Daily Thanthi |
- ‘பேஸ்புக் சமூக வலைதளத்தில் நண்பராக ஏற்றுக்கொள்’ நடிகைக்கு தொல்லை; ஒளிப்பதிவாளர் கைது
- மேற்கு வங்காள மாநிலம்: குண்டு வெடிப்பில் 5 பேர் பலி; தீவிரவாதிகள் நாசவேலையா?
- நரேந்திர மோடி மீதான புகார் பற்றி விசாரிக்க கமிஷன் அமைப்பு ‘‘மத்திய அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’’ பாரதீய ஜனதா அறிவிப்பு
- விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மஞ்சளாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு ஜெயலலிதா உத்தரவு
- குஜராத் கலவரம் பற்றிய விசாரணை அறிக்கை; மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி ஆமதாபாத் கோர்ட்டு தீர்ப்பு
- மானியங்களுக்கான நிதி குறைகிறது: இந்தியாவில் பண வீக்கம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா நம்பிக்கை
- பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நல ஆலோசகர் குழு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் பேர்களுக்கு ஆலோசனை வழங்க திட்டம்
- இளம்பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: விசாரணை கமிஷன் அமைத்தது, பழிவாங்கும் நடவடிக்கை அல்ல மத்திய உள்துறை மந்திரி சொல்கிறார்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இந்தியா சிறப்பான தொடக்கம்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 226 ரன்கள் சேர்ப்பு பீட்டர்சன் அரைசதம் அடித்தார்
| ‘பேஸ்புக் சமூக வலைதளத்தில் நண்பராக ஏற்றுக்கொள்’ நடிகைக்கு தொல்லை; ஒளிப்பதிவாளர் கைது Posted: 26 Dec 2013 11:59 AM PST மும்பை, 'பேஸ்புக் சமூக வலைதளத்தில் நண்பராக ஏற்றுக்கொள்' என்று கூறி டி.வி. நடிகையை காரில் துரத்தி தொல்லை கொடுத்ததாக சினிமா ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்தனர். டி.வி. நடிகைக்கு தொல்லை மும்பையில் 'பியார் காபியாரா பியார் கா டார்ட் ஹை மித்தா மித்தா' என்ற டி.வி. தொடர் மூலம் பிரபலமானவர் டி.வி. நடிகை அலேபியா கபாடியா(வயது28). சம்பவத்தன்று அலேபியா தனது காரில் பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் இருந்து பைகுல்லா நோக்கி சென்று கொண்டிருந்தார். தாராவி பகுதியில் அவரது கார் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக காரில் வந்த வாலிபர் ஒருவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் என்னை உனது நண்பராக ஏற்றுக்கொள் என்று கூறி டி.வி. நடிகை அலேபியாவை தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசில் புகார் அப்போது அந்த வாலிபரின் பேச்சை அலேபியா அலட்சியம் செய்ததால் அவர் தனது காரை அலேபியாவின் கார் அருகில் நெருக்கமாக கொண்டு சென்று உரசியதாக கூறப்படுகிறது. இதில் அலேபியாவின் கார் லேசாக சேதம் அடைந்தது. மேலும் அந்த வாலிபர் காரில் விடாமல் தொந்தரவு செய்தபடியே வந்ததால் அலேபியா அந்த வாலிபரை மிரட்டும் நோக்கத்தில் அவரையும், அவரது காரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டதால் பயந்து போன அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் இது குறித்து அலேபியா சாகுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சினிமா ஒளிப்பதிவாளர் மேலும் செல்போனில் பிடித்திருந்த வாலிபரின் படம் மற்றும் கார் எண்ணை போலீசாரிடம் காண்பித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவியோடு விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த வாலிபர் தாராவி பகுதியை சேர்ந்த முத்துசுவாமி அரசு என்பதும், அவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து முத்துசுவாமி கூறுகையில், தன் மீது நடிகை அலேபியா வேண்டுமென்றே பழி சுமத்தியுள்ளதாக தெரிவித்தார். image: category:News Group Category: |
| மேற்கு வங்காள மாநிலம்: குண்டு வெடிப்பில் 5 பேர் பலி; தீவிரவாதிகள் நாசவேலையா? Posted: 26 Dec 2013 11:54 AM PST ஜல்பைகுரி, மேற்கு வங்காள மாநிலம், ஜல்பைகுரி நகரில் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். செயின்ட்பால்ஸ் பள்ளிக்கூடம் அருகே சிறிய ஆற்றின் தரைப்பாலத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. சைக்கிளில் சென்றவரும் இந்த சம்பவத்தில் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாதிகளின் நாசவேலையா? அல்லது சைக்கிளில் வெடிபொருட்களை எடுத்துச்சென்றபோது வெடித்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக, வடக்கு வங்காள போலீஸ் ஐ.ஜி. சசிகாந்த் புஜாரி தெரிவித்தார். காம்தாபூர் விடுதலை இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பின் தியாகிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் நிறுவன தினம் சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், தீவிரவாத இயக்கத்துக்கும் குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்துவருவதாகவும் ஐ.ஜி. சசிகாந்த் கூறினார். image: category:Tagging: |
