Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


துரைப்பாக்கத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய கடை, வீடுகள் இடித்து அகற்றப்பட்டன வருவாய் துறையினர் நடவடிக்கை

Posted: 28 Dec 2013 10:52 AM PST

ஆலந்தூர்,

துரைப்பாக்கத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை மற்றும் வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

குளக்கரை ஆக்கிரமிப்பு

சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் பெரிய சித்திரை குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டி கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான குளக்கரையை காலி செய்யும்படி அங்கிருந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீசுகள் வழங்கப்பட்டன. ஆனால் யாரும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை.

இடித்து அகற்றம்

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்று குளத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த கடைகள், வீடுகளை இடித்துத்தள்ளினார்கள்.

சிலர் தாங்களாகவே முன்வந்து வீடுகள், கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினார்கள். குளத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த 12 கடைகள், 20 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு சொந்தமான ரூ.60 கோடி இடம் மீட்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை முன்னிட்டு துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முகமது அஸ்லாம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

எதிர்வரும் 2014–ஆம் ஆண்டில் 50 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ள 10 நிறுவனப் பங்குகள்

Posted: 28 Dec 2013 09:46 AM PST

புதுடெல்லி

எதிர்வரும் 2014–ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகள் புதிய சாதனை அளவுகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் 50 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ள 10 நிறுவனப் பங்குகள் குறித்து நிபுணர்கள் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர்.

புத்தாண்டு பிறக்கிறது

வழக்கமான உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் புதிய ஆண்டு பிறக்கிறது. அமெரிக்க ரிசர்வ் வங்கி பணப்புழக்க அதிகரிப்பு நடவடிக்கைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அன்னிய நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியின் அளவு குறையும் என்றாலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல்

அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முன்னேற்ற நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் உத்வேகம் அடையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. உலக பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு வழி வகுக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் அடுத்த ஓர் ஆண்டில் 10 முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளிக்க வாய்ப்புள்ளது என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.

அதானி போர்ட்ஸ் விரிவாக்கத்தில் அதிக முதலீடு செய்து வருகிறது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 24 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. வருவாய் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. ஓராண்டு காலத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.219–ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெய்ரன் இந்தியா

கெய்ரன் இந்தியா நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் மொத்த நிகர லாபத்தில் 45.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளன. மேலும் இதன் கச்சா எண்ணெய் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. 12 மாதங்களில் இப்பங்கின் விலை ரூ.421–ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சிறப்பான வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இப்பங்கின் விலை ரூ.202–ஆக உயரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்கார்ட்ஸ் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளில் அதிக முதலீடு செய்து வருகிறது. புதிய தயாரிப்புகள் அறிமுகம், செலவினம் குறைப்பு, மொத்த லாப வரம்பு முன்னேற்றம் போன்ற பல்வேறு சாதகமாக அம்சங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தொடர் முன்னேற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இப்பங்கின் விலை ரூ.179–ஆக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்ஸெல் புரோபேக் நிறுவனத்தின் ஆராய்ச்சி – மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படாத நுகர்பொருள் துறையின் நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சி இந்நிறுவனத்திற்கு பக்கபலமாக உள்ளது. சர்வதேச அளவில் அதிக வாடிக்கையாளர்கள், சிறப்பான உற்பத்தி திறன் போன்றவை வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் அம்சங்களாக உள்ளன. இப்பங்கின் விலை ரூ.68–ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்திரா அண்டு மகிந்திரா

புளூசிப் நிறுவனங்களுள் ஒன்றான மகிந்திரா அண்டு மகிந்திரா அண்மைக் காலத்தில் மேற்கொண்ட கையகப்படுத்துதல் நடவடிக்கைகள், பல்வேறு பிரிவுகளிலும் மேற்கொண்டு வரும் முதலீடுகள் போன்றவற்றால் சீரான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. 40–க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் சர்வதேச அளவில் 14.50 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனப் பங்கின் விலை ஓராண்டில் ரூ.1,202–ஐ எட்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மத்திய அரசிடமிருந்து ரூ.500 கோடி மூலதனத்தை எதிர்பார்க்கிறது. செப்டம்பர் காலாண்டில் இவ்வங்கியின் வளர்ச்சி சற்றே பின்தங்கி விட்டாலும் அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இவ்வங்கியின் செயல்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கின் விலை ரூ.798–ஆக உயரும் என தெரிகிறது.

சேசா ஸ்டெர்லைட்

சேசா ஸ்டெர்லைட் நிறுவனம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனப் பங்கின் விலை ரூ.264–ஆக உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

விப்ரோ நிறுவனம் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் தனது முக்கிய பிரிவுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய சந்தைகளிலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இப்பங்கு குறித்த மதிப்பீடுகள் நன்றாக உள்ளன. 12 மாதங்களில்பங்கின் விலை 29 சதவீதம் உயர்ந்து ரூ.705–ஆக அதிகரிக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

டாரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ்

டாரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் புதிய மருந்துகளை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஜெர்மனி, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு செயல்பட முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் இங்கிலாந்தும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முக்கிய சந்தையாக திகழும் என தெரிகிறது. இப்பங்கின் விலை ஓராண்டில் ரூ.655–ஐ எட்டும் என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

category:

டிச.15 வரையிலான 2 வாரங்களில் முன்பேர வர்த்தகம் 40 சதவீதம் சரிவு

Posted: 28 Dec 2013 09:41 AM PST

புதுடெல்லி

டிசம்பர் 15 வரையிலான இரண்டு வாரங்களில் முன்பேர வர்த்தகம் 60 சதவீதம் சரிந்து ரூ.2.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.6.88 லட்சம் கோடியாக இருந்தது.

தயக்கம்

கணக்கீட்டு காலத்தில் விளைபொருள் முன்பேர வர்த்தகம் அளவின் அடிப்படையில் மிகவும் குறைந்ததே சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், முன்பேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் சாதாரண உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம் அதிகபட்சமாக 70 சதவீதம் குறைந்து ரூ.1.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.37,207 கோடியாக சரிவடைந்துள்ளது. தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் 66 சதவீதம் சரிவந்து ரூ.3.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.07 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான வர்த்தகம் 57 சதவீதம் குறைந்து ரூ.1.50 லட்சம் கோடியிலிருந்து ரூ.65,215 கோடியாக சரிவடைந்துள்ளது. வேளாண் விளைபொருள்கள் மீது ரூ.66,966 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 27 சதவீதம் (ரூ.92,060 கோடி) குறைவாகும்.

இந்தியாவில், கடந்த 2003–ஆம் ஆண்டின் முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நம் நாட்டில் தற்போது 17 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் எம்.சி.எக்ஸ், என்.சி.டீ.இ.எக்ஸ், என்.எம்.சி.இ., ஏ.சி.இ., ஐ.சி.இ.எக்ஸ். மற்றும் யூ.சி.எக்ஸ் உள்ளிட்ட ஆறு சந்தைகள் தேசிய அளவில் செயல்படுகின்றன. இதர 11 சந்தைகள் பிராந்திய அளவில் செயல்படுகின்றன.

கட்டுப்பாட்டு அமைப்பு

அனைத்து முன்பேர வர்த்தக சந்தைகளும் பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எஃப்.எம்.சி) என்ற கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. முன்பேர சந்தைகளில் ஈட்டப்படும் மொத்த வருவாயில் எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் பங்கு அதிக அளவில் உள்ளது.

category:

ரூ.17,630 கோடி மதிப்பிலான துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted: 28 Dec 2013 09:38 AM PST

புதுடெல்லி

மத்திய அரசின் உயர்மட்ட குழு ஒன்று ரூ.17,630 கோடி மதிப்பிற்கான துறைமுக விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐந்து விண்ணப்பங்கள்

பொது, தனியார் கூட்டுத் திட்ட மதிப்பீட்டு குழு துறைமுக பிரிவில் ஐந்து வளர்ச்சி திட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இவை, மத்திய கப்பல் துறை அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் இறுதி அனுமதி வேண்டி அனுப்பப்பட உள்ளன.

ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் நான்காவது கன்டெய்னர் முனையத்தின் மேம்பாட்டு திட்டம், எண்ணூர் துறைமுகத்தின் கன்டெய்னர் முனையம், மும்பை துறைமுகத்தின் பல்நோக்கு சரக்கு முனையம், கண்ட்லா மற்றும் கொல்கத்தா துறைமுகத்தின் கண்டெய்னர் முனையம் ஆகிய ஐந்து திட்டங்களுக்கு உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.17,630 கோடியாகும். இந்த திட்டங்கள் நிறைவடையும்போது துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 15 கோடி டன் அதிகரிக்கும். சென்ற நிதி ஆண்டில் முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 74.75 கோடி டன்னாக இருந்தது.

கப்பல் துறை அமைச்சகம் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 16 வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 பெரிய துறைமுகங்கள்

இந்தியாவில் தற்போது கொல்கத்தா, ஹால்டியா, பரதீப், விசாகப்பட்டினம், எண்ணூர், சென்னை, வ.உ.சிதம்பரனார், கொச்சி, புதிய மங்களூர், மர்மகோவா, மும்பை, ஜவகர்லால் நேரு மற்றும் கண்ட்லா ஆகிய 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

category:

நடப்பு பருவத்தில், 3.79 கோடி பொதி பருத்தி உற்பத்தியாகும்

Posted: 28 Dec 2013 09:35 AM PST

மும்பை

நடப்பு பருவத்தில் (2013 அக்டோபர்–2014 செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 3.79 கோடி பொதிகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தி கொண்டதாகும்.

பயிரிடும் பரப்பளவு

சென்ற பருவத்தை காட்டிலும் இப்போது பருத்தி பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ள போதிலும் பருவமழை நன்றாக இருந்ததால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.79 கோடி பொதியாகவும், பயன்பாடு 3 கோடி பொதியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உபரியாக 1.37 கோடி பொதிகள் இருக்கும் என இந்திய பருத்தி சங்கத்தின் தலைவர் தீரேன் ஷேத் தெரிவித்தார்.

சிறப்பான பருவமழை காரணமாக நடப்பு பருவத்தில் குஜராத் மாநிலத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பருவத்தில் அங்கு வறட்சி நிலவியது.

சர்வதேச அளவில் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி தேவையை காட்டிலும் அதிகமாக இருக்கும். சில நாடுகளில் அறுவடை தாமதமாகும். சர்வதேச பருத்தி உற்பத்தி 12 லட்சம் டன் குறைந்து 2.56 கோடி டன்னாகவும், பயன்பாடு 2 சதவீதம் அதிகரித்து 2.38 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014–15–ஆம் ஆண்டில் பயன்பாடு 3 சதவீதம் அதிகரித்து 2.46 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான்

அடுத்து வரும் ஆண்டுகளில் சீனாவில் பருத்தி பயன்பாடு குறையும் என தெரிகிறது. அதே சமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பருத்தி பயன்பாடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2013–14–ஆம் ஆண்டில் பயன்பாடு 12 சதவீதம் அதிகரித்து 51 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு பருவங்களாக பயன்பாடு சராசரியாக 45 லட்சம் டன்னாக உள்ளது. 2014–15 பருவத்தில் பயன்பாடு நடப்பு பருவத்தை காட்டிலும் 7 சதவீதம் அதிகரித்து 55 லட்சம் டன்னாக உயரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

category:

சுரங்கப் பணிகளுக்கு தடையால் முன்னேற்றம், ஏற்றுமதி பாதிப்பு மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து

Posted: 28 Dec 2013 09:32 AM PST

புதுடெல்லி

சுரங்கப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையால் பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தடை காரணமாக குறிப்பாக இரும்புத்தாது ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வருவாய் இழப்பு

''சுரங்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 10 கோடி டன் அளவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்து அன்னிய செலாவணி வருவாயை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைப் பொறுத்தவரை இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் 2,200 கோடி டாலருக்கும் அதிகமாக செலவு ஏற்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தடையை தொடர்ந்து கடந்த நிதி ஆண்டில் (2012–13) இரும்புத்தாது ஏற்றுமதி 1.80 கோடி டன்னாக பெரிதும் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டில் (2010–11) ஏற்றுமதி 16.80 கோடி டன்னாக இருந்தது. தடைக்கு முன்னால் 700 கோடி டாலர் அளவிற்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களால் நிலக்கரி சுரங்கப் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால் நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

ஏற்றுமதி வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளதால் வர்த்தக மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை 19,100 கோடி டாலராக உயர்ந்தது. இதனால் நாட்டின் மொத்த இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,820 கோடி டாலரை எட்டியது. இது ஜி.டீ.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக இருந்தது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் சுரங்கத் துறையின் பங்கு ஏறத்தாழ 14 சதவீதமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.5 சதவீதம் சரிவடைந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் உற்பத்தி 0.2 சதவீத அளவிற்கே குறைந்திருந்தது. ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் உற்பத்தி 2.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் ஒரு சதவீதம் மட்டுமே சரிவு ஏற்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 3.9 சதவீதம் குறைந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணில் நிலக்கரியின் பங்கு சுமார் 4.5 சதவீதமாக உள்ளது.

category:

இந்தியா நிலவுக்கு மனிதனை அனுப்புகிறது அதற்கான ஆயுத்த பணி தொடங்கியது

Posted: 28 Dec 2013 08:44 AM PST

நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டுகள் ஆகிறது.தற்போது இந்தியா அவரது காலடியை பின்பற்ற தயாராகிறது.இந்திய விமானப்படை  நிலவில் மனிதனை குடியேற்ற திட்டங்கள் தீட்டி அதற்கான ஆயுத்த பணியில் இறங்கி உள்ளது . சந்திரனுக்கு  மனிதனை அனுப்பவும்  அதற்கன  ஒரு நபரை  தேர்வு செய்யவும்  மற்றும் தேவையான சோதனைகள் மேற்கொள்ளளவும் இந்திய விமான படைக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதகவலை ஏர் மார்ஷல் டி.பி. ஜோஷி, ஆயுதப்படை  பொது இயக்குனர் ( மருத்துவ பிரிவு) ஒரு டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பபுவதற்கும் நபரை தேர்ந்து எடுப்பதற்கும்  இஸ்ரோவுக்கும் பாதுகாப்பு  அமைச்சகத்திற்கும்  இடையே ஒரு புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த திட்டத்திற்கா க இந்திய விமானப்படை ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நாங்கள் எங்கள் பணியை தொடங்கிவிட்டோம். நாங்கள் ஆய்வுக்கு உரிய சில உபகரணங்களை   இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டோம் என ஏர் மார்ஷல்  ஏ.கே.பெகல் தெரிவித்து உள்ளார்.
நிலவுக்கு செல்லும் திட்டத்திற்கு தகுதியான நபர்  போர் விமான விமானிகளே  என இந்தியன் விமானப்படை  கருதுகிறது.

category:

News Group Category:

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவால் 2-ந் தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

Posted: 28 Dec 2013 08:23 AM PST

புதுடெல்லி,

டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார். பதவி ஏற்ற 7 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அவரிடம் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 2-ந் தேதி, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்து, வாக்கெடுப்பை சந்திக்கிறார்.

இதற்காக, 1-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் 3-ந் தேதி நடைபெறுகிறது.70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில், குறைந்தபட்ச மெஜாரிட்டிக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இருப்பதால், மெஜாரிட்டிக்கு தேவையான பலம் உள்ளது.
 

category:

News Group Category:

2 வது டெஸ்ட்: 3 நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவிப்பு

Posted: 28 Dec 2013 07:31 AM PST

டர்பன்,

இந்தியா – தென்ஆப்பிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. முதல் நாளில் வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2–வது நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக உணவு இடைவேளைக்கு பிறகே தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. ரஹானே 51 ரன்களுடன் (121 பந்து, 3 பவுண்டரி) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.  பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க  நேற்றய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்து இருந்த்து

இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் தென் ஆப்ரிக்கா வீரர் கிரேம் ஸ்மித் (47) பீட்டர்சன்(62) ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.தொடர்ந்து அம்லா 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் 74 ரன்கள் குவித்து இருந்த நிலையில்,ஜடேஜா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடும்  காலீஸ் 78 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். 3 ஆம் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

category:

News Group Category:

நாட்டை ஆளும் தகுதி நரேந்திரமோடிக்கு உள்ளது: யோகா குரு பாபா ராம்தேவ்

Posted: 28 Dec 2013 06:56 AM PST

பெங்களூர்,

யோகா குரு பாபா ராம்தேவ் பெங்களூர் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:"நாட்டில் ஊழலை ஒழிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் தகுதியான ஒரே தலைவர் நரேந்திரமோடி தான். நரேந்திரமோடியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி மிக சிறியவர். காங்கிரஸ் தலைமை ஊழலில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் நிலவும் ஏழ்மை, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு காங்கிரசே காரணம்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். நரேந்திரமோடியை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் "நாட்டுக்காக ஓட்டு, மோடிக்காக ஓட்டு" என்ற முழக்கத்துடன் பிரசாரம் செய்வோம். பா.ஜனதா 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™