Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித் பங்கேற்பு, கொழும்பு நகரில் காமன்வெல்த் மாநாடு இன்று தொடக்கம்; இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி விவாதிக்கப்படுமா?

Posted: 14 Nov 2013 11:09 AM PST

கொழும்பு நகரில் இன்று தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கொழும்பு,

காமன்வெல்த் அமைப்பில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கனடா, மொரீஷியஸ் உள்பட 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இன்று தொடங்குகிறது

இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் பல்வேறு நாடுகள் கண்டித்து உள்ளன. இதனால், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை காரணம் காட்டி கனடா, மொரீஷியஸ் ஆகிய நாடுகள் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்து உள்ளன.

சல்மான் குர்ஷித் பங்கேற்பு

இந்தியாவும் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மத்திய அரசை வற்புறுத்தின. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். என்றாலும் பலத்த எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.

நியாயப்படுத்தினார்

இதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்குடன் தனி விமானத்தில் கொழும்பு புறப்பட்டு சென்ற சல்மான் குர்ஷித், தன்னுடன் வந்த நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை நியாயப்படுத்தினார்.

ஈழத்தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டி இருப்பதாகவும், தேசத்தின் நலலை கருத்தில் கொண்டுதான் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா முடிவு செய்தாகவும் அப்போது அவர் கூறினார்.

மாநாட்டில் விவாதம்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் பிரச்சினை கிளப்ப இருப்பதாகவும், மேலும் அதிபர் ராஜபக்சேயை தனியாக சந்தித்து பேச இருப்பதாகவும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளார். மாநாட்டில் கலந்து கொள்வதால், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களை (போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்) ஆதரிப்பதாக ஆகிவிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, போரின் போது இலங்கையில் நடைபெற்ற அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் பொதுச்செயலாளர்

காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா கூறுகையில்; மனித உரிமைகள், ஜனநாயகம், நீதித்துறை போன்ற காமன்வெல்த்தின் பொதுவான பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையுடன் பேசப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அப்போதுதான் நல்லிணக்க முயற்சியில் முன்னேற்றம் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

கார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்

Posted: 14 Nov 2013 10:53 AM PST

பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர். அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் எனும் இத்தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார். தற்போது சோளிங்கர் என்று அழைக்கிறார்கள்.

யோக நரசிம்மர் கோவில்

ஒரு கடிகை நேரம் (24 நிமிடங்கள்) சோளிங்கபுரத்தில் தங்கியிருந்தாலே எத்தகைய பாவியானாலும் முக்தி தரும் திருத்தலமாக விளங்குவதால் சோளிங்கபுரத்திற்கு கடிகாசலம் (திருக்கடிகை) எனும் பெயர் ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் ஒரு கடிகை நேரம் சோளிங்கபுரத்து யோக நரசிம்மரைத் துதித்து, அதன் பயனாக பிரம்மரிஷி பட்டத்தையும் பெற்றார்.

ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், 'கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்   களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்' என்று கூறிவிட்டார்.

அனுமனுக்கு தனி சன்னிதி

இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி இக்கோவிலில் இருக்கிறது. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்.

இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார். அம்ருதவல்லித் தாயார் தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.

பஞ்சாமிர்த பிரசாதம்

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந் நாத முனிகளும், மணவாள மாமுணியும், ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்த மலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் நான்கு திருக்கரங்களுடன் யோக ஆஞ்சநேயர் உள்ளார். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாய£சம் நரசிம்மருக்கு மிகவும் உகந்தது.

வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை வாங்கி உண்டால், மிகுந்த செல்வம் கிடைக்கும். நோய்கள் அகலும்.

தரிசிக்கும் முறை

இங்கு தாயார், பெருமாள், பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். நம் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால், அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைக்க, நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவாராம். எனவே இந்த வரிசைப்படியே பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

தொட்டாச்சாரியார் எனும் பக்தர் வருடம் தோறும் காஞ்சீபுரம் வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். முதுமை காரணமாக அவர் வரமுடியாத நிலையில் பெருமாளே இத்தலத்தில் காஞ்சீபுரம் கருடசேவை தரிசனத்தைக் காட்டி அருளியதாக கூறப்படுகிறது. சித்திரை உற்சவத்தின் 9 நாட்களும் மலையில் இருந்து நரசிம்மர் சார்பாக சக்கரத்தாழ்வார் இறங்கி, ஊருக்குள் வலம் வந்து திரும்பவும் மலைக்குச் செல்வார். அவ்வேளையில் சக்கரத்தாழ்வாரே, தரிசிக்கும் பக்தர்களின் துயரங்களை போக்கிடுவார்.

1500 படிகள் கொண்ட மலை

இத்தல நரசிம்மருக்கு வேண்டுதல் எதுவும் செய்யாமல் 1,500 படிகள் மலை ஏறிவந்து தரிசித்தாலே பலன் தரும் அதீத சக்தி உள்ளது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக கூற்று நிலவுகிறது.

பில்லி, சூன்யம், தீவினை, மனநோய், மனநிலை பாதிப்பு, மனக்குறை, மரண பயம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை தரிசித்தால் உடனடியாக துன்பங்கள் நீங்கப்பெறுவர் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும்.

கார்த்திகையில் கண் திறக்கும்

ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர், கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள்வதாக ஐதீகம். அதுவும் கார்த்திகை மாத வெள்ளி மற்றும் குறிப்பாக கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிற்றுக்  கிழமைகளிலும் யோக நரசிம்மர் யோக நிலை விடுத்து நமக்கு அருள்பாலிக்க கண் திறப்பார்.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

category:

கார்த்திகைதீப திருவிழா

Posted: 14 Nov 2013 10:51 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா தேரோட்டம் நடந்தது. அண்ணா மலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் பெரியதேர் ஆடிஅசைந்து வந்த காட்சி.

5

தாமதித்தாலும் அற்புதம் நிச்சயம் கிறிஸ்துவுக்குள் அன்பான தேவனுடைய பிள்ளைகளே!

Posted: 14 Nov 2013 10:47 AM PST

இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் தேவனுடைய சமூகத்தில் அமர்ந்து வேதத்தை தியானம் பண்ணும்போது ஆவியானவர் என் உள்ளத்திலே அதிக நாள் காத்திருப்பதினால் என்ன லாபம் உண்டு? என்ற கேள்வியை எழுப்பி அதற்குரிய பதிலையும் வேத வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தினார். அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வுலகத்தின் மக்கள் பல காரியங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். பரீட்சை எழுதுகிற பிள்ளைகள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பார்கள். படித்தவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா? என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.

அதைப்போல வாலிப வயதைஅடைந்தவர்கள் திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள், ஊழியக்காரர்களோ தேவனுடைய வல்லமையை பெறுவதற்காக காத்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காத்திருந்த போதிலும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு சில மாதங்களோ, சில வருடங்களோ ஆகலாம். அப்போது இடைப்பட்ட காலங்களில் காத்திருக்கிறதினால் ஏற்படும் துன்பத்திற்கும், நிந்தைக்கும், சோர்வுகளுக்கும், அவிசுவாசத்திற்கும், பின்மாற்றத்திற்கும் அளவேயில்லை.

சில தேவனுடைய பிள்ளைகள், தேவன் மேல் அளவிட முடியாத விசுவாசம் வைத்திருக்கிற போதிலும் அவிசுவாசிகளால் வருகிற நிந்தையான வார்த்தைகளை கேட்கும் பொழுது மனம் உடைந்து போகிறார்கள்.

ஆனால் கர்த்தருக்காக காத்திருக்கும்போது காலதாமதமானாலும் நாம் விரும்புவதற்கு மேலான அற்புதத்தையே காண்போம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! கர்த்தரிடத்தில் காத்திருக்கும் போது நாம் வேண்டுவதற்கும், நினைப்பதற்கும் அதிகமாய் அவர் நம்மை ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.

அற்புதங்கள் நடைபெறும்வரை காத்திருங்கள்

'அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து,  தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்'. யோவான்.5:3

பெதஸ்தா குளம் என்றாலே கிருபையின் வீடு என்று அர்த்தம். இந்த குளத்தின் அருகே பலநாட்களாக பல வியாதிக்காரர்கள் படுத்திருப்பார்கள். படுத்திருக்கிற அனைவருக்கும் அற்புதங்கள் நடைபெறுவதேயில்லை.

ஆனால் வேதம் சொல்லுகிறது, 'படுத்திருக்கிற அனைவரும் குளத்திலிருக்கிற தண்ணீரையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் தூதன் வந்து திடீரென்று குளத்தைக் கலக்கும் போது யார் முந்தி இறங்குகிறார்களோ அவர்கள் எப்படிப்பட்ட வியாதியுடையவராயிருந்தாலும் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்கள்'.

அருமையான தேவனுடைய பிள்ளையே! கிருபையின் வீட்டுக்குள் இருந்தாலும், கிருபையின் தேவன் இரங்குகிற வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

காத்திருக்கிற நேரத்தில் சோர்வு நிச்சயம் வரத்தான் செய்யும். ஆனாலும் இந்த வேத பகுதியை சற்று தியானம் பண்ணிப்பாருங்கள்.

கலங்காத குளத்தில் அற்புதத்திற்கு இடமேயில்லை. கலக்கப்பட்ட குளத்தில் கலங்கியதற்கு பின்னால் தான் அற்புதமே நிகழ்கிறது. தேவனுடைய அற்புதங்களுக்காக காத்திருக்கிறவர்கள் சொல்லுகிற வார்த்தை 'சகோதரனே நான் பல நாட்களாகக் காத்திருக்கிறேன். கர்த்தர் இன்னும் குடும்பத்தில் அற்புதம் செய்யவில்லை. அதற்கு மாறாக குடும்பத்திலே எப்போதும் குழப்பமும். கலக்கமுமாகவே இருக்கிறது' என்று சோர்ந்து போய் சொல்வதுண்டு.

சாலமோன் ராஜா  சொல்லுகிறார், 'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்'. நீதி.13:12.

ஆனால் குளம் கலக்கப்பட்ட பிற்பாடு தான் அற்புதம் நிகழ்கிறது என்று வேதம் சொல்லுகிறது.

எனவே சோர்ந்து போகாதிருங்கள். கலக்கம், குழப்பம் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால் அதற்குப்பின் அற்புதம் நிகழப்போகிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். காத்திருக்கிற தேவனுடைய பிள்ளையே! உன் கண்கள் அற்புதங்களை நிச்சயம் காணும்.

தேவ வார்த்தை நிறைவேறுகிற வரைக்கும் காத்திருங்கள்

'என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். யோவான் 2:4

கர்த்தருடைய பிள்ளையே! யோவான் 2–ம் அதிகாரத்தில் நம் ஆண்டவர் கானாவூர் கல்யாணத்திற்கு போனார். கல்யாண வீட்டிற்கு இயேசு போன போது திராட்சை ரசம் குறைவுபட்டதை சொன்னார்கள்.

அதற்கு இயேசு சொன்னார், என்னுடைய வேளை இன்னும் வரவில்லை. திராட்சை ரசத்திற்காக ஒரு கூட்ட ஜனங்கள் காத்துக் கொண்டிருந்த போது வேலைக்காரர்கள் இயேசு அற்புதம் செய்வார் என நம்பி அவரிடம் காத்திருந்தார்கள்.

இயேசுவினிடத்தில் வந்தவர்களுக்கு ஏமாற்றமான வார்த்தைகள் காத்திருந்தது. ஆனால் இயேசு தாமதித்தாலும் காலியான கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி அவர்களை ஏவி தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.

இயேசுவின் வார்த்தை நிறைவேறுகிற வரைக்கும் காத்திருந்த விருந்தினரும், கல்யாண வீட்டினரும் இயேசுவின் அற்புதங்களைக் கண்டார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் வாழ்வில் இதுவரை அற்புதம் நடக்கவில்லையே என்று வேதனையோடு கூட கலங்கி கொண்டிருக்கிறீர்களா? நிச்சயம் நம் ஆண்டவர் உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்வார்.

கானாவூர் கல்யாணத்தில் வெறும் தண்ணீரை ருசியுள்ள திராட்சை ரசமாக மாற்றின தேவன் உங்கள் வாழ்வில் இதுவரை நடைபெறாத காரியங்களை நேர்த்தியாக நடத்தித் தருவார்.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–54

category:

வீணடிக்கும் அருட்கொடைகள்

Posted: 14 Nov 2013 10:44 AM PST

இறைவன் நமக்கு எண்ணிலடங்கா அருட்கொடைகளை வழங்கி இருக்கின்றான். அவற்றுள் உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை அத்தியாவசியத் தேவைகளான அருட்கொடைகள் ஆகும். இவை இல்லாவிட்டால் மனித வாழ்வே நிலை குலைந்துவிடும்.

ஆனால், இவை இறைவன் தந்திருக்கும் இணையற்ற அருட்கொடைகள் என்ற எவ்வித சிந்தனையும் இன்றி இவற்றை வீணடிக்கும் மக்களை எங்கும் காணலாம்.

என் வீட்டு மின்சாரம், என் பணம், நான் விலை கொடுத்து வாங்கும் உணவு, தண்ணீர். ஆகவே அவற்றை நான் எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்வேன். இதில் வீணடித்தல் எங்கிருந்து வந்தது என்று நாம் வாதிடலாம்.

ஆனால், காசு இருந்தும் இவை எதுவும் கிடைக்காமல் அல்லாடும் மக்களை என்றாவது பார்த்து இருக்கின்றீர்களா...? தண்ணீர் இன்றி கண்ணீருடன் மாட்டுச்  சிறுநீரைக் குடித்து வாழும் மக்கள்... மின்சாரம் இல்லாமல் ஆதிவாசிகள் போன்று இருண்ட காலத்தில் வாழும் மக்கள்.. உணவின்றி வீதியோரம் வீழ்ந்து கிடக்கும் மக்கள்.. இவர்களில் எவரையாவது சந்தித்தது உண்டா...?

நாம் வாழும் பூமியில் தான் இவர்களும் வாழுகின்றார்கள் என்பதாவது ஞாபகம் இருக்கின்றதா...?

திருமண வீடுகளில் வீண் விரயம் செய்யப்படும் உணவுகள்... பொது இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் அலட்சியமாக வீணடிக்கப்படும் தண்ணீர்... ஆளில்லா இடங்களில் ஓடும் மின்விசிறிகள், ஒளி வீசும் மின்விளக்குகள்.. இவையெல்லாம் நாம் வீணடிக்கும் இறைவனின் அருட்கொடைகள்.

நாம் ஏன் இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கின்றோம்?

மறுமையில் இது குறித்தும் நாம் நிச்சயமாக விசாரிக்கப்படுவோம் என்பது குறித்தாவது நாம் யோசித்து இருக்கின்றோமா?. ஆம், அதில் எவ்வித ஐயமும் இல்லை. விசாரணை நடக்கத்தான் போகின்றது.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: ஒருநாள் நண்பகல் வேளை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது இல்லத்தில் இருந்து வெளியே வந்தார்கள். அதேவேளை அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் வெளியே வருகின்றார்கள்.

'இந்நேரத்தில் ஏன் வெளியே வந்தீர்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரிடமும் வினவினார்கள்.

அதற்கு, 'பசியின் காரணமாக நாங்கள் வெளியே வந்தோம்' என்று இருவரும் கூறினர்.

உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் உயிர் யார் கைவசம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது ஆணை! நீங்கள் இருவரும் எதற்காக வெளியே வந்தீர்களோ, அதற்காகவே நானும் வெளியே வந்தேன்'.

(மனிதருள் மாணிக்கங்கள் இம் மூவர் வீட்டிலும் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உன்னதத் தலைவர்களின் நிலையைப் பாருங்கள்)

'சரி, புறப்படுங்கள்' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்ஸாரித் தோழர் ஒருவரின் வீட்டுக்கு வருகை தந்தனர்.

அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அபூபக்கரும் (ரலி), உமரும் (ரலி) தம் வீட்டுக்கு வருகை புரிந்ததைக் கண்ட அந்த நபித்தோழர், மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே! மிகச் சிறப்புமிக்க விருந்தினர்களைப் பெற்றவர் என்னைத் தவிர இன்று இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது' என்றார்.  

உடனே ஒரு பேரீத்தம் பழக்குலையை அவர்களிடம் கொண்டு வந்து 'சாப்பிடுங்கள்' என்றார். அக்குலையில் காய், பழம், கனிந்த பழம் ஆகிய அனைத்து வகை பேரீத்தம் பழமும் இருந்தன. பின்னர் ஓர் ஆட்டை அறுத்து விருந்து படைத்தார். அவர்கள் அந்த இறைச்சி, பேரீத்தம் பழக்குலை ஆகியவற்றிலிருந்து சாப்பிட்டார்கள்.

வயிறு நிரம்பி தண்ணீரும் அருந்தியபின், அருமை நபி (ஸல்) அருகில் இருந்த அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம் கூறினார்கள்:

'என் உயிர் எந்த இரட்சகனின் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணை! மறுமை நாளில் இந்த அருட்கொடைகள் குறித்து நீங்கள் வினவப்படத்தான் போகின்றீர்கள். பசியுடன் நீங்கள் உங்கள் இல்லங்களில் இருந்து வெளியே வந்தீர்கள். இப்போது இந்த அருட்கொடைகளைப் பெற்றவர்களாக நீங்கள் உங்கள் இல்லங்களுக்கே திரும்புகின்றீர்கள்'.

அப்போது உமர் (ரலி) வினவினார்: 'இறைத்தூதரே! சாப்பிட்ட பின் அசுத்தமாக வெளியேறும் இந்த பேரீத்தம் பழங்கள், உணவு,  தண்ணீர் இவை குறித்துமா நாம் விசாரிக்கப்படுவோம்?'.

அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஆம், இது குறித்தும் நாம் நிச்சயம் விசாரிக்கப்படுவோம்' (முஸ்லிம்).

சுய விசாரணை தேவை

நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீருக்கும், ஒவ்வொரு துகள் உணவுக்கும் இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவற்றை நாம் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம்.

உலகின் ஒரு மூலையில் எங்கோ ஒருவர் பசியுடன் இருக்கின்றார் என்றால், மற்றொரு மூலையில் எங்கோ ஒருவர் அவருக்கான உணவை அபகரித்து வைத்துள்ளார் அல்லது வீணடிக்கின்றார் என்று பொருள். அவ்வாறுதான் நாம் வீணடிக்கும் தண்ணீரும் மின்சாரமும்.

இந்த அருட்கொடைகளை வீணடிக்கும் காலம் எல்லாம், இது வேறு யாருக்கோ சொந்தமானது என்ற உணர்வு வரவேண்டும்.

அத்துடன் நிச்சயம் நாளை மறுமையில் இறைவனின் சந்நிதியில் நிற்கும்போது இது குறித்தும் நாம் விசாரிக்கப்படுவோம், பதில் கூறித்தான் ஆகவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வேண்டும்.

மவ்லவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

category:

துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் பிறப்பது எப்போது?

Posted: 14 Nov 2013 10:42 AM PST

கேள்வி:– எனது பெயர் ஜெயலட்சுமி, எனது கணவர் பெயர் ஜோதிமணி. எங்களுக்கு 2007–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வருடம் முடிந்துவிட்டது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்தும் பணம் விரயமானதே தவிர பலன் கிடைக்கவில்லை. எனவே, மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றோம். எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? எத்தனை குழந்தைகள் இருக்கும், தானாகவே கரு உருவாக வாய்ப்பிருக்கிறதா? இல்லை சோதனை குழாயின் மூலம் முயற்சி செய்யலாமா?. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? (ஜெ.ஜெயலட்சுமி, சென்னை–87).

பதில்:– உங்கள் இருவர் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தாமதமானாலும் கூட இரண்டு குழந்தைச் செல்வங்கள் பிறக்கும் அமைப்பு இருக்கிறது. ஜாதகப்படி ஒருவருக்கு புத்திர ஸ்தானாதிபதி வலுவாக இருந்தால் தான் குழந்தைச்செல்வம் கைகூடும். அது வலுவிழந்து இருந்தால் புத்திரபாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படும்.

உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை புத்திர ஸ்தானத்தில் ராகு இருக்கிறார். அந்த ஸ்தானாதிபதி புதன் நீச்சம் பெற்று வலிமை இழந்திருக்கிறார். இருப்பினும் நீங்கள் செய்த ஒரு பாக்கியம் புத்திர ஸ்தானத்தை குரு பார்க்கிறார். எனவே, நிச்சயமாக குழந்தைச் செல்வம் பிறக்கும் அமைப்பு உண்டு.

அதே நேரத்தில் உங்கள் கணவர் ஜாதகத்தில் 2–ல் கேது இருப்பதால், 8–ல் கேது ராகு அமைந்து சர்ப்ப தோஷ அமைப்பில் இருக்கிறது. ஆயினும் புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் குரு வீட்டில் இருப்பதால் புத்திரபாக்கியம் உண்டு. நீங்கள் பிறந்த தேதி '8' எண் ஆதிக்கத்தில் இருக்கிறது. உங்கள் திருமண நாளும் 15.11.2007 என்று '8' கூட்டுத் தொகை அமையும் விதத்தில் உள்ளது. இது நன்மைதான். திருமணம் முடிந்து ஆறுவருட இடைவெளியில் நீங்கள் செய்யும் பரிகாரங்களின் மூலமும், மருத்துவ சிகிச்சையின் மூலமும் பலன்கள் கிடைக்கும். செயற்கை முறையில் அல்லாமல் இயற்கையிலேயே கரு உருவாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கத்தில் புத்திர ஸ்தானம் அமையுமானால் புத்திர பாக்கியம் ஏற்படுவதில் தாமதம் வரத்தான் செய்யும். கனவிலும் சரி, காணும் இடங்களிலும் சரி பாம்பு தென்படும். நம்பிக்கையோடு நாகசாந்தி  பரிகாரத்தை யோகபலம் பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து நவம்பர் 15–ம் தேதிக்கு மேல் செய்ய வேண்டும். அதன்பிறகு மாற்று மருத்துவ சிகிச்சைகளை ஓரளவு மேற்கொண்டால் போதும். இயற்கையிலேயே சந்தான விருத்தி உருவாகிவிடும்.

இதே அமைப்பிலுள்ள ஜாதகத்தைப் பெற்ற சென்னையைச் சார்ந்த ஆடிட்டர் ஒருவருக்கு 16 ஆண்டுகளாக பிள்ளைகள் இல்லை. நாக சாந்தி செய்தால் பிள்ளை பிறக்கும் என்று கூறினேன். அந்த கணவன்–மனைவி இருவர் ஜாதகத்திலும் 5–ம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தது. உங்கள் ஜாதகத்தைப் போலவே குரு அந்த ஸ்தானத்தைப் பார்த்து புனிதமடைய வைத்தது. எனவே, நம்பிக்கையோடு நாக சாந்தி பரிகாரத்தையும், நாள்தோறும் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்ற குரு வழிபாட்டையும் மேற்கொண்டார்கள். நீங்கள் கோவில்களில் விளக்கேற்றி வழிபடுவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த தம்பதியரையும், குரு சன்னிதியில் 3 விளக்குகள் ஏற்றச் சொல்லியிருந்தேன். கணவருக்காக ஒரு விளக்கு, மனைவிக்காக ஒரு விளக்கு, பிறக்கப்போகும் குழந்தைக்காக ஒரு விளக்கு என்று சொல்லியதும் அதேபோல தம்பதியர் ஏற்றி வழிபட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு கரு உற்பத்தியாகி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கின்றது. நாகதோஷ பரிகாரம் செய்து குழந்தை பிறந்ததால் 'நாக ராணி' என்று பெயர் சூட்டினேன்.

அதே போல நீங்களும் குரு சன்னிதியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். முறையாக சர்ப்ப சாந்தியும், மேற்கொள்ளுங்கள். துள்ளி விளையாடும் பிள்ளை செல்வம் புத்தாண்டு 2014–ல் உருவாகி மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

கேள்வி:– எனது ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும், திருமணம் எவ்வாறு அமையும்? (ப.செந்தில்நாதன், திருவாரூர்).

பதில்:– தங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு 12–ல் மறைந்திருக்கிறார். எனவே 29 வயது முடிந்து 30 வயது ஆரம்பம் முதல் யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். கடக ராசி என்பதால் கவலைப்படத் தேவை இல்லை. தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் நீங்கள். கலியுகத்திற்கு கடக ராசி என்பது ஒரு பழமொழி. எனவே புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகிய அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். பொது வாழ்விலும் தலைமைப்  பொறுப்பேற்று சில நல்ல காரியங்களை முடிப்பீர்கள். 6–க்கு அதிபதி சூரியன் நீச்சம் பெற்றிருப்பது யோகம் தான். எனவே எதிர்பாராத விதத்தில் திடீர் யோகம் கிடைக்கலாம். நவம்பர் 15–க்கு மேல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அர்த்தாஷ்டமச் சனி விலகிய பிறகு திருமண யோகம் உண்டு.

கேள்வி:– என் மகள் பூங்கொடியின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவளுக்கு 33 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கும்பகோணத்தைச் சுற்றியிருக்கின்ற நவக்கிரக கோவில் அனைத்திற்கும்சென்று பூஜித்து வந்தோம். காளகஸ்தி, திருவிடந்தை, திருமணஞ்சேரி போன்றவற்றிற்கு சென்று வந்தோம். இருந்தும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் வேதனையில் உள்ளோம். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?. (எம். ராசு, வேலூர்).

பதில்:– தங்கள் புதல்வி ஜாதகத்தில் லக்னத்திற்கு 8–ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் நீச்சம் பெற்று விட்டார். எனவே தான் திருமணத் தடை ஏற்படுகிறது. ராமேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப் பெரும்பள்ளம் ஆகிய ஸ்தலங்களில் வாய்ப்பு இருக்கும் பொழுது சென்று வழிபாடு செய்து வாருங்கள். கடகத்தில் குரு சஞ்சரிப்பதற்கு மூன்று மாதம் முன்னதாக வரும் திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரலாம். பெண்ணைக் காட்டிலும் மாப்பிள்ளையின் வயது குறைவாக இருக்கலாம். பிரதோஷத்தன்று நந்தியெம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்ல விதத்தில் வரன் அமையும்.

கேள்வி:– என் மகள் சோபனா ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவளது படிப்பு, வேலை, எதிர்காலம் எப்படியிருக்கிறது? (வி.லதா, மதுரை).

பதில்:– தங்கள் புதல்வி சோபனா ஜாதகம் நன்றாக இருக்கிறது. சூரியன், சுக்ரன், புதன் ஆகியவை ஒன்று கூடி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். லக்னத்திலேயே குரு வீற்றிருக்கிறார். எனவே, எதிர்காலம் இனிமையாக இருக்கும். கல்வி ஸ்தானத்தில் சனி பலம்பெற்று இருப்பதால் பொறியியல் துறைப் படிப்பு மேற்கொள்வது நல்லது. சந்திரமங்கள யோகம் இருப்பதால் திருமணம் சிறப்பாக முடியும். தற்சமயம் ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட்டு வருவது நல்லது.

கேள்வி:– என் மகனின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவனின் எதிர்காலத்தை எண்ணி கவலையாக இருக்கிறது. 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் பிறந்ததிலிருந்து இதுவரை கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்து விட்டு தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறான். அவன் வாழ்க்கையில் வளம்பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும். (கோ.விவேகானந்தம், பெங்களூர்–86)

பதில்:– தங்கள் புதல்வருடைய பிறந்த தேதி நட்சத்திரம், ராசி எழுதியிருக்கிறீர்கள். ஜாதக நகலை அனுப்பவில்லை. ஜாதக நகல் இருந்தால் தான் துல்லியமான பதிலை அறிந்து கொள்ள முடியும். நட்சத்திர அடிப்படையில் அசுவதி என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சங்கடங்கள் அகலும். சந்தோஷங்கள் கூடும். வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

category:

காசியில் கருடன் இல்லை

Posted: 14 Nov 2013 10:38 AM PST

ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ராமன், தன் மனைவி சீதாதேவியுடன் இணைந்து ராவணனைக் கொன்ற பாவம் தீர சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ஆஞ்சநேயரை அனுப்பி ஒரு சுயம்பு லிங்கம் கொண்டுவரக் கட்டளையிட்டார். ஆஞ்சநேயர் காசிக்கு சென்றபோது அங்கு ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன. அதில் எது சுயம்பு லிங்கம் என்று தெரியவில்லை. அப்போது ஒரு லிங்கத்திற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டது. லிங்கத்தின் மேல் இருந்த பல்லி சத்தமிட்டது. இதை அடையாளமாகக் கொண்டு லிங்கத்தை தூக்கிக் கொண்டு பறக்க முயன்றார் ஆஞ்சநேயர். ஆனால் காசியின் காவலரான பைரவர் அனுமனை தடுத்தார். அப்போது தேவர்கள், பைரவரை வணங்கி, காரணம் கூறியதும் ஆஞ்சநேயரை பைரவர் விடுவித்தார். ஆனாலும் தன்னை மீறி செயல்பட்ட கருட இனம் காசி எல்லைக்குள் பறக்கவும், பல்லி சத்தமிடவும் தடை விதித்தார். இன்றளவும் காசியில் கருடனும், பல்லியும் காண்பது அரிதாக இருக்கிறது.
 

category:

தவறை உணர்ந்தால் மன்னிப்பு

Posted: 14 Nov 2013 10:36 AM PST

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது கீரனூர். இந்த ஊரில் சிவலோகநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவபெருமான் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவராக அருள்புரிந்து வருகிறார். சிவபெருமானை புறக்கணித்து, தட்சனம் யாகம் நடத்தியபோது அதில் அக்னி பகவான் கலந்துகொண்டான். இதனால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானான். அக்னி பகவான் கிளியாக மாறினான். தன் தவறை உணர்ந்த அக்னி பகவான், கிளி வடிவத்திலேயே இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டான். அவன் செய்த தவறை மன்னித்த சிவபெருமான், மீண்டும் அவனுக்கு பழைய உருவத்தை பெறும்படி அருளினார். பக்தர்கள் அறியாமல் செய்த தவறுகளை, மனம் வருந்தி சொன்னால், அவர்களை மன்னிக்கும் இறைவனாக இத்தலத்தில் ஈசன் இருக்கிறார்.

category:

சச்சின் தெண்டுல்கர்

Posted: 14 Nov 2013 10:16 AM PST

200-வது டெஸ்ட் போட்டியுடன் ஒய்வுபெறும் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் மும்பை மைதானத்தில் அவரது உருவ தபால்தலை வெளியிடப்பட்டது. தபால் தலையை மத்தியமந்திரி கபில்சிபல் வெளியிட சச்சின் தெண்டுல்கர் பெற்றுக்கொண்ட

1

நரேந்திரமோடி

Posted: 14 Nov 2013 10:13 AM PST

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த பாரதீய ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மாலை அணிவித்த போது எடுத்த படம்.
 

7


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™