Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


தேனி மாவட்டத்தில் காவல்துறை சோதனை: 20 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Posted: 08 Jul 2013 10:54 PM PDT


தேனி மாவட்டம் கம்பத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 20 கிலோ போதைப்பொருள் பிடிபட்டது. இதையடுத்து போதைப்பொருளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 08 Jul 2013 10:48 PM PDT


குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐந்தருவியில் நீர் கலங்கிய நிலையில் கொட்டத் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பிரதான அருவியில் நீர்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தடை விலக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே குழந்தைக்கு பாலியல் வன்முறை

Posted: 08 Jul 2013 10:38 PM PDT


ஈரோடு அருகே இரண்டு வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பதும், மாநகராட்சியில் ஓப்பந்த பணியாளராக பணியாற்றுவதும் தெரியவந்தது.

ஈரோடு பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Posted: 08 Jul 2013 10:33 PM PDT


ஈரோடு மாநகராட்சியின் 31-வது வார்டு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நடத்தினர். இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் அவர்களிடம் சத்திரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஈரோடு நசியனூர் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க மீன் வளத்துறை நடவடிக்கை

Posted: 08 Jul 2013 10:16 PM PDT


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மீன் உற்பத்தியை பெருக்க மீன் வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2வாரத்தில் மட்டும் 8 லட்சம் மீன்கள் மேட்டூர் அணையில் விடப்பட்டுள்ளன. மீன் வளத்துறை மையத்தின் மீன் விதைப்பண்ணையின் மூலம், உருவாக்கப்பட்ட மீன்கள் மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் விடப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையிலிருந்து 500டன் மீன் உற்பத்தி செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாத்மா காந்தி உதவியாளரின் மலரும் நினைவுகள்…..

Posted: 08 Jul 2013 09:56 PM PDT


அகவை 90-ஐ தாண்டியபோதிலும், ஆற்றல் குறையாதவர். மற்றவர்களின் உதவியை ஒருபோதும் எதிர்பார்க்காதவர்; தனது செயல்களால் நம் அனைவருக்கும் முன்னுதாரணமாய் திகழ்பவர்; இதுபோன்ற பெருமைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டவர் மகாத்மா காந்தியின் உதவியாளர் கல்யாணம்.  எல்லா வேலைகளுக்கும் அடுத்தவர் உதவியையே நாடும் மனிதர்கள் நிறைந்த உலகில், 91 வயதான முதியவர் ஒருவர் தன் சொந்த வேலைகள் அனைத்தையும் தானே செய்துகொள்கிறார். இவர் வேறு யாருமல்ல, காந்தியின் நேர்முக உதவியாளராக இருந்த கல்யாணம்.1944ஆம் ஆண்டு காந்தியிடம் உதவியாளராகச் சேர்ந்து, அவர் இறக்கும் போதும் அவருடன் இருந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமான பேச்சு. சமூகம் குறித்த கவலை,அரசியல் மீதான விமர்சனம் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அவருடன் பேசும்போது அந்தக்கால நினைவுகள் ஒரு படம் போல் நகர்கின்றன. மிகவும் துடிப்புடன், செயல் வேகத்துடன், புலன்களின் விழிப்புடனும் வியப்பூட்டுகிறார் கல்யாணம். தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே செய்வதோடு, தூய்மையின் மீது மிகுந்த பற்றுடன் விளங்குகிறார். தன் வீட்டைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலை செய்கிறார். தானே சமைத்து உண்ணுகிறார். தன் உடைகளைத் தானே துவைத்துக்கொள்கிறார். தூய்மை, பண்பாடு, உடலுழைப்பு ஆகியவற்றை இன்னமும் பின்பற்றுகிறார் கல்யாணம். எந்தப் பொருளையும் அவர் வீனாக்குவதில்லை. தேவையில்லாக் காகிதங்கள், நாளிதழ்களை விற்பனை செய்வதற்காகச் சேமித்து வைக்கும் கல்யாணம், அதிலும் ஏதாவது எழுதிவிட்டுதான் வைக்கிறார். பாத்திரங்களைச் சுத்தீகரிக்கும் நீரைக் கூட வீனாக்காமல் சேமித்துச் செடிகளுக்கு ஊற்றுகிறார்.   எளிமை, நேர்மை, சுறுசுறுப்பு ஆகியவற்றை கற்றதுபோல சிக்கனத்தையும் காந்தியிடமிருந்தே கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் கல்யாணம். 91ஆவது வயதிலும் தனி மனித ஒழுக்கத்துக்குச் சான்றாக விளங்குவதோடு, தனது சொத்துக்களின் பெரும்பகுதியை சமூக நலப்பணிகளுக்காக வழங்கி, நாளைய சமுதாய நலனுக்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வரும் கல்யாணம் அவர்கள், இன்றைய இளைய சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 08 Jul 2013 09:04 PM PDT


இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை விடுவிக்க மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கடந்த 6ம் தேதியன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் மன்னார் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 21 பேரும் அனுராதாபுரம் சிறையில் உள்ளனர்.  

உத்தரகண்டில் மழையினால் வீட்டின் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி

Posted: 08 Jul 2013 07:34 PM PDT


உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் மீண்டும் மழை பெய்வதால், ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக உத்தரகண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றின் கரையோரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 4,700 பேர் காணாமல் போய்விட்டதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல்கள் இல்லையென்ற போதிலும், அதனை மறைக்கும் கேள்வியே எழவில்லை என உத்தரகண்ட் சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

தருமபுரி இளவரசன் மரணம்: விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு

Posted: 08 Jul 2013 07:24 PM PDT


தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இளவரசனின் மரணம் குறித்து அவரது தந்தை சந்தேகங்கள் எழுப்பி உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள அவர், இது குறித்த உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தருமபுரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா 50 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேவையான மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்றதன் மூலம் அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

Posted: 08 Jul 2013 07:18 PM PDT


எல்லையில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி அருகே நேற்று காலையில் திடீரென இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது. அப்போது சோதனைச் சாவடியைக் கடந்து கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் இரண்டு பேர், குண்டு வெடிப்பில் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து குண்டு வெடிப்பில் காயமடைந்தர்களை தேடும் பணி மீண்டும் நடைபெற்றது. அதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவர் மீட்கப்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™