவதில் என்பதில் தான் போட்டி உள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வாணிபம் மற்றும் தமிழகத்தின் தொழில்வளம் பெருகும் என்று தெரிவித்தார். அண்ணாவின் விருப்பபடி சேதுசமுத்திர திட்டம் திமுக முயற்ச்சியில் தொடங்கபட்டது.

அண்ணாவின் கனவை நிறைவேற்ற திமுகவிற்க்கு வாக்கு அளியுங்கள் என்று தெரிவித்தார். மக்களுக்கு தொண்டாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று தெரிவித்தார்.

category:

News Group Category:

சினிமாவின் மறுபக்கம் : 65. நான் ஒரு‘பீனிக்ஸ்’ பறவை!

Posted: 12 Apr 2014 06:48 AM PDT

அரேபிய பாலைவனத்தில் 600 ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் 'மறுபிறவி' எடுப்பதற்காக தன்னையே எரித்துக்கொண்ட ஒரு பெரிய பறவையின் பெயர் 'பீனிக்ஸ்.' அதன் சாம்பலில் இருந்து, அது மீண்டும் 'பீனிக்ஸ்' பறவையாக புனர்ஜன்மம் எடுத்து வந்ததாக எனது மாணவப் பருவத்தில் ஒரு அரேபிய நூலில் படித்திருக்கிறேன்.

அப்படி, துப்பாக்கியினால் சுடப்பட்டு தப்பிப்பிழைத்து உயிரோடு மீண்ட எம்.ஜி.ஆரை ஒரு 'பீனிக்ஸ்' பறவையாகக் கூறலாம்.

அந்த எம்.ஜி.ஆரின் அறிவுரையையும் மீறி, ஒரு படத்தை தேவையில்லாமல் இயக்கப்போய், அதன் விளைவாக மனச்சோர்வுடன் இருந்த காலக்கட்டம் அது. இனிமேல் எந்த ஒரு படத்தையும் இயக்குவதற்கு நான் போகமாட்டேன் என்பதைத் தெரிந்து கொண்டு – எனது முந்தைய கூட்டாளிகள் என்னை எழுதுவதற்காக மீண்டும் கூப்பிட்டார்கள்!

என் அன்னையின் இன்னருளால் நான் மீண்டும் உயிர் பெற்ற அபூர்வ 'பீனிக்ஸ்' பறவையானேன்!

முதன் முதலில் என்னை அறிமுகப்படுத்தியவர் யாரோ, அவரே – அந்தத் தேவரண்ணனே என்னை மீண்டும் அன்புடன் அழைத்தார்.  அவருடன்கூட, 'பாசமலர்' படத்தின் பங்குதாரர் அண்ணன் எம்.ஆர்.சந்தானத்தின் கமலா பிக்சர்ஸ் தயாரித்து, சிவாஜி, சரோஜாதேவி நடித்த 'அன்பளிப்பு' படத்திற்கு வசனம் எழுத அழைக்கப்பெற்றேன். சரோஜாதேவி தனது திருமணத்திற்கு பிறகு நடித்த படம் இது.

எனக்கு அவர் ராசியாகவும், அவருக்கு நான் ராசிக்காரனாகவும் அமைந்து, வெற்றிகளைக் குவித்த வேல் முருக பக்தரான தேவரண்ணன் என்னை தொலைபேசியில் அழைத்து உடனே அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். சென்றமர்ந்தேன்.

கூடத்தில் அண்ணனுடன் இளைஞரும், நடுத்தர வயதும் அல்லாத தோற்றத்தில் – கைப்பித்தான் போடாத கசங்கிப்போன முழுக்கை சட்டை அணிந்து அடிக்கடி வெற்றிலைப்பாக்கு புகையிலை போட்டு அடக்கியதால் பழுப்பேறிய பற்களுடன் மெலிந்த மேனியுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து நின்று 'வணக்கம்' சொன்னார். பதிலுக்கு நானும் வணங்கினேன். அண்ணன் என்னிடம் கூறினார்:–

அண்ணன்:– அப்பா! இவன் பேரு... (மறந்துபோய்) ஏண்டா உன் பேரு என்னன்னு சொன்னே?

அவர்:– பூவை கிருஷ்ணன்.

அண்ணன்:– அதென்ன பூவை?

அவர்:– அது என் ஊரு பேருண்ணே.

அண்ணன்:– சரி (என்னிடம்) இவன் வாகினி ஸ்டூடியோவுல என்னைப் பார்க்கும்போதெல்லாம், அண்ணே! நான் ஒரு கதாசிரியன். என்கிட்டே கதைங்க இருக்கு. ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். ஏதாவது ஒரு கதை உங்களுக்குப் பிடிச்சிருந்து எடுத்துக்கிட்டு காசு குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்னு சொல்லி என் உயிரை வாங்குறான். சரின்னு வரச்சொன்னேன். கதை சொல்ல வந்திருக்கான். நீயும் கேளு. நல்லாருந்தா வாங்கிக்குவோம்.

நான்:– ஆகட்டுண்ணே. சொல்லுங்க கிருஷ்ணன்!

கிருஷ்ணன்:– 'ஒரு நிமிஷண்ணே' என்று எழுந்து சென்று, வாய்க் கொப்பளித்து விட்டு வேட்டியின் கீழே முனையைத் தூக்கி வாயைத் துடைத்தவாறு வந்து உட்கார்ந்து கதை சொல்லத் தொடங்கினார்.

பாதிக் கதையைக் கேட்டபிறகு, இதன் மூலக்கதையை அவர் எங்கிருந்து – எதிலிருந்து தோண்டி எடுத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.

'கிரேக் இன் தி மிர்ரர்' (விரிசல் கண்ணாடி) என்று ஓர் ஆங்கில நாவல். அதே பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக அன்றைய மவுண்ட்ரோடு 'நியூகுளோப்' தியேட்டரில் ஓடியது. அதை நான் பார்த்திருக்கிறேன். அதே கதையைத் தழுவி இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட 'கானூன்' என்ற ஒரு படம் திருவல்லிக்கேணி 'ஸ்டார்' தியேட்டரில் ஓடியது. அதையும் நான் பார்த்தேன்.

அதாவது ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர். ஒருவர் நீதிபதி, இன்னொருவர் கொலைகாரன். இந்த இரண்டு படங்களையும் பார்த்த பூவை கிருஷ்ணன் அந்த இரு பாத்திரங்களையும் வைத்து ஒரு கதை பண்ணிவிட்டார்.

கிருஷ்ணன் கதை சொல்லிக்கொண்டு வரும்பொழுதே இந்தக் குழப்பமான கதை அண்ணனுக்கு எங்கே பிடிக்கப்      போகிறது என்று எண்ணினேன். ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக – அவர் சொல்லி முடித்த உடனே அண்ணன் என்னைக் கேட்டார்:–

அண்ணன்:– தாசு எப்படிப்பா இருக்கு?

நான்:– கதையோட கரு நல்லாருக்குண்ணே. ஆனா நமக்குத்தகுந்த மாதிரி இன்னும் பல சீன்களைச் சேத்து திரைக்கதை பண்ணனும்.

அண்ணன்:– நானும் அப்படித்தான் நினைச்சேன். அதை நாம அப்புறம் கலந்துபேசி கரைக்ட்டு பண்ணிக்கலாம். முதல்லே இவன் விஷயத்தை முடிப்போம்.

(கிருஷ்ணனிடம்) டேய் கிருஷ்ணா! இப்போ நீ சொன்னதை அப்படியே பேப்பர்ல எழுதி அதோட உன் கையெழுத்தைப் போட்டுக்கொடு. அட்வான்ஸ் கொடுக்கிறேன். மூலக்கதை உன் பேரைப் போட்டுக்குறேன்.

(உதவி இயக்குனர் பி.எஸ்.மாரிமுத்துவிடம்) மாரிமுத்து, இவனை உன் ரூமுக்கு அழைச்சிக்கிட்டுப்போய் பேப்பர் கொடுத்து எழுதி வாங்கு.

(கிருஷ்ணனிடம்) ஏந்திரிச்சிபோய் எழுதுடா!

கதாசிரியர் கிருஷ்ணன் எழுந்தார். ஆனால் நகரவில்லை. எதையோ திருடி விட்டதைப்போல திருதிருவென்று விழித்தார்.

(ஆமாம். இப்பொழுது அவர் சொன்ன அந்த மூலக்கதை இங்கிலீஷ் – இந்திப்படங்களிலிருந்து திருடியதுதானே)

அண்ணன்:– (கிருஷ்ணனிடம்) என்னடா முழிக்கிறே? அட, கதையைச் சுருக்கமா நாலு காகிதத்துல எழுதிக்கொடுத்திட்டு காசை வாங்கிகிட்டு போப்பா. எனக்கு நிறையா வேலை இருக்கு.

இதற்குள் தொலைபேசி மணி ஒலித்து பையன் வந்து கூப்பிடவே அண்ணன் எழுந்து போனார்.

நான்:– (கிருஷ்ணனிடம்) கிருஷ்ணன்! இப்போ நீங்க சொன்ன கதையோட 'ஒரிஜினல்' மூலம் 'கிரேக் இன் தி மிர்ரர்.' அதோட 'கானூன்' இந்திப்படம் ரெண்டும் சேந்ததுதானே?

இப்படி நான் கேட்டதும் அந்த எளிய கதாசிரியர் துணுக்குற்று கைகுவித்துக் கும்பிட்டு... பரிதாபமாக...

கிருஷ்ணன்:– ஆமாண்ணே, தயவு பண்ணி அண்ணன்கிட்டே இதைச் சொல்லிடாதீங்க. அவருக்குக் கோவம் வந்து என்னை அடிச்சி வெரட்டுனாலும் வெரட்டிடுவாரு. ஒரு வருமானமும் இல்லாம குடும்பத்தோட கஷ்டப்படுறேன். நீங்களும் உதவி செய்யுங்க... பிளீஸ்.

நான்:– கவலைப்படாதீங்க. சொல்லமாட்டேன். நீங்க கதை சொல்லிக்கிட்டு வரும்போதே எம்மனசுக்குள்ளே ஒரு நல்ல திரைக்கதை உருவாயிடுச்சு. அதுக்கேத்தபடி வசனங்களும் வரும். அண்ணனுக்கு இது பிடிக்கலேன்னா, நானே உங்களுக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்து கமிட்பண்ணிக்கலான்னு நினைச்சேன். உங்க அதிர்ஷ்டம் அண்ணனுக்குப் பிடிச்சிப்போச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம்.