| Posted: 26 Dec 2013 11:41 AM PST புதுடெல்லி நரேந்திர மோடி மீதான புகார் பற்றிய விசாரணைக்காக கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதீய ஜனதா, இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்து உள்ளது. விசாரணை கமிஷன் இளம்பெண்ணை ரகசியமாக உளவு பார்க்க ஏற்பாடு செய்ததாக குஜராத் முதல்–மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது கூறப்படும் புகார் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:– வழக்கு தொடருவோம் இளம்பெண்ணை உளவு பார்த்ததாக கூறப்படும் புகார் பற்றி விசாரணை நடத்த குஜராத் அரசு ஏற்கனவே ஒரு குழுவை நியமித்து உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மத்திய–மாநில உறவுக்கு விரோதமானது மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது ஆகும். எனவே விசாரணை கமிஷன் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம். அடக்குமுறை போக்கு நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி அடக்குமுறை போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது. எனவே மத்திய அ ரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மற்ற மாநில முதல்–மந்திரிகளும் குரல் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து காங்கிரஸ் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் ரீதியாக செயல்படுவதோடு மட்டுமின்றி, அவருக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது. இப்போது விசாரணை கமிஷனும் அமைக்க தீர்மானித்து உள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். ராஜ்நாத் சிங் மத்திய அரசின் இந்த நடவடிக்கை நரேந்திர மோடிக்கு இருக்கும் நற்பெயரை சீர்குலைக்கும் முயற்சி என்று பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்க ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் அவரது செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறி உள்ளார். விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவு எதேச்சதிகாரமானது என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதாகவும், எத்தகைய சவாலையும் சந்திக்க பாரதீய ஜனதா தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார். image: category:Tagging: |
| Posted: 26 Dec 2013 11:37 AM PST சென்னை, விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, மஞ்சளாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மஞ்சளாறு அணை திறப்பு தேனி மாவட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடி பாசனத்திற்காக 27–ந்தேதி (இன்று) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். பாசன வசதி பெறும் இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சுமார் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். image: category:Tagging: |
| குஜராத் கலவரம் பற்றிய விசாரணை அறிக்கை; மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி ஆமதாபாத் கோர்ட்டு தீர்ப்பு Posted: 26 Dec 2013 11:35 AM PST குஜராத் கலவரத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் நரேந்திரமோடிக்கு தொடர்பு இல்லை என்று விசாரணை குழு தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. ஆமதாபாத், குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் உள்பட ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு குல்பார்க் சொசைட்டி என்ற இடத்தில் நடந்த கலவரத்தின் போது முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உள்பட 68 பேர் பலி ஆனார்கள். இந்த வன்முறைக்கு நரேந்திர மோடி உள்பட மந்திரிகள், போலீஸ் அதிகாரிகள், பாரதீய ஜனதா நிர்வாகிகள் என 63 பேரின் சதித்திட்டமே காரணம் என இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. அறிக்கை தாக்கல் அந்த சிறப்பு புலனாய்வு குழு நரேந்திரமோடி உள்பட பலரிடம் விசாரணை நடத்தியது. பின்னர், கலவரத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என்று கூறி தனது விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8–ந் தேதி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை ரகசியமாக சரிபார்க்கும்படி ராஜு ராமச்சந்திரன் என்பவரை கேட்டுக் கொண்டது. அவரும் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பித்தார். கோர்ட்டில் மனு இதற்கிடையே, சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை எதிர்த்து ஜாகியா, ஆமதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட்டு பி.ஜே.ஞானாத்ரா முன்னிலையில் அந்த மனு மீது கடந்த 5 மாதங்களாக இருதரப்பு வக்கீல்களும் வாதாடி வந்தனர். ஜாகியா தரப்பில் வாதாடிய வக்கீல், இந்த கலவரத்துக்கு குஜராத் அரசின் மெத்தனம் தான் காரணம் என்று கோர்ட்டு கருதியதால் தான் சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது என்றும், மத கலவரம் நடந்த சமயத்தில் அந்த பகுதியில் உரிய நேரத்தில் ராணுவத்தை நிறுத்தவும், போலீசாரின் கலவர தடுப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தவறிய குஜராத் அரசின் மெத்தனம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தவில்லை என்றும் கூறினார். கலவரத்தை தடுக்க குஜராத் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது என்றும், மோடி மீதும் மற்றவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணையை வேறு ஒரு சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு ஞானாத்ரா, ஜாகியாவின் மனுவை நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார். வேண்டுமானால் மனுதாரர் இதுதொடர்பாக மேல் கோர்ட்டை அணுகலாம் என்றும் மாஜிஸ்திரேட்டு கூறினார். தீர்ப்பை கேட்க 74 வயதான ஜாகியா நேற்று கோர்ட்டுக்கு வந்து இருந்தார். தீர்ப்பை கேட்டதும் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்; இந்த தீர்ப்பினால் தான் சோர்ந்து விடவில்லை என்றும், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் கூறினார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு அவருக்கு ஒரு பின்னடைவு என்று பல்வேறு தரப்பினரும் கருதினர். இந்த நிலையில், அவருக்கு எதிரான மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு மிகப்பெரிய நிவாரணமாக கருதப்படுகிறது. பா.ஜனதா வரவேற்பு ஆமதாபாத் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பாரதீய ஜனதா வரவேற்று உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில்; இந்த தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றும், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக நாங்கள் கூறுவதை உறுதிப்படுத்துவது போல் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில்; ஆமதாபாத் கோர்ட்டின் இந்த தீர்ப்பு நரேந்திர மோடிக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும், அவருக்கு எதிராக காங்கிரசாலும் அக்கட்சியின் நண்பர்களாலும் பொய் சதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தார். குஜராத்தில் நடந்த கலவரம் துரதிருஷ்டமானது என்றும், மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது என்றும், ஆனால் வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் இந்த பிரச்சினையில் நரேந்திர மோடியின் மீது குற்றம்சாட்டப்பட்டதாகவும் அருண் ஜெட்லி கூறினார்.
News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 26 Dec 2013 11:31 AM PST சென்னை, இந்தியாவில் பண வீக்கம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார். நினைவு சொற்பொழிவு சென்னை கோட்டூரில் உள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' (எம்.எஸ்.இ.) வளாகத்தில் பொருளாதார மேதை ராஜா செல்லையாவின் முதலாவது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எஸ்.இ. நிறுவனமும், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், நினைவு சொற்பொழிவை மாண்டேக் சிங் அலுவாலியா நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:– மானியம் குறைகிறது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 2.4 சதவீதம் நிதி வெவ்வேறு வகையிலான மானியங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. மேலும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவுத் தொகை உயர்த்தப்பட வேண்டும். இதற்கான நிதியை அதிகரிப்பதற்காக 2.4 சதவீதத்தில் இருந்து மானியத் தொகையை ஒரு சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் உள்ளதுபோல், மானியத்தை பணமாக வழங்கும் திட்டம் நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டது. ஆதார் அடையாள அட்டை எண்ணை வைத்து வங்கிக் கணக்கில் இந்த தொகையை பயனாளிகள் பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை உலக அளவில் தொழில்நிறுவனங்களுக்கான வரிவிதிப்பு 20 சதவீதமாகும். இந்தியாவில் அது 34 சதவீதமாக உள்ளது. அதிக முதலீட்டைச் குவிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அதிக வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இந்த சலுகைகள், நடுத்தர தொழில் நிறுவனங்களையும் சென்றடைய வேண்டும். அரிசி போன்ற பல பொருட்கள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றில் 30 சதவீதம் வெளிச் சந்தைகளுக்கு செல்கிறது. ஆன்–லைன் மூலமாக பரிவர்த்தனை நடைபெற்றால், இந்தத் தவறுகளை செய்யும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. விருப்பமுள்ள மாநிலங்கள் இந்தத் திட்டத்தை பின்பற்றலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை உலகளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திறனோடு நமது நாட்டு பொருளாதாரம் இருந்தாக வேண்டும். இதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. அடுத்த 5 ஆண்டுகளில் மானிய ஒதுக்கீட்டை குறைத்து, வருவாயை பெருக்க வேண்டும். இதன் மூலம் மொத்த கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். சில நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. சராசரி கல்வி அறிவு இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் திறமைசாலிகள் குறைவாக உள்ளனர். அதிகமான தொழிலாளர்களிடம் திறமை குறைவு காணப்படுகிறது. அவர்களின் சராசரி கல்வியறிவு 5–ம் வகுப்பு என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், சீனாவில் இது 8–ம் வகுப்பு என்ற அளவில் உள்ளது. தொழிலாளர்கள் தொழில் திறமை பெற்றிருப்பதோடு, கல்வியறிவும் பெற்றிருந்தால் நாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், எம்.எஸ்.இ.–ன் தலைவருமான சி.ரங்கராஜன் பேசினார். வர்த்தக சபைத் தலைவர் ஜவஹர் வடிவேலு வரவேற்றார். எம்.எஸ்.இ. இயக்குனர் கே.ஆர்.சண்முகம் சொற்பொழிவாளர்களை அறிமுகம் செய்தார். பண வீக்கம் நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களின் கேள்விக்கு மாண்டேக் சிங் அலுவாலியா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2014–ம் ஆண்டில் பொருளாதாரம் ஸ்திரமான வளர்ச்சியை அடையும். இதனால் பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. நிதிஒதுக்கீடு குறித்து மத்திய அரசு மீது முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். அது மாநில சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதுபற்றி மத்திய அரசுதான் பதிலளிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரத்தில் தளர்ச்சி ஏற்பட்டது. அதை இந்திய பொருளாதாரத்தின் தவறு என்று கூறமுடியாது. ஏனென்றால், 2004–ல் இருந்து பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தின் நிலை நன்றாகத்தான் இருந்தது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள தளர்ச்சி என்பது, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தினால் வந்ததுதான். இந்த நிலையை சீராக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அலுவாலியா கூறினார். image: category: |
| Posted: 26 Dec 2013 11:31 AM PST சென்னை பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள். மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு பயம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு எழுதப்போகும் மாணவ–மாணவிகள் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறோமோ என்று எண்ணுவார்கள். சிலர் அதிகமாக பயப்படுவார்கள். அதுபோல மாணவர்கள் பலருக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வும் இருக்காது. பாலியல் குறித்து பல சந்தேகங்கள் இருக்கலாம். இது போன்ற விவகாரங்களில் மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்லாமல் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பேணவும் தமிழ்நாடு ழுழுவதும் 10 உளவியல் நிபுணர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 3 மாவட்டங்களில் தங்கள் பணியை செயல்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களும் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்தேகம் தீர்க்கப்படுகிறது உளவியல் நிபுணர்கள் இவர்களுக்காக புதிதாக வாங்கப்பட்ட வேன்களில் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைபடி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு மன அழுத்தம்போக்க கலந்தாய்வு நடத்துகிறார்கள். அப்போது பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கும் அந்த உளவியல் நிபுணர்கள் பதில் அளித்து சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள். இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:– வேன்களில் பள்ளிகளுக்கு சென்று உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இதுவரை 24 ஆயிரத்து 500 மாணவ–மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுவிட்டது. 1 லட்சம் பேருக்கு ஆலோசனை இந்த கல்வி ஆண்டில் மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். எனவே மாணவர்கள் தேர்வு பயம் இல்லாமல் தேர்வு எழுதவேண்டும். மேலும் எந்த சந்தேகம் இருந்தாலும் ஒளிவு மறைவு இன்றி உளவியல் நிபுணர்களிடம் சொல்லி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். image: category: |
| Posted: 26 Dec 2013 11:11 AM PST இளம்பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தது, பழிவாங்கும் நோக்கத்தில் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே கூறினார். மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இளம்பெண் உளவு பார்க்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஒன்றரை மாதங்களாகவே மத்திய அரசுக்கு கோரிக்கை வந்து கொண்டிருந்தது. 47 பெண்கள் அடங்கிய குழு, ஜனாதிபதியை சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்தது. அந்த மனு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்று, விசாரணை கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழிவாங்க அல்ல இந்த முடிவு, பழிவாங்கும் நடவடிக்கையோ, அரசியல் நடவடிக்கையோ அல்ல. உண்மை விவரங்கள் அடிப்படையில், மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. குஜராத் அரசு அமைத்த விசாரணை கமிஷனுடன் இதை ஒப்பிட முடியாது. அந்த கமிஷன், குஜராத்தில் நடந்த உளவு பார்த்தலை மட்டுமே விசாரிக்கும். ஆனால், இந்த கமிஷன், குஜராத் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் நடந்த சம்பவத்தை விசாரிக்கும். இமாச்சலபிரதேச முதல்–மந்திரி வீரபத்ரசிங், முந்தைய பா.ஜனதா ஆட்சிக்காலத்தில் உளவு பார்க்கப்பட்டது பற்றியும், பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லியின் டெலிபோன் அழைப்புகள் விவரம் கசிந்தது பற்றியும் இந்த கமிஷன் விசாரிக்கும். இவ்வாறு ஷிண்டே கூறினார். 1 |
| தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இந்தியா சிறப்பான தொடக்கம் Posted: 26 Dec 2013 11:11 AM PST டர்பன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2–வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. அஸ்வின் நீக்கம் இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலாவது டெஸ்ட் 'டிரா'வில் முடிந்ததால், இதில் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்துவதற்கான வியூகங்களுடன் இரு அணிகளும் களம் இறங்கியுள்ளன. ஆல்–ரவுண்டர் ஜேக் காலிசின் கடைசி டெஸ்ட் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய அணியில், முந்தைய டெஸ்டில் ஒரு விக்கெட் கூட எடுக்காத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். இதே போல் தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கழற்றிவிடப்பட்டு, ஆல்–ரவுண்டர் ராபின் பீட்டர்சன் இடம்பிடித்தார். கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் உடல்தகுதியை எட்டியதால் அணியில் தொடருகிறார். தவான் 29 ரன் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதன்படி ஷிகர் தவானும், முரளிவிஜயும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். தென்ஆப்பிரிக்கா வழக்கம் போல் வேகப்பந்து வீச்சு மற்றும் பவுன்ஸ் மூலம் தாக்குதல் தொடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து நின்ற ஷிகர் தவான் 29 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி), மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் 3–வது ஸ்லிப்பில் நின்ற பீட்டர்சனிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் விஜயுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை மிகவும் பொறுமையுடன், அதிக கவனமுடனும் எதிர்கொண்டனர். ஷாட்பிட்ச்சாக எகிறி வந்த பந்துகளை தொடுவதை தவிர்த்த விஜய், தோதான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் அபாரம் உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் ரன் சேகரிப்பில் வேகம் காட்டினர். கடந்த முறை (2010–ம் ஆண்டு) இந்திய அணி இங்கு ஆடிய போது ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவாக முழுக்க புற்களாக இருந்தன. ஆனால் இப்போது ஆடுகளம் கொஞ்சம் உலர்ந்து காணப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான அம்சம் என்றே சொல்லலாம். விஜய்–புஜாரா ஜோடியை பிரிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்க பவுலர்கள் தடுமாறினர். அரைசதம் கடந்த விஜய், உலகின் நம்பர் ஒன் பவுலாரான வெரோன் பிலாண்டரின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரி விளாசி அசத்தினார். புஜாரா தனது வழக்கமான ஸ்டைலில் விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 61 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது, மழைமேகம் சூழ்ந்து வெளிச்சம் குறைந்தது. இதையடுத்து போதிய வெளிச்சம் இல்லாதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மண்ணில் முதலாவது சதத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் விஜய் 91 ரன்களுடனும் (201 பந்து, 17 பவுண்டரி), புஜாரா 58 ரன்களுடனும் (117 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் (61 ஓவர் வரை) இந்தியா தவான் (சி) பீட்டர்சன் (பி) மோர்கல் 29 விஜய் (நாட்–அவுட்) 91 புஜாரா (நாட்–அவுட்) 58 எக்ஸ்டிரா 3 மொத்தம் (61 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 181 விக்கெட் வீழ்ச்சி: 1–41 பந்து வீச்சு விவரம் ஸ்டெயின் 16–6–49–0 பிலாண்டர் 14–4–39–0 மோர்னே மோர்கல் 12–3–26–1– காலிஸ் 7–1–23–0 ராபின் பீட்டர்சன் 12–2–43–0 image: category: |
| Posted: 26 Dec 2013 11:07 AM PST மெல்போர்ன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4–வது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நீக்கம் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் (5 போட்டி) ஆஸ்திரேலிய மண்ணில் நடந்து வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் கோப்பையை மீண்டும் தன்வசப்படுத்தி விட்டது. இந்த நிலையில் இவ்விருஅணிகள் இடையிலான ஆஷஸ் 4–வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் இரு மாற்றமாக மோசமான பார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் மேத் பிரையர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ சேர்க்கப்பட்டார். திடீரென ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஸ்வானுக்கு பதிலாக மான்டி பனேசர் இடம்பெற்றார். பனேசருக்கு இது 50–வது டெஸ்டாகும். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பீட்டர்சன் அரைசதம் தொடர்ந்து 4–வது முறையாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேப்டன் அலஸ்டர் குக்கும், மைக்கேல் கார்பெர்ரியும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 48 ரன்களில் பிரிந்தது. 27 ரன்கள் (47 பந்து) எடுத்த கேப்டன் குக், பீட்டர் சிடிலின் பந்து வீச்சில் 2–வது ஸ்லிப்பில் நின்ற மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கார்பெர்ரி (38 ரன்), ஜோ ரூட் (24 ரன்), இயான் பெல் (27 ரன்), பென் ஸ்டோக்ஸ் (14 ரன்), பேர்ஸ்டோ (10 ரன்) சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். இதற்கு மத்தியில் கெவின் பீட்டர்சன் மட்டும், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து விளையாடினார். அரைசதத்தை கடந்த அவர் 63 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் ஜெப் பாய்காட்டை (8114 ரன்) பின்னுக்கு தள்ளிவிட்டு 4–வது இடத்தை பிடித்தார். இங்கிலாந்து 226–6 ரன் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்த போதிலும், பீட்டர்சனின் போராட்டம் மட்டும் தளரவில்லை. நேற்றைய ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர்சன் 67 ரன்களுடனும் (152 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரிஸ்னன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தரப்பில் ரையான் ஹாரிஸ், மிட்செல் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளும், பீட்டர் சிடில், வாட்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. ரசிகர்கள் வருகையில் உலக சாதனை 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போட்டியை முதல் நாளில் மட்டும் 91 ஆயிரத்து 92 ரசிகர்கள் நேரில் வந்து பார்த்துள்ளனர். இது புதிய உலக சாதனையாகும். 1961–ம் ஆண்டு பிப்ரவரி 11–ந்தேதி இதே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5–வது டெஸ்டின் 2–வது நாள் ஆட்டத்தை 90,800 பேர் நேரில் ரசித்ததே இதற்கு முன்பு ஒரே நாளில் டெஸ்ட் போட்டியை அதிகம் பேர் கண்டுகளித்த வகையில் சாதனை எண்ணிக்கையாக இருந்தது. உலகின் பெரிய மைதானமான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் எம்.சி.ஜி மைதானம் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் பிறந்த இடமான மெல்போர்ன், ரசிகர்களின் எண்ணிக்கையில் மீண்டும் ஒரு முறை உலக சாதனையை முறியடித்திருப்பதாக மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் நிர்வாக செயல் அதிகாரி ஸ்டீபன் காப் பெருமிதத்துடன் கூறினார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
தள்ளுபடி
நரேந்திரமோடிக்கு எதிரான மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்ததும், ஆமதாபாத்தில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி.