puthiyathalaimurai.tv online |
- தஞ்சையில் நடைபெற்றுவரும் கால்பந்து:அத்திவெட்டி அணி வெற்றி
- கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை கால்பந்து:உருகுவே அணியை வீழ்த்தியது ஸ்பெயின்
- மேலூரில் சட்ட விரோதமாக வெடிப்பொருட்கள் பதுக்கியவர் கைது
- கரூரில் லாரி மோதி ஒருவர் பலி: பொதுமக்கள் சாலைமறியல்
- மூன்றாவது அணி குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து
- கருணாநிதி தலைமையில் இன்று கூடுகிறது திமுக நிர்வாக குழு கூட்டம்
- மத்திய அமைச்சரவையில் சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு?
- விறுவிறுப்பு! 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டி; டி.ராஜா மனுதாக்கல்
- விழுப்புரம் அருகே மணல்லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
- டெல்லி விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி
| தஞ்சையில் நடைபெற்றுவரும் கால்பந்து:அத்திவெட்டி அணி வெற்றி Posted: 16 Jun 2013 11:19 PM PDT தஞ்சை மாவட்டம் அத்திவெட்டியில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில் அத்திவெட்டி அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணி அதிராம்பட்டினம் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அத்திவெட்டி அணி வீரர் நிலவழகன் ஒரு கோல் அடித்தார். அதிராம்பட்டினம் அணி கோல் அடிக்க முயன்றும் இறுதிவரை கோல் அடிக்கமுடியவில்லை. அதனால், அத்திவெட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 30 அணிகள் பங்கேற்றுள்ளன. |
| கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை கால்பந்து:உருகுவே அணியை வீழ்த்தியது ஸ்பெயின் Posted: 16 Jun 2013 11:09 PM PDT கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணி உருகுவே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. பிரேசிலில் உள்ள ரெசிப் நகரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்பெயின் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் பெட்ரோ அடித்த கோல் மூலம் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து 32-வது நிமிடத்தில் ராபர்ட்டோ சொலாடா ஸ்பெயினுக்கான இரண்டாவது கோலை அடித்தார். ஸ்பெயின் அணி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்ற நிலையில் உருகுவே அணி பதிலடி கொடுக்க போராடியது. 88-வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் சவுரஸ் ஒரு கோல் அடித்தார். எனினும் ஆட்ட நேர இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆப்ரிக்க சாம்பியன் நைஜீரியா அணியை ஓசானியா பிரிவு சாம்பியன் தாகிதி அணி எதிர்கொள்கிறது. |
| மேலூரில் சட்ட விரோதமாக வெடிப்பொருட்கள் பதுக்கியவர் கைது Posted: 16 Jun 2013 10:26 PM PDT மதுரை மாவட்டம் மேலூரில் சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முகமதியாபுரம் பகுதியை சேர்ந்த சேட் என்பவர் பட்டாசுகள் விற்பதற்காக உரிமம் பெற்றுள்ளார். இந்நிலையில் சேட்டின் வீட்டில், சட்ட விரோதமாக வெடிப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 300 மீட்டர் கருந்திரி,12 கிலோ கருமருந்து,12 கிலோ சல்பர் பவுடர், 20 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சேட்டை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். காணொளி:<மேலூரில் சட்ட விரோதமாக வெடிப்பொருட்கள் பதுக்கியவர் கைது> |
| கரூரில் லாரி மோதி ஒருவர் பலி: பொதுமக்கள் சாலைமறியல் Posted: 16 Jun 2013 10:12 PM PDT கரூரை அடுத்த பஞ்சமாதேவியில் லாரி மோதி உயிரிழந்தவரின் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெரூரிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஹரிஹரன் பலத்த காயமடைந்தார். விபத்தால் கோபமடைந்த பொதுமக்கள் லாரியை தாக்கி சேதப்படுத்தினர். மோகன்ராஜின் சடலத்தை எடுக்கவிடாமல் சுமார் 2 மணி நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இறுதியில் காவல்துறையினர் சமாதானப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். |
| மூன்றாவது அணி குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து Posted: 16 Jun 2013 10:07 PM PDT இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவின்றி, மாற்று அணி சாத்தியமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்து்ள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது அணி என்று சொல்வதால் மட்டும் அதனை உருவாக்க முடியாது என அவர் கூறினார். மாற்றுக் கொள்கைகள், பொதுவான திட்டம் என ஏற்படுத்தும்போது மட்டும்தான் மூன்றாவது அணி உருவாகும் என அவர் குறி்ப்பிட்டார். மாற்றுக் கொள்கைகள்தான் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என குறிப்பி்ட்ட சீதாராம் யெச்சூரி, மாநிலக் கட்சிகள் மதம் மற்றும் சாதிய ரீதியில் பிரிந்து கிடப்பதாக கவைல தெரிவித்தார். காணொளி:<மூன்றாவது அணி குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து> |
| கருணாநிதி தலைமையில் இன்று கூடுகிறது திமுக நிர்வாக குழு கூட்டம் Posted: 16 Jun 2013 09:52 PM PDT திமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை பத்து மணிக்கு நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தி்ல் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொளி:<கருணாநிதி தலைமையில் இன்று கூடுகிறது திமுக நிர்வாக குழு கூட்டம்> |
| மத்திய அமைச்சரவையில் சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு? Posted: 16 Jun 2013 09:43 PM PDT மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவை உறுப்பினரான அவர் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன. புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் மாலை பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரில், மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மாகென் ,ஜோஷி ஆகியோர் பதவி விலகினர். மத்திய அமைச்சரவையில் இருந்து ஏற்கனவே தி.மு.க அமைச்சர்கள் விலகிய பிறகு அவர்கள் வகித்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.பெரும்பாலான அமைச்சர்கள் கூடுதலாக ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால் காலியாக உள்ள துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். காணொளி:<மத்திய அமைச்சரவையில் சுதர்சன நாச்சியப்பனுக்கு வாய்ப்பு?> |
| விறுவிறுப்பு! 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டி; டி.ராஜா மனுதாக்கல் Posted: 16 Jun 2013 09:32 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரை 6 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய செயலளார் டி. ராஜா இன்று காலை 11.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் டி. ராஜா மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, டி.ராஜா நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அ.தி.மு.க., ஆதரவு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இன்று கடைசி நாள் என்பதால், 8வது வேட்பாளராக, தே.மு.தி.க., வேட்பாளரும் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 இடங்களுக்கு 7 பேர்: தமிழகத்தில் இந்த ஆண்டு காலியான 6 உறுப்பினர் பதவிக்கு 7 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள, 6 இடங்களுக்கு, அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுடன் சேர்த்து, 7 பேர் போட்டியிடுவதால், மாநிலங்களவைத் தேர்தல், விறுவிறுப்பு நிறைந்ததாக மாறியுள்ளது. தி.மு.க.,வுக்கு நெருக்கடி: தே.மு.தி.க., மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளரை அறிவித்தால் முதல் நெருக்கடி தி.மு.க.,விற்கு தான் ஏற்படும் என கூறப்படுகிறது. தே.மு.தி.க.,விற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அதன் பலம் 22 பிளஸ் 5 (காங்கிரஸ்) 27 என இருக்கும். அப்போது 23 உறுப்பினர்கள் பலன் கொண்ட தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி (3), புதிய தமிழகம் (2) ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படும். இதற்கிடையில், தே.மு.தி.க.,வின் ஆதரவை கேட்டு, தி.மு.க., தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இம்மாதம், 27ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள். அ.தி.மு.க., சார்பில் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், தங்கமுத்து, லட்சுமணன் ஆகியோரும், தி.மு.க., சார்பில் கனிமொழியும் ஏற்கனவே வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர். காணொளி:<மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு: 6 இடங்களுக்கு 7 பேர் போட்டி> |
| விழுப்புரம் அருகே மணல்லாரி மோதி விபத்து: 3 பேர் பலி Posted: 16 Jun 2013 09:23 PM PDT விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது மணல்லாரி மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அவலூர்பேட்டையில், இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பித்து ஓடி விட்ட நிலையில், அவலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| டெல்லி விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி Posted: 16 Jun 2013 09:15 PM PDT டெல்லியில், கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால், பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். விமான நிலையத்திற்குள் சுமார் 2 அடி உயரத்திற்கு மழை நீர் கரை புரண்டு ஓடியது. இதனால் உடைமைகளை பரிசோதனை செய்யும் தானியங்கி இயந்திரங்கள் செயலிழந்ததால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். டெல்லியில், 2 வாரத்திற்கு முன்பாகவே பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று பிற்பகல் ஒரு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை, டெல்லி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழை பதிவானது. கனமழையால், விமான நிலையத்தின் மழை நீர் வெளியேற்றும் வழிகளில் அடைப்பு ஏற்பட்டு, விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காணொளி:<டெல்லி விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி> |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |