Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


திடீர் உடல் நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி உடல் நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் அறிவிப்பு

Posted: 16 Nov 2013 05:31 AM PST

புதுடெல்லி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மும்பையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து மும்பை புறப்பட தயாரானார். அப்போது அவரது உடல் நலம் திடீரென்று பாதிக்கப்பட்டது.

கடுமையான காய்ச்சல் மற்றும் தலைசுற்றலால் அவதிப்பட்ட அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு முழு அளவிலான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து அப்துல்கலாமின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

image: 

category:

News Group Category:

பெல்காமில் பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்தது: குழந்தைகள் உள்பட 22 பேர் பலி; 2 மணிநேரம் தாமதமான மீட்பு பணிகள்

Posted: 16 Nov 2013 05:24 AM PST

பெங்களூர்

பெல்காமில் பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். 13 பேர் படுகாயம் அடைந்தார்கள். செல்போன் மூலம் தகவல் தெரிவிக்க முடியாததால் 2 மணிநேரம் தாமதமாக மீட்பு பணிகள் நடந்தன.

தொடரும் விபத்துகள்

பெங்களூரில் இருந்து கடந்த மாதம்(அக்டோபர்) 30–ந் தேதி ஐதராபாத்திற்கு ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஆந்திர மாநிலம் மெகபூநகரில் செல்லும் போது சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்ததில் 45 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன்பிறகு, கடந்த 14–ந் தேதி பெங்களூரில் இருந்து மும்பை சென்ற தனியார் பஸ், ஹாவேரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்தது.

இதில், 7 பேர் உடல் கருகி உயிர் இழந்தார்கள். மேலும் 6 பேர் படுகாயத்துடன் ஊப்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயரம் மக்கள் மனதில் இருந்து அகலுவதற்குள் மீண்டும் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 22 பேர் உயிர் இழந்த மற்றொரு பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

கூலி தொழிலாளர்கள்

யாதகிரி மாவட்டம் சுரப்புரா தாலுகா ஜம்மாலிபுரா கிராமத்தை அடுத்த உப்பல்தின், பாண்டா பகுதியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மினி லாரி ஒன்றில் மராட்டிய மாநிலம் சாவந்தவாடிக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் புறப்பட்டு சென்றார்கள். அந்த தொழிலாளர்கள் அனைவரும் மராட்டிய மாநிலத்திற்கு சென்று கல்குவாரி மற்றும் கரும்பு வெட்டும் வேலைக்காக சென்றனர்.

மராட்டிய மாநிலத்திலேயே தங்கி இருந்து வேலை செய்ய வேண்டும் என்பதால், தொழிலாளர்கள் தங்களது குழந்தைகள், குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்கள். மேலும் தங்களுக்கு தேவையான உணவுகள், உடைமைகளையும் லாரியில் வைத்திருந்தார்கள். நேற்று அதிகாலையில் பெல்காம் மாவட்டம் சவதத்தி தாலுகா அலக்கி கிராஸ் அருகே மினி லாரி வந்து கொண்டு இருந்தது.

22 பேர் பரிதாப சாவு

அப்போது அதே சாலையில் எதிரே ஒரு வாகனம் வந்தது. இதனால் மினி லாரியை இடபுறமாக டிரைவர் திருப்பினார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கி குழந்தைகள் உள்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்கள்.

மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்தது. படுகாயம் அடைந்தவர்கள், செல்போன் மூலம் விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார்கள். ஆனால் விபத்து நடந்த பகுதியில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டது.

5 பேர் கவலைக்கிடம்

இதனால் படுகாயம் அடைந்த ஒருவர், பக்கத்து கிராமத்திற்கு நடந்தே சென்று தகவல் தெரிவித்தார். அதன்பிறகு, அதிகாலை 5 மணியளவில் முர்கோடு போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் லாரிக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வெவ்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் பெல்காம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திர குப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

மீட்பு பணி தாமதம்

அப்போது விபத்தில் பலியான அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள் என்று தெரியவந்தது. மேலும் லாரி டிரைவர் கவனக்குறைவாக ஓட்டியதும், அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூங்கி விட்டதாலும் விபத்து நேர்ந்தது தெரிந்தது. விபத்தில் பலியானவர்களில் 10 பேர் சிறுவர்–சிறுமிகள். மேலும் 10 பெண்களும், 2 ஆண்களும் பலியாகி உள்ளனர்.

அதாவது தொழிலாளர்கள் கொண்டு சென்ற இரும்பு பெட்டிகள், பிற பொருட்கள், அவர்கள் மீது விழுந்து அமுக்கியதால் தான் குழந்தைகள் உள்பட அனைவரும் மூச்சு திணறி உயிர் இழக்க நேரிட்டு உள்ளது. மேலும் விபத்து நடந்ததும் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் போனதால், 2 மணி நேரத்திற்கு பிறகு தான் மீட்பு பணிகள் தொடங்கியது. இதுவும் சாவு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மந்திரி விரைந்தார்

முன்னதாக சம்பவ இடத்திற்கு மந்திரி பிரகாஷ் ஹூக்கேரி விரைந்து சென்று அதிகாரிகளிடம் விபத்து குறித்து விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் அவர் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் மந்திரி பிரகாஷ் ஹூக்கேரி அறிவித்து உள்ளார். இதற்கிடையில் விபத்தில் பலியானவர்களின் பெயர் விவரம் தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

பெரும் சோகம்

ரமேஷ்(வயது 3), குரு(2), கங்குபாய்(2), ஷில்பா பாய்(4), மற்றொரு ஷில்பா(8), அனிதா(10), மீனாட்சி(12), பாலய்யா சவுகான்(2), அனுஷியா பாய்(22), பார்த்திபாய்(29), ஷாருபாய்(28), பரசுவட்டாரா(60), ஸ்ருதிபாய் ரத்தோடா(26), சூசாபாய்(40), சுனிதா(20), ஜோதி(28), பாலுரத்தோடா பிரிஞ்ஜேஷ்(30), ராமு(30), பாண்டு(32) என்றும், இன்னும் 3 பேரின் பெயர்கள் தெரியவரவில்லை.

இந்த விபத்து குறித்து முர்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கூலி வேலைக்காக பிழைப்பு தேடி சென்றவர்கள் பலியான சம்பவம் யாதகிரி மற்றும் பெல்காம் மாவட்டம் மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

image: 

category:

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்

Posted: 16 Nov 2013 05:05 AM PST

சென்னை

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சினிமா படப்பிடிப்பிற்கு...

கேள்வி:– தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தினால் ஒரு நாள் வாடகையாக ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்று கேட்கிறார்களாமே?

பதில்:–தமிழக இளைஞர்களிடம் முறையான விளையாட்டு திறன்களை ஊட்டி வளர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தை தி.மு.க. அரசு மேம்படுத்தியுள்ளது. 2004–ம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு சட்டம் இயற்றப்பட்டபோதிலும், இதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கித்தந்தது, 2006–ல் அமைந்த தி.மு.க. அரசுதான்.

இப்பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழகம் எங்கும் ஏறத்தாழ 70 தொலைதூர மையங்களை அமைத்தது தி.மு.க. அரசு. மேலும், இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என ஏறத்தாழ 80 பணியிடங்களை உருவாக்கி 21–7–2006 அன்று ஆணை பிறப்பித்து, நியமனம் செய்து இப்பல்கலைக்கழகம் முறையாக செயல்பட தி.மு.க. அரசு வழிவகுத்தது. அத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் இந்த பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்காக, 125 ஏக்கர் பரப்புடைய நிலத்தை 14–5–2008 அன்று வழங்கி, அந்த இடத்தில் 8 கோடியே 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் இப்பல்கலைக்கழகத்திற்கான நிர்வாக வளாகம், கல்வி வளாகம், மாணவ–மாணவியர் விடுதிகள், ஊழியர் குடியிருப்புகள் என 67 ஆயிரத்து 978 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் கட்ட அனுமதித்து; அவற்றை கட்டி முடித்து தி.மு.க. ஆட்சியின் போது, கடந்த 25–2–2011 அன்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் 3932 பேருக்கு விளையாட்டுத்துறை சார்ந்த பட்டங்களையும், பட்டயங்களையும் வழங்கியுள்ள நிலையில், சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஐந்து பெருமக்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியது. அதாவது; டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், நா.சீனிவாசன், கி.ஸ்ரீகாந்த், டாக்டர் மு.அம்ஸ்ராஜ் ஆகியோருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனவே திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

அழகான இடத்தில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால், அங்கே அடிக்கடி திரைப்படப் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதற்கு இதுவரை வாடகை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பயிர் காப்பீடு திட்டம்

கேள்வி:– அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையினை நிராகரிக்க வேண்டுமென்று பா.ஜ.க.வும் கூறுகிறதே?

பதில்:–பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா இதைப்பற்றி மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கே கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், ''ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோ தற்போது தயாரித்து தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் கருத்துகள் திருத்தி எழுதப்பட்டிருக்கலாம், அல்லது நீக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைத்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டு குழுத்தலைவர், பி.சி.சாக்கோ அனைத்து விதிகளையும் மீறியுள்ளார். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல்'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அந்தக் குழுவிலே இடம் பெற்றிருந்த பா.ஜ.க. தலைவர்கள் இறுதி அறிக்கையில் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பதையும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கேள்வி:–மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை, தமிழக அரசின் வேளாண்துறை புறக்கணிப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:–ஆமாம். வடகிழக்கு பருவமழை சரியில்லாத காரணத்தால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஒழுங்காக நீர்வரத்து இல்லாத காரணத்தால், குறுவை, சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் குறுவை பொய்த்துவிட்டது. இந்த நிலையில்தான் சம்பா சாகுபடி நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று கணித்த அரசு, பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. வேளாண் துறை, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதற்கான விவசாயிகளின் பங்களிப்பு தொகையை அரசே வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு வேளாண் துறையில் ஏற்படுத்தப்படவே இல்லையாம். இனியாவது தமிழக அரசின் வேளாண் துறையினர், தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி விரக்தியில் இருக்கும் விவசாயிகளை ஊக்குவித்து, பயிர்க் காப்பீடு செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

category:

News Group Category:

ஏற்காடு தொகுதிக்கான இணைவு பட்டியல் வெளியீடு: 37 நாட்களில் 5,556 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு

Posted: 16 Nov 2013 04:35 AM PST

சேலம்

ஏற்காடு தொகுதிக்கான இணைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. 37 நாட்களில் மட்டும் புதிதாக 5,556 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தல்

கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் 13–ந்தேதி தமிழக சட்டசபைக்கு நடந்த பொதுத்தேர்தலில் ஏற்காடு தனித்தொகுதி(எஸ்.டி)யில் அ.தி.மு.க. சார்பில் பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சி.பெருமாள்(வயது60) வேட்பாளராக போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வனை விட 37,582 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

அப்போது தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,09,981 ஆகும். பதிவான வாக்குகள் 1,79,492. இவற்றில் சி.பெருமாள்(அ.தி.மு.க.) வாங்கிய ஓட்டுகள் 1,04,221 ஆகும். தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 66,639 வாக்குகள் பெற்றார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 18–ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளரான சி.பெருமாள் மாரடைப்பால் உயிரிழந்தார். அதையொட்டி தற்போது இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 4–ந்தேதி நடக்கிறது. நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்து விட்டது.

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் கடந்த 1.10.2013 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரப்படி மொத்தம் 2,34,734 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள்–1,16,958. பெண் வாக்காளர்கள்–1,17,771. இதரர்(திருநங்கைகள்)–5.

புதிய வாக்காளர்கள் சேர்க்கை

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியிலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கும் பணி கடந்த அக்டோபர் 1–ந்தேதி முதல் 31–ந்தேதிவரை நடத்தப்பட்டது. கெங்கவல்லி(எஸ்.சி.), ஆத்தூர்( எஸ்.சி.), ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 10 சட்டமன்ற தொகுதியில் மட்டும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர 1,16,168 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவற்றுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி(2014) 6–ந்தேதி வெளியிடப்படுகிறது.

 இவற்றில் ஏற்காடு தொகுதியில் மட்டும் புதிய வாக்காளர்களுக்கும் ஓட்டும் போடும் உரிமை அளிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல்பணி மட்டும் கடந்த 6–ந்தேதி வரை நீடிக்கப்பட்டது. அதன்படி, புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்தல் என மொத்தம் 12,979 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இறுதி இணைவுப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கலெக்டர் வெளியிட்டார்

இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கலெக்டர் மகரபூஷணம் ஏற்காடு தொகுதிக்கான இணைவு வாக்காளர் பட்டியலை நேற்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.செல்வராஜ், சேலம் உதவி கலெக்டர் சதீஷ், தேர்தல் தாசில்தார் முகமது குதரத்துல்லா, தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன்(ஏற்காடு), சுரேஷ்(சேலம்), அ.தி.மு.க. சார்பில் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகர அவைத்தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு., சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ராமராஜன், தி.மு.க. சார்பில் மாநகர பொருளாளர் அன்வர், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.டி.பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினருக்கு ஏற்காடு தொகுதி வாக்காளர் பட்டியல் தொடர்பான சி.டி.க்களை கலெக்டர் மகரபூஷணம் வழங்கினார்.

இது தொடர்பாக கலெக்டர் மகரபூஷணம் நிருபர்களிடம் கூறியதாவது:–

5,556 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு இணைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1.10.2013 முதல் 6.11.2013 வரை 37 நாட்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 12,979 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான மனுக்கள் 9,871 மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றில் முகவரியில் இல்லாதது, இறந்தவர்கள் என மொத்தம் 4,315 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

மீதம் உள்ள 5,556 வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,232 பேர், பெண் வாக்காளர்கள் 3,323 பேர் மற்றும் திருநங்கை ஒருவரும் இடம் பெற்றுள்ளார். ஆக ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண் வாக்காளர்கள்–1,19,190. பெண் வாக்காளர்கள்–1,21,094, இதரர்–6 ஆகும்.

20–ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

இணைவு வாக்காளர் பட்டியல் வருகிற 20–ந்தேதி வரை சேலம், வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் மட்டும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஏற்காடு தொகுதியில் நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் செய்வது முடிந்து விட்டது.

வருகிற 18–ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 20–ந்தேதி மனுக்கள் வாபஸ் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இணைவு வாக்காளர்கள் பட்டியல் விவரம் கொடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.

கூடுதலாக 29,909 வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப்போடும் வாய்ப்பு

ஏற்காடு இடைத்தேர்தலில் கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் 2,09,981 பேர் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னர் கடந்த ஜனவரி 2013–ம் ஆண்டு முதல் 18 வயது பூர்த்தியானவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. இவற்றில் தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு கடந்த 1.10.2013 அன்று புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கப்பட்டன. அதன்படி 24,353 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இறுதிப்பட்டியலில் 2,24,734 பேர் இடம் பெற்றனர்.

அதன் பின்னர் ஏற்காடு இடைத்தேர்தலுக்காக சிறப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த 1.10.2013 முதல் 6.11.2013 வரை (37 நாட்கள்) 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இணைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கூடுதலாக 5,556 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களை விட, வருகிற டிசம்பர் 4–ந் தேதி நடக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் 24,353+5,556=29,909 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்று வாக்களிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

News Group Category:

ஏற்காடு இடைத்தேர்தல்: அமைச்சரை சந்தித்த அதிகாரி இடைநீக்கம் கலெக்டர் நடவடிக்கை

Posted: 16 Nov 2013 04:17 AM PST

சேலம்

ஏற்காடு இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க. அமைச்சரை வீட்டில் சந்தித்து பேசிச்சென்ற ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலரை இடைநீக்கம் செய்து கலெக்டர் மகரபூஷணம் நடவடிக்கை எடுத்தார்.

தேர்தல் விதிமீறல்

ஏற்காடு இடைத்தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் 4–ந்தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்குவது, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை வழங்கும் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

 மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் யாரும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக மறைமுகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவதோ, ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளிடம் தொடர்பு வைக்கவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்து இருந்தது. அதையும் மீறி அதிகாரிகள் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையோ அல்லது இடமாற்றம் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அமைச்சரை சந்தித்த அதிகாரி

இந்த நிலையில் நேற்று  தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியை, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயராமன் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது. இவர் சமீபத்தில்தான் தலைவாசல் ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து பதவி உயர்வு மூலம் ஏற்காடு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மகரபூஷணத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதுவரை தேர்தல் விதிகள் தொடர்பாக எத்தனை புகார்கள் வந்தன என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் மகரபூஷணம் கூறியதாவது:–

இடைநீக்கம்

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை என்னிடம் நேரடியாக எவ்வித புகாரும் வரவில்லை. தலைமை தேர்தல் அதிகாரிக்குத்தான் புகார் அனுப்பப்பட்டு எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து அமைச்சர்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை.

தேர்தல் வேளையில் அமைச்சரை சந்தித்து பேசியதாக ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மீது வந்த புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட முழுமையாக செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

category:

News Group Category:

தஞ்சை–திருவாரூர்–நாகை மாவட்டங்களில் பலத்த மழை

Posted: 16 Nov 2013 04:11 AM PST

தஞ்சை

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விடிய,விடிய மழை பெய்தது. அதனால் மின்சாரம் தாக்கி தந்தை–மகன் உள்பட 3 பேர் பலியாகினர்.

புயல்–மழை

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணக்குடி கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது50) விவசாயி. இவரது மகன் ரவிவர்மன்(30). இவர் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

மினசாரம் தாக்கி பலி

இந்நிலையில்  காலை ரவிவர்மன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது கருப்புகோவில் தெருவில் மின்சார கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காத ரவிவர்மன் மின்கம்பியை மிதித்து விட்டார்.

இதில் அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே ரவிவர்மன் சத்தம் போட்டார். அதைத்தொடர்ந்து மகனை காப்பாற்ற ராஜேந்திரன் ஓடி வந்தார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 2 பேரும் அதே இடத்தில் இறந்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

என்ஜினீரிங் கல்லூரி மாணவர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கடக்கம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவருடைய மகன் கணேசன் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஒருதனியார் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக கடக்கம் கிராமத்திற்கு வந்தார்.

நாகை மாவட்டத்தில் வீசிய புயல் காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் ஒரு சில இடங்களில் சாய்ந்து கிடந்தன. மாணவன் கணேசன், மயிலாடுதுறை அருகே உள்ள நெடுமருதூரில் இருந்து, தனது சொந்த ஊரான கடக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது நெடுமருதூரில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை கடந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் மோட்டார் சைக்கிளில் சென்ற கணேசனை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News Group Category:

அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா

Posted: 16 Nov 2013 04:00 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவையட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபம் ஏற்றுவதற்காக ராட்சத கொப்பரையை கோவில் ஊழியர்கள்  அதிகாலை மலைக்கு தூக்கி சென்றபோது எடுத்த படம்.

7

திருக்கார்த்திகை திருவிழா

Posted: 16 Nov 2013 03:50 AM PST

திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தீபவிளக்குகளை தேர்வு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.
 

9

ஐயப்பா சாமிக்கு மாலை

Posted: 16 Nov 2013 03:46 AM PST

கார்த்திகை மாதம் பிறப்பதை அடுத்து ஐயப்பா சாமிக்கு மாலை அணிவிப்பவர்கள் மாலையை தேர்வு செய்யும் காட்சியை படத்தில் காணலாம்.
 

8

டெஸ்ட்போட்டியில் இருந்து சச்சின் ஓய்வு

Posted: 16 Nov 2013 03:37 AM PST

இன்று நடந்த டெஸ்ட் போட்டியோடு சச்சின் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.  ஆட்டம் முடிந்ததும் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுடன் சச்சின் தெண்டுல்கர்.

4


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™