Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


இளவரசன் மரணம் குறித்து தர்மபுரியில் இன்று விசாரணை

Posted: 07 Aug 2013 11:01 PM PDT


இளவரசன் மரணம் குறித்து தமிழக அரசு அமைத்திருக்கும் நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணையம் இன்று தர்மபுரியில் விசாரணையைத் தொடங்குகிறது. தர்மபுரி பயணியர் மாளிகையில்  விசாரணை தொடங்க உள்ளது. இளவரசன் குடியிருந்த நத்தம் காலனி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் நீதிபதி சிங்காரவேலு விசாரணை நடத்துவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இளவரசன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.

சவூதி, மலேசியா, எகிப்தில் இன்று ரமலான் கொண்டாட்டம்

Posted: 07 Aug 2013 10:58 PM PDT


சவூதி அரேபியா,மலேசியா, இந்தோனேசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதேபோல், கேரளாவிலும் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். 30 நாட்கள் நோன்பிருந்து இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

கல்பாக்கம் அணு மின்நிலையத்தைப் புகைப்படம் எடுத்தவரிடம் தீவிர விசாரணை

Posted: 07 Aug 2013 10:56 PM PDT


கல்பாக்கம் அணு மின்நிலையத்தைப் புகைப்படம் எடுத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் மேப்ஸ் அணு மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு புதிய அணு மின்நிலைய கட்டுமானப் பணிகள் தனியார் ஒப்பந்ததாரர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஈடுபட்டு இருந்த மதுராந்தகம் லத்தூரைச் சேர்ந்த சாபீர் அலி, அணு மின்நிலையப் பகுதிகளைப் புகைப்படம் எடுத்துள்ளார். இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சாபீர் அலியைப் பிடித்து கல்பாக்கம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இலங்கையின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து டெசோ சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Aug 2013 10:48 PM PDT


இலங்கை அரசு, 13 ஆவது சட்டதிருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, டெசோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்றுள்ளார். திருச்சி இலங்கையின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து டெசோ சார்பில் திருச்சியில் நடத்தப்படும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. கோவை கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம் எதிரே டெசோ ஆர்ப்பாட்டம், திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொள்கிறார்.

திண்டிவனம் அருகே அவ்வப்போது எரியும் குழந்தையின் உடல்: இன்று மருத்துவக்குழு ஆய்வு

Posted: 07 Aug 2013 10:43 PM PDT


திண்டிவனம் அருகே டி.பரங்கனி கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் உடலில் எந்த காரணமும் இல்லாமல் தீப்பற்றி எறிவதாக கூறி அக்குழந்தையின் குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீ-யிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு குழந்தையின் உடல் எரிவதற்கு என்ன காரணம் என கண்டறியாமல், குழந்தையையும், அதன் தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

Posted: 07 Aug 2013 10:32 PM PDT


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட அனைவரும் உறுதியேற்போம் என அவர் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான வாழ்க்கை நெறிகளை நபிகள் நாயகம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள்: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Posted: 07 Aug 2013 10:02 PM PDT


அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான பைக்கா போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். ஆனந்தவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். 14, 17 மற்றும் 19 வயதினர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. கபடி, வாலிபால், பந்து எறிதல், ஹாக்கி, பூபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் களைகட்டி வருகின்றன.

மதுரையில் மண்டல அளவிலான தடகளப்போட்டி: திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்கள்

Posted: 07 Aug 2013 10:00 PM PDT


மதுரையில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகளில், இளம் வீரர்- வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இளம் வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான குண்டு எறிதல், 17 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 800 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபந்தயம், 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகளுக்கு தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் டிப்பர் லாரி மோதி விபத்து

Posted: 07 Aug 2013 09:59 PM PDT


மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியில் வேன் மற்றும் கார் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியது. இதில் வேனில் பயணம் செய்த பக்தர்கள் மற்றும் அவர்கள் பின்னே காரில் வந்துகொண்டிருந்தவர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 07 Aug 2013 09:57 PM PDT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் டிராக்டரும் இருசக்கர வாகனமும் மோதிகொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். பட்டுக்கோட்டைப் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை பகுதிகளில் மணல் ஏற்றி செல்லும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™