தொலைபேசியில் பேசிவிட்டு கூடத்திற்குள் நுழைந்த தேவரண்ணன் கிருஷ்ணன் அப்படியே நின்று கொண்டிருப்பதைக் கண்டு...

அண்ணன்:– அட என்னப்பா இன்னும் இங்கேயே நின்னுகிட்டிருக்குறே? போய் எழுதிக்கொடுப்பா...

கிருஷ்ணன்:– (தயக்கத்துடன்) அண்ணே! மன்னிக்கணும். இந்தக்கதை இப்போ எங்கிட்டே இல்லே.

அண்ணன்:– என்னது? உன் கதை உன்கிட்டே இல்லியா? யார்றா இவன் – சுத்தக் கேனப்பயலா இருக்கான்? (பயல் என்பதற்குப் பதிலாக அவர் அன்றாட வழக்கப்படி ஓர் 'அசைவ' கெட்ட வார்த்தையைச் சொல்லி...) கதை உன்கிட்டே இல்லேன்னா, வேற எவன்கிட்டே இருக்கு?

கிருஷ்ணன்:– (பயந்து கொண்டே) வீரப்பாண்ணன் கிட்டே இருக்கு.

அண்ணன்:– யாரு? எம்.ஜி.ஆர். ஆர்.எம்.வீரப்பனா?

கிருஷ்ணன்:– இல்லே. பி.எஸ்.வீரப்பாண்ணன்!

அண்ணன்:– பி.எஸ்.வீரப்பாண்ணனா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

கிருஷ்ணன்:– அவர்கிட்டேதான் முதல்ல இந்தக் கதையைச் சொன்னேன். நல்லாருக்குன்னு சொல்லி ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்து எழுதி வாங்கி வச்சிருக்காரு.

இதைக்கேட்டதும் அண்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது.

அண்ணன்:– ஏண்டா அறிவு கெட்டவனே! அவருகிட்டே சொல்லி, பணம் வேற வாங்கிக்கிட்டு, அதே கதையை எங்கிட்டே வந்து சொல்றியே. என்னை என்னா ஒன்னாட்டம் கேனப்பயன்னு (முன்பு சொன்ன அதே கெட்ட வார்த்தையுடன்) நினைச்சியா? உன்னை மாதிரி நானும் பொழைப்பத்தவனா? அய்யனாச்சேன்னு சும்மா விடுறேன். இல்லேன்னா எட்டி உதைச்சி மிதிச்சிருப்பேன். ஒரு நிமிஷம் இங்கே நிக்காதே. ஓடிடு...

கிருஷ்ணன்:– (அண்ணனின் காலைத்தொட்டு) அண்ணே! ஒரே ஒரு வார்த்தை...

அண்ணன்:– என்னடா? சொல்லு.

கிருணன்:– பி.எஸ்.வீ. இப்போதைக்கு இந்தக் கதையைப் படமாக்கப்போறதா எனக்குத் தோணலே. ஏன்னா... இப்போ அவரு கொஞ்சம் கஷ்டத்துல இருக்காரு. அதனால அவர்கிட்டே நான் வாங்குன அந்த ரெண்டாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்திட்டேன்னா, பைலைக் கொடுத்திடுவாரு. அதை அப்படியே உங்ககிட்டே கொடுத்திடுறேன்.

இதைக்கேட்டு அண்ணன் சற்று நேரம் அவருடைய வழக்கப்படி கண்களை மூடிக்கொண்டு மூக்கின் முன்பகுதியை வருடிக்கொண்டிருந்தார். அவர் எதிரில் கிருஷ்ணன் மார்கழி மாதக் குளிரில் உடம்பில் சட்டை இல்லாமல் இரண்டு கரங்களையும் குறுக்குவாட்டில் போட்டு கழுத்தோடு இணைத்துக் கொள்வதைப் போல போட்டுக்கொண்டு கூனிக்குறுகி 'வேதியர்' முன்னால் 'நந்தனார்' போல நின்று கொண்டிருந்தார்! அந்த எளிய பிராமணரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாவம்! வறுமை அந்த அளவிற்கு அவரை வாட்டி வதைத்து வளைய வைத்திருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அண்ணன்:– மாரியப்பா! என்று கூப்பிட தன் உடம் பிறந்த இளைய தம்பியும், தேவர் பிலிம்ஸ் பொருளாளருமான எம்.ஏ.மாரியப்பன் வந்தார்.

அண்ணன்:– ரெண்டாயிரம் ரூபாய் கொண்டாப்பா...

மாரியப்பன் கொண்டுவந்து அண்ணனிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி கிருஷ்ணனிடம் நீட்டியபடி...

அண்ணன்:– இந்தா. இப்பவே இதைக்கொண்டுபோய் வீரப்பாண்ணன்கிட்டே கொடுத்திட்டு, கையோட உன் கதை பைலை வாங்கிக்கிட்டு வந்து எங்கிட்டே கொடு. மேற்கொண்டு உனக்கு இன்னொரு ஆயிரம் ரூபாய் நான் கொடுக்கிறேன். அதுமட்டும் இல்லே. அப்பப்போ உன் குடும்பச் செலவுக்கு ஏதாவது காசு தேவைப்பட்டா வந்து கேளு. கொடுக்குறேன். இன்னொரு விஷயம்...

இந்தப்பணத்தை நான் உனக்குக் கொடுத்து கதையை வாங்கிக்கிட்டதா வீரப்பாண்ணன்கிட்டே சொல்லிடாதே. ஏன்னா, அவர் என் பழைய சிநேகிதர். ஏதாவது தப்பா நினைச்சிடப்போறாரு... தெரிஞ்சிதா? இந்தா... புடி...

பணத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்ட அந்தக் கதாசிரியர் பூவை கிருஷ்ணன் வேர் அறுந்த மரம்போல அப்படியே அண்ணனின் காலில் விழுந்து வணங்கி எழுந்தார்.

அண்ணன்:– (கைகுவித்து) முருகா! நல்லாரு. இந்தாப்பாரு... வந்ததை வந்தே – கதை சொன்னதைச் சொன்னே – என் பொழைப்பைக் கெடுத்து நேரத்தை வீணாக்குனதை வீணாக்குனே பரவாயில்லை... இந்தப்பணத்தைக் கொண்டுபோய் அவர்கிட்டே கொடுத்திட்டு பைலை வாங்கிக்கிட்டு இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே இங்கே நீ வந்து இன்னொரு ஆயிரம் ரூபாயை வாங்கிக்கிட்டு போயிடு... இல்லே... என்று அண்ணன் சொல்லி முடிப்பதற்குள் கதாசிரியர் கிருஷ்ணன் காற்றாகப் பறந்து போய்விட்டார்.

காசு அங்கே போனது! கதை இங்கே வந்தது!

பூவை கிருஷ்ணனின் மூலக்கதையைக் கருவாக வைத்துக்கொண்டு முழுத் திரைக்கதையையும் முடிவு செய்த பின்னர் வழக்கம்போல வசனம் எழுதத் தொடங்கி மொத்த வசனங்களையும் ஒரே வாரத்தில் நான் எழுதி முடித்து அண்ணனிடம் வாசித்துக் காட்டினேன். முழுப்படத்திற்குமான மொத்த வசனங்களையும் நான் எழுதி முடித்த பிறகு, நானே எதிர்பாராத அளவிற்கு அது முழுக்க முழுக்க ஒரு குடும்பக் கதையாக நல்ல கருத்துக்கள் நிறைந்த வசனங்களுடன் உருவாகி இருந்ததை அண்ணன் உணர்ந்தறிந்து என்னைப் பாராட்டினார். எழுதிய பிறகு அது ஒரு வசனப்படமாக – என்னை அறியாமலேயே மாறிவிட்டதை அறிந்து, எனக்கு நானே மகிழ்ந்து இந்தப்படத்தில் நான் எழுதியுள்ள வசனங்கள் புகழப்பட்டு எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படத்துக்கு 'அக்கா–தங்கை' என்று பெயர் சூட்டப்பட்டது.

அடுத்ததாக படத்தின் நடிகர் – நடிகையரைப்பற்றிய கலந்தாலோசனை இயக்குநர் – உடன்பிறப்பு எம்.ஏ.திருமுகத்தையும் வைத்துக்கொண்டு நடந்தது. கதாநாயகனாக ஜெய்சங்கரும், ஒரே முகத்தோற்றம் கொண்ட நீதிபதி மற்றும் கொலைகாரன் ஆகிய இரு வேடங்களுக்கும் 'மேஜர்' சுந்தர்ராஜனும் நடிப்பதென ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாங்கள் மாற்றி அமைத்த இந்தத் திரைக்கதைக்கு இரண்டு அச்சாணிப்பாத்திரங்கள். ஒன்று – கட்டிட சித்தாள் வேலை பார்த்து கல், மண் சட்டி சுமந்து கஷ்டப்பட்டுக் காசு சம்பாதித்து, அதைக்கொண்டு தன் ஒரே தங்கையை வக்கீலுக்குப் படிக்க வைக்கும் ஏழை அக்கா. இரண்டாவது – அவளுடைய அன்புத் தங்கை ஆகியவர்கள்!

அக்காள் வேடத்தில் பத்மினியை – அதுவரையில் தேவர் பிலிம்ஸ்சின் படங்களில் நடிக்காதவர் – நடிக்க வைப்பதென தயாரிப்பாளராகிய அண்ணனும், இயக்குநராகிய தம்பியும் சேர்ந்து முடிவு செய்தனர். நான் அதிலிருந்து மாறுபட்டு, சவுகார்ஜானகியைச் சொன்னேன். முதலில் அவர்கள் உடன்படாமல் என்னை விளக்கம் கேட்டார்கள். அதற்கு நான் கூறினேன்:–

நான்:– 'இந்தப் படத்துக்கு நான் வசனம் எழுதிக்கிட்டு வரும்போதே அக்காவாக சவுகார்ஜானகியும், தங்கையாக இன்னொரு நடிகையும்தான் நினைவுக்கு வந்து என் மனசுல இடம் பிடிச்சாங்க. அவுங்களை வச்சித்தான் நான் வசனம் எழுதிக்கிட்டு வந்தேன். அதுமட்டுமில்லே, அவுங்க முகபாவனைகள் (எக்ஸ்பிரஷன்) நடிப்பு, பேச்சு முறைகள் எல்லாமே எனக்கு அத்துப்படி. அதனால அவுங்களைவிட பொருத்தமானவுங்க என்னைப் பொறுத்த வரைக்கும் வேற யாரும் இல்லே. எனக்குத் தோணுனதை நான் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் முடிவு பண்ணவேண்டியது புரடியூசரான அண்ணனும், டைரக்டரான தம்பியும்தான். பப்பியம்மா (பத்மினி)தான்னு நீங்க சொன்னா, அதுல எனக்கொண்ணும் மறுப்பு இல்லே. அந்தம்மாவும் நான் எழுதுன 'இருமலர்கள்' படத்துல நடித்து எனக்குப் பழக்கமானவுங்கதான்'.

என்னுடைய இந்த விளக்கத்தைக் கேட்டு அண்ணனும், தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். யோசித்தனர்.

ஒரு குழப்பமான நிலைக்கு அவர்கள் ஆளாகிவிட்டதை இருவருடைய முகக்குறிப்பிலிருந்தும் நான் புரிந்து கொண்டேன். தம்பியினால் எதுவுமே சொல்ல முடியாமல் பேசாமல் இருந்தார். அண்ணன் பேசினார்:–

அண்ணன்:– (என்னிடம்) அப்பா! நீ சொன்னதைக் கேட்டதும், சவுகார்ஜானகி, பத்மினி இரண்டு பேருமே அந்த வேஷத்துக்கு நல்லாருப்பாங்கன்னு எனக்குத் தோணுது. இப்போ என்ன செய்யலாம்?

நான்:– அண்ணே! ஒண்ணு செய்யலாமா? அதுவும் நீங்க விரும்பினாத்தான்...

அண்ணன்:– (ஆர்வத்துடன்) சொல்லு சொல்லு... என்ன செய்யலாம்?

நான்:– முக்கியமான – சிக்கலான பிரச்சினைங்க வரும்போது – நீங்க கோவில்ல முருகன் விக்ரகத்துல பூவச்சிக் கேப்பிங்கள்ளே...

அண்ணன்:– ஆமாப்பா... கரைக்டு.

நான்:– இங்கே முருகன் விக்ரகம் இல்லே. அதனால படத்துக்கு முன்னால பத்மினி, சவுகார்ஜானகி இரண்டு பேர்களையும் துண்டுக் காகிதத்துல எழுதி திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்க்கலாமா?

திருமுகம்:– (முந்திக்கொண்டு) அருமையான ஐடியா தாஸ்! உங்க கையாலேயே எழுதிக் குலுக்கிப்போடுங்க...

அண்ணன்:– ஆமாப்பா. அதான் கரைக்டு. நீயே எழுதிக் குலுக்கிப்போட்டு, உன் கையாலேயே எடு.

நான்:– இல்லேண்ணே. நான் எழுதிக் குலுக்கிப் போடுறேன். எடுக்கவேண்டியது நீங்கதான். நீங்கதானே முடிவு பண்ணனும்.

அண்ணன்:– சரிப்பா. அப்படியே செய்யலாம். எழுது சொல்றேன்.

இரண்டு துண்டுக் காகிதங்கள்! அண்ணன், தம்பி இருவருடைய கண் எதிரிலும் ஒன்றில் பத்மினி என்றும் இன்னொன்றில் சவுகார் ஜானகி என்றும் எழுதினேன்! சுருட்டினேன்! குலுக்கினேன்! சாமி படத்திற்கு முன்னால் போட்டேன். அண்ணன் கைகுவித்துக் கும்பிட்டு 'முருகா' என்று கூறி கண்களை மூடிக்கொண்டு துழாவி ஒரு சீட்டை எடுத்தார்! பிரித்தார்! பார்த்துவிட்டு இன்னொரு முறை முருகனைக் கூப்பிட்டார்! வந்தது முருகன் அல்ல – சவுகார்ஜானகி!

அண்ணன்:– தாசு! இப்போ உனக்குத் திருப்திதானே?

நான்:– அண்ணே! எனக்கு எப்பவோ திருப்தி! இப்போ உங்க ரெண்டு பேருக்கும் திருப்தியா? அதைச் சொல்லுங்க.

அண்ணன்:– திருவுளச்சீட்டுலேயே வந்திடுச்சி. திருப்திபடாம இருக்கமுடியுமா? சரிப்பா. தங்கச்சியா யாரைப்போட்டுக்கலாம். அதுவும் ஒரு முக்கியமான வேஷம். அதையும் நீயே சொல்லிடு. நீ சொன்னா சரியா இருக்கும்.

நான்:– (சட்டென்று) கே.ஆர்.விஜயா!

அண்ணன்:– (துணுக்குற்று) ஏம்பா உனக்கு மூளை இருக்கா?

நான்:– இருக்குறதுனாலதான் சொல்றேன்.

அண்ணன்:– அட போப்பா... அது கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு சினிமாவுலே இருந்து ஒதுங்கிடுச்சி. அதைப்போய் சொல்றியே.

நான்:– அண்ணே! தெரியாம பேசுறீங்க. எந்த ஹீரோயின் கல்யாணம் பண்ணிக்கலே, குழந்தை பெத்துக்கலே? அந்தக்காலத்து கண்ணாம்பாம்மா, பானுமதியம்மா, அஞ்சலிதேவி, ஜி.வரலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாவித்திரி, பத்மினி, சவுகார்ஜானகி, ஏன்? இப்போ சரோஜாதேவி அத்தனை பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவுலேருந்து தற்காலிகமாக கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்திட்டு மறுபடியும் நடிக்க வரலியா?

இன்னுமா உங்களுக்குப் புரியலே. அண்ணே! கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் இனிமே சினிமாவுலே நடிக்கமாட்டேன்னு சொல்றது 'பிரசவ வைராக்கியம்' மாதிரி.

புருஷனுக்கு ஆசையும், பொண்டாட்டிக்கு அவசியமும் வரும்போது அடுத்த குழந்தையைப் பெத்துக்குவாங்க. அந்த மாதிரி நல்ல கம்பெனி நல்ல படம் வந்தா எல்லா  ஹீரோயின்களுமே மறுபடியும் நடிக்க வருவாங்க. அதுவும் அவுங்களா இஷ்டப்பட்டு மட்டும் இல்லே – கணவர் பர்மிஷனோட. அவர் அனுமதிக்கணும்ல?

அண்ணன்:– நீ சொல்றதும் உண்மைதான். ஒத்துக்குறேன். ஆனா விஜயா அப்படி நடிக்க வராதுன்னு நினைக்கிறேன்.

நான்:– நீங்க என்ன நினைக்குறது? நான் நினைக்குறேன். எனக்குத் தெரியும். அது நிச்சயமா வரும். எதை வச்சி சொல்றேன்னா, கம்பெனி – அதுக்குப்பழக்கப்பட்ட தேவர் பிலிம்ஸ் – கேக்குறது தேவரண்ணன். கேளுங்க – வருதா இல்லியா பாருங்க.

அண்ணன்:– சரிப்பா. விஜயா இல்லேன்னு வச்சிக்க. வேற யாரு?

நான்:– அண்ணே! உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். இதுவரைக்கும் எவ்வளவோ படங்கள் எழுதியிருக்கேன். நான் எழுதிக்கிட்டு வரும்போதே எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி இல்லாம வேற யார் நடிகர், நடிகைங்களோ, அவுங்கள்ளே ஒரே ஒருத்தரை மட்டும்தான் நினைப்பேன். நான் நினைக்குறதென்ன – அவுங்களே வந்து என் மனசுக்குள்ளே புகுந்திடுவாங்க. ஒண்ணுன்னா ஒண்ணுதான்! ரெண்டாவதுங்குற நினைப்புக்கே என் மனசுல இடம் இருக்காது. அனாவசியமா என் மனசைப் போட்டுக் குழப்பிக்கமாட்டேன்.

இந்த ஆர்ட்டிஸ்டுங்க தேர்வு விஷயத்துல நான் ரொம்ப தெளிவா இருப்பேன். இது ஏற்கனவே உங்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அப்படித்தான் ''வேட்டைக்காரன்'' படத்துக்கு சாவித்திரியை சொன்னேன். இவ்வளவு ஏன்? பதினோரு வருஷங்களுக்கு முந்தி இங்கே நான் முதல் முதல்ல எழுதி அறிமுகமான ''வாழவைத்த தெய்வம்'' படத்துக்கு ஹீரோயினா அப்போதைய பதினெட்டு வயசு சரோஜாதேவியை உங்களுக்கு ஞாபகப்படுத்தினதே நான்தான்! நினைவிருக்கா?

அண்ணன்:– ஆமாப்பா. நம்ம ''நீலமலைத்திருடன்'' படத்துல நடிச்ச அஞ்சலிதேவியைத்தான் முதல்ல நான் நினைச்சிருந்தேன். ஜெமினிகணேசன்–சரோஜாதேவி ''கல்யாணப்பரிசு'' ஜோடி நல்லாருக்கும்னு நீதான் சொன்னே.

நான்:– அதே மாதிரிதான் இப்பவும் சொல்றேன். ஏன் குறிப்பா விஜயாவை சொல்றேன்னா – நான் எழுதின ''இருமலர்கள்'' படத்துல சிவாஜியோட கல்லூரிக் காதலியா பப்பிம்மாவும், மனைவியா விஜயாவும் நடிச்சாங்க. ரெண்டு பேருமே சிவாஜிக்கு மேட்சா ரொம்ப அழகாகவும், பொருத்தமாகவும் இருந்தாங்க. அதே ஜோடி இந்தப்படத்துலேயும் வேண்டான்னுதான் நீங்க சொன்ன பத்மினிக்குப் பதிலாக சவுகார்ஜானகியைச் சொன்னேன். சவுகார்ஜானகி, விஜயா இரண்டு பேரும் இதுவரைக்கும் எந்தப் படத்துலேயும் சேர்ந்து நடிக்கலே. நம்ம அக்கா, தங்கச்சி வேஷத்துக்குப் புதுசாவும், பொருத்தமாவும் இருக்கும்.

அண்ணன்:– (தயங்கியபடி) எதுக்கும் விஜயாவுக்கு போன் பண்ணி கேட்டுப்பார்க்கலாமா?

நான்:– தேவை இல்லை. நீங்க ஏன் இவ்வளவு தயங்குறீங்க? இந்தத்தெரு முனையிலதானே விஜயாவோட வீடு இருக்கு. பொடி நடையா நடந்தேபோயி நேரிலேயே கேளுங்க. இப்போ அது வீட்டுல பிரீயாத்தான் இருக்கும். ஒருவேளை அதோட வீட்டுக்காரர் இருந்தாலும் இருப்பாரு. நீங்க நேருல போனா அதுக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்கும் இல்லியா? 'ஒர்க் அவுட்' ஆயிடும். ஒண்ணும் யோசிக்காதீங்க. அமாவாசை வேற நெருங்குது. பூஜையோட ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரே மாசத்துல படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணனும்ல.

அண்ணன்:– அட ஆமாப்பா. அதை மறந்திட்டேன். சரி, நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். தேவைப்பட்டா நீ அதுகிட்டே கதை சொல்லு.

நான்:– வேண்டாம். நீங்க மட்டும் போங்க. ஏன்னா சம்பள விஷயம் அது இதுன்னு ஏதாவது நீங்க பேசவேண்டி வந்து, அப்போ நான் பக்கத்துல இருந்தா நல்லா இருக்காது. முதல்ல நீங்க போய் முடிச்சிட்டு வாங்க. அதுக்கப்புறம் நான் விஜயாகிட்டே கதை சொல்லிக்குறேன். புறப்படுங்க.

அண்ணன் எழுந்தார்! பூஜை  அறைக்குள் போனார்! முருகன் படத்தின் அடியில் தட்டில் இருந்த விபூதியை அள்ளினார்! நெற்றியில் அப்பிக்கொண்டார்! வெளியில் வந்தார்!

தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு நேர் கிழக்கே ராமன் தெரு முனையிலிருந்த ''புன்னகை அரசி'' கே.ஆர்.விஜயாவின் வீட்டிற்குச் சென்றார்!

விஜயாவைச் சந்தித்தாரா?

விஜயா சம்மதித்தாரா?

விஜயாவுக்காக ''பீஸ்'' வாங்காத கருப்பு அங்கி அணியாத வக்கீலாக இந்த வசனகர்த்தா வாதாடியது வெற்றி பெற்றதா?

('என் வசனத்தடாகத்தில் மறுபடியும் மலர்ந்த வண்ணத்தாமரை' – அடுத்த வாரம்)

category:

தேர்தல் பணிக்காக ஓய்வுப்பெற்ற போலீஸ்காரர்களுக்கு அழைப்பு விடுத்து போலீஸ் கமிஷனர் கடிதம்

Posted: 12 Apr 2014 06:24 AM PDT

சென்னை,

பாராளுமன்றத்துக்கு பல கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 24&ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பணிக்காக தமிழக போலீசார் மட்டுமல்லாமல், துணை ராணுவப்படையினர், ஊர்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஓய்வுப்பெற்ற ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை பயன்படுத்த போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, ஓய்வுப்பெற்ற ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சென்னை போலீசார் சேகரித்தனர். இதில், 1,200 பேர் சென்னையில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை தேர்தல் பணிக்கு அழைப்பு விடுத்து போலீஸ் கமிஷனர் திரிபாதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு வரவேண்டும். இந்த பணிக்காக தகுந்த சிறப்பு ஊதியம் உடனடியாக வழங்கப்படும். இந்த கடிதம் கிடைத்தவுடன், சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு  தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்ய கொள்ளவேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தல் பணிக்கு, 1,200 ஓய்வுப்பெற்ற ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

category:

News Group Category:

வாழ்க்கையில் வன்முறையை அறவே கைவிட்டு ஒன்றுபட்டு வாழ வேண்டும் மாகாவீர் ஜெயந்தி-விஜயகாந்த் வாழ்த்து

Posted: 12 Apr 2014 06:11 AM PDT

சென்னை,

மகாவீர் ஜெயந்தியையொட்டி விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதது மட்டுமல்ல, அவைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்குவதும், எக்காரணத்தைக் கொண்டும் எந்த உயிரையும் கொல்லாமையும் கொள்கையாக வகுத்து தந்தவர் மகான் மகாவீரர் ஆவார்.

அரச குடும்பத்தில் பிறந்தும், அதில் நாட்டம் கொள்ளாமல் துறவை மேற்கொண்டவர். மனித குலம் அன்பும், அருளும் கொண்டு வாழ்க்கையில் வன்முறையை அறவே கைவிட்டு, ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அருளுரை தந்தவர்.

அவரது பிறந்தநாளான 13.04.2014 அன்று, அவர் போதித்த சமண சமயத்தை கடைப்பிடிக்கும் சான்றோர் பெருமக்களுக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்யவும், எல்லா நலன்களும் இந்த மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படவும், இறைவன் அருள்புரியவும் தே.மு.தி.க. சார்பில் வேண்டிக்கொள்ளுகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

category:

News Group Category:

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; 4 பேர் சாவு 100–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Posted: 12 Apr 2014 06:06 AM PDT

காபூல்,

ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள க்வாஜா கைரக் மற்றும் பெஸ்டா மசார் ஆகிய 2 கிராமங்களில்  அதிகாலை 2.30 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிர் இழந்தனர். 100–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிர் இழப்புகளும், சேதங்களும் மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த 1997–ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.
 

category:

News Group Category:

சென்னையில் வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் தொடங்கியது வீடு, வீடாக சென்று தேர்தல் பணியாளர்கள் வழங்கினர்

Posted: 12 Apr 2014 06:03 AM PDT

சென்னை,

சென்னையில் வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. வீடு, வீடாக சென்று தேர்தல் பணியாளர்கள் வழங்கினர்.

வாக்குச்சாவடி சீட்டு

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்திருந்தார்.

ஆனால் சென்னையில் வாக்குச்சாவடி சீட்டு அச்சடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் தொடங்கவேண்டிய பணி ஒரு நாள் தாமதமாக நேற்று தொடங்கியது. தேர்தல் பணியாளர்கள் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வீடு, வீடாக வினியோகம் செய்தனர்.

பணிகள் தீவிரம்

ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், விருகம்பாக்கம், தியாகராயநநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்ய தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பகுதி வாரியாக வாக்குச்சாவடி சீட்டு வீடு, வீடாக வினியோகம் செய்வதற்கு தேர்தல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேதிவாரியாக பகுதிகள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி சீட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது. வருகிற 19–ந்தேதிக்குள் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

தீவிர தேர்தல் பிரசாரத்துக்கு இடையில் மாமல்லபுரத்தில் குடும்பத்தினருடன் தங்கிய மு.க.ஸ்டாலின்

Posted: 12 Apr 2014 06:02 AM PDT

மாமல்லபுரம்,

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஆரணி தொகுதியில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் மாமல்லபுரம் வருகை தந்த அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்தார்.

 மாலை 3 மணி வரை ஓய்வில் இருந்த மு.க.ஸ்டாலின் பிறகு தேர்தல் பிரசாரத்திற்காக மாமல்லபுரத்தில் இருந்து கடலூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், மாமல்லபுரம் நகர செயலாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் இருந்தனர்.
 

category:

News Group Category:

பறக்கும் படை போலீசார் வாகன சோதனை

Posted: 12 Apr 2014 05:28 AM PDT

பாராளுமன்ற தேர்தலையட்டி பறக்கும் படை போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அண்ணாநகரில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு போலீசார் உதவியுடன் பறக்கும் படை போலீசார் ஒரு காரை சோதனை செய்த போது எடுத்த படம்.
 

10

உதவிக்கு அவசர அழைப்பு விடுத்த துணை விமானியின் அழைப்பு நவீன டெக்னாலஜி மூலம் திசை திருபப்பட்டுள்ளது மலேசிய பத்திரிகை தகவல்

Posted: 12 Apr 2014 05:20 AM PDT

கோலாலம்பூர்-

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. ஒருமாதம் ஆகியும் அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு விமானிகள் அறையில் இருந்து  மலேசிய விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள்ளது.  விமானி  அறையில் இருந்து பேசியவர் அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் (ஆல் ரைட், குட்நைட்) என பேசியுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின்  தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மலேசிய விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவதற்கு முன்பாக விமானிகள் அறையில் இருந்து, அனைத்தும் சரியாக உள்ளது.  இரவு வணக்கம் என்று பேசியது உதவி விமானி பாரீக் அப்துல் ஹமீது என்று புதிய தகவல் தெரிவிக்கின்றது.  கடைசி வார்த்தைகளை பேசியது யார் என்பது சரியாக தெரிய வராத நிலையில் அதனை விமானி பேசியிருப்பார் என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

உதவி விமானி நடுவானில் பறக்கும் போது  மொபைல் போனில் யாருக்கோ அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால் அது ரேடார் திரையில் இருந்து மறைக்கபப்பட்டு உள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அந்த அழைப்பு  திடீர் என துண்டிக்கபட்டு உள்ளது. விமானம் வேகமாக நகரும் போது தொலைத்தொடர்பு துண்டிக்கபட்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது என மலேசிய பத்திரிகை (The New Straits Times ) ஒன்று தெரிவித்து உள்ளது.

பாரீக் அப்துல் ஹமீது மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் யாரை தொடர்பு கொண்டார் என தெரிய வில்லை.தொடர்ந்து அவரது தொலைபேசி உரையாடலை ஆராய்ந்து வருகிறார்கள்.  என மலேசிய பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

விமானத்தின் துணை பைலட் பாரூக்  மலேசிய விமானம் திசை மாறிய சில நிமிடங்களில் மலேசிய கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுப்பதற்காக தன்னுடைய மொபைல் போனில் இருந்து அழைப்பு செய்துள்ளார். ஆனால் சக்திவாய்ந்த சாட்டிலைட் மூலம் அந்த அழைப்பு திசைதிருப்பப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

பாரூக்கின் தொலைபேசி அழைப்பு எண்களை ஆய்வு செய்தபோது, மலேசிய விமானம் காணாமல் போன சில நிமிடங்களில் பென்னாங் என்ற பகுதியில் இருந்து அவருடைய தொலைபேசியில் அவுட்கோயிங் கால் சென்றுள்ளதை கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மலேசிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.  
விமானம் திசைமாறியதால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கவே அவர் மொபைலில் இருந்து அழைப்பு செய்திருக்கக்கூடும் என்றும், ஆனால் நவீன டெக்னாலஜி மூலம் அவருடைய அழைப்பு இடையிலேயே மறிக்கப்பட்டு திசைதிருப்பி இருக்க வேண்டும் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது

category:

News Group Category:

மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

Posted: 12 Apr 2014 05:20 AM PDT

கொரியன் அசோசியேசன் மற்றும் கொரியன் கவுன்சில் ஜெனரல் இணைந்து சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னையில் தங்கி பணிபுரியம் கொரிய நாட்டினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

9


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™