Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக பட்டம் வென்றார் ஷரபோவா

Posted: 09 Jun 2012 09:42 PM PDT


கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. 'கிளைமாக்சை' நெருங்கி விட்ட இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவாவும், 24-ம் நிலை வீராங்கனை இத்தாலியின் சாரா எர்ரானியும் மோதினார்கள்.
 
எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த ஷரபோவா, எதிராளிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். வழக்கமான ஸ்டைலில் ஆக்ரோஷமாக சத்தத்தை எழுப்பி கொண்டே ஷாட்டுகளை மின்னல் வேகத்தில் விரட்டி அடித்த ஷரபோவா முதல் செட்டில் வரிசையாக 4 கேம்களை கைப்பற்றி அசத்தினார்.
 
பின்னர் எர்ரானி சில கேம்களை வென்றாலும் அதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. முதல் செட்டை 36 நிமிடங்களில் ஷரபோவா முடிவுக்கு கொண்டு வந்தார். ஆனால் 2-வது செட்டில் ஷரபோவாவுக்கு, எர்ரானி கொஞ்சம் சவால் அளித்தார். இதனால் ஒவ்வொரு கேமும் முடிய கூடுதல் நேரம் ஆனது.
 
53 நிமிடங்கள் வரை இந்த செட் நீடித்தாலும் ஷரபோவாவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எர்ரானியை விட உயரமான ஷரபோவா, 6 ஏஸ் சர்வீஸ்களை வீசி மிரட்டினார். மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை சுவைத்து, சாம்பியன் பட்டத்தை சூடினார்.
 
2003-ம் ஆண்டு முதல், பிரெஞ்ச் ஓபனில் விளையாடி வரும் ஷரபோவா இங்கு பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் இது அவரது 4-வது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.
 
நேற்று முன்தினம் பெண்கள் இரட்டையரில் சக நாட்டவரான ராபெர்ட்டா வின்சியுடன் இணைந்து பட்டம் வென்ற 25 வயதான எர்ரானிக்கு, ஒற்றையர் பிரிவு ஏமாற்றமாக அமைந்து விட்டது.
 
சாம்பியன் பட்டம் வென்ற 25 வயதான ஷரபோவாவுக்கு ரூ.8 1/2கோடியும், தோல்வியடைந்த சாரா எர்ரானிக்கு ரூ.4 1/2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன.
 
வெற்றி களிப்பில் அவர் பன்மொழி திறமையை வெளிப்படுத்தினர். ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியன் ஆகிய மொழிகளில் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளேன். எனது வாழ்க்கையில் சிறப்பான தருணமாக இதனை கருதுகிறேன். இது நீண்ட கால பயணம். இங்கு முதல் பட்டத்தை வெல்ல 8 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் ஷரபோவா, 2008-ம் ஆண்டு ஜூனுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நாளை வெளியிடப்படும் புதிய தரவரிசையில் பெலாரசின் விக்டோரியா அஸரென்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் முதலிட அரியணையில் ஏறுகிறார்.
 
இதே போல் தோல்வி கண்ட இத்தாலியின் சாரா எர்ரானியும் தரவரிசையில் ஏற்றம் அடைகிறார். அவர் முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார்.



ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ஏலத்துக்கு வருகிறது

Posted: 09 Jun 2012 09:34 PM PDT


ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ் இதனை ஏலத்தில் விடுகிறது.

உலகின் ஆரம்ப கால பர்சனல் கம்ப்யூட்டர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். இன்றைய மிகப் பிரபலமான ஐ-பாட், ஐ-பேட் வகையறாக்களை உருவாக்கிய நிறுவனத்தின் முதல் தொழில்நுட்ப படைப்பு இந்தக் கம்ப்யூட்டர்தான்.

ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினார்கள். 1976-ம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு வந்தபோது இதன் விலை 666.66 டாலர்கள். அன்றைய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ. 6 ஆயிரம். வரும் 15-ந் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஏலத்தில் முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு கோடி ரூபாய் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மோதிரத்திற்காக வனிதா-ஆனந்த்ராஜ் கோர்ட்டில் சண்டை...!

Posted: 09 Jun 2012 09:19 PM PDT


சென்னை குடும்ப நல கோர்ட் வளாகத்தில், நடிகை வனிதாவுக்கும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோர்ட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர். இதையடுத்து, ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பதில் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆகாஷ் உடன் இருப்பேன் என விஜய் பிடிவாதமாக இருந்தான். வனிதாவுடன் செல்ல மறுத்தான். இதனையடுத்து மீண்டும் முதல் கணவர் ஆகாஷ் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் வனிதா.

இதன்பின்னர், ஆனந்தராஜ் உடன் வனிதாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா, ஆனந்தராஜ் இருவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். மனு விசாரணைக்கு வருவதற்கு முன், பரிசாக வழங்கிய வைர மோதிரத்தையும், மொபைல் போனையும் திருப்பித் தருமாறு, வனிதாவிடம் ஆனந்தராஜ் கேட்டார். நீதிபதி முன் கையெழுத்திடும் போது, மோதிரத்தை தந்து விடுவதாக வனிதா கூறினார். இதனால் கோபமடைந்த ஆனந்தராஜ், கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.

பின்னர் திரும்பி வந்த அவரை வனிதா திட்டினார். மோசமான வார்த்தையால் திட்டியதற்கு, மன்னிப்பு கேட்டால்தான் கோர்ட்டுக்குள் வருவேன் எனக் கூறிவிட்டு, ஆனந்தராஜ் புறப்பட்டார். மன்னிப்பு கேட்குமாறு, வனிதாவிடம் அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஆனந்தராஜை வழிமறித்து, அவரது காலைத் தொட்டு வனிதா மன்னிப்பு கேட்டார். அதைத் தொடர்ந்து ஆனந்தராஜ், கோர்ட்டுக்குள் வந்தார். பின்னர், வழக்கை தனது அறையில் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விசாரித்தார். பின்னர், இருவரும் வெளியே வந்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனிதாவின் வழக்கறிஞர் விஜயராஜ் சமாதானம் செய்தார். இந்த வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.



தனுஷை தாக்கி வசனம் எழுதவில்லை : சிம்பு விளக்கம்!(வீடியோ)

Posted: 09 Jun 2012 09:04 PM PDT



வாலு படத்தில் யாரையும்(தனுஷ்) தாக்கி வசனம் எழுதவில்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். நடிகர் சிம்புவும், தனுஷ் ஒரு சேர சினிமாவில் அறிமுகமானவர்கள். சினிமாவிற்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கும் தனுஷ் - சிம்பு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது படங்களின் வசனம் மூலம் கடுமையாக தாக்கி பேசுவார். சமீபத்திய கொஞ்ச காலமாக இவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லாமல் போயக் கொண்டு இருந்த நிலையில், இப்போது மீண்டும் பிரச்னை வெடித்து இருக்கிறது.

புதுமுகம் விஜய் ‌சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்து வரும் புதிய படம் வாலு. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஒன்று பட ஷூட்டிங் ஆரம்பமான அன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தனுஷை தாக்கி வசனம் பேசுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, படிக்காதவன் படத்தில் தமன்னாவை பார்த்து தனுஷ், என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனேயே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்று கூறுவார். அதே டயலாக்கை வாலு படத்தில் ஹன்சிகா, சிம்புவை பார்த்து, ஒரு சில பசங்கள பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுவதுபோல் காட்சி உள்ளது. இந்த வசனம் தனுஷூக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்கும் மீண்டும் மோதல் ஆரம்பமாகி உள்ளது.

இதனிடையே இந்த வசனம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. அவர் கூறியுள்ளதாவது, வாலு படத்தில் அந்த வசனத்தை எழுதியது படத்தின் டைரக்டர் விஜய் தான். எனக்கும், அந்த வசனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி, ஹீரோவை ஹீரோயினுக்கு ரொம்ப பிடிக்குது. அப்படி பிடிக்கும்போது அந்த ஹீரோயின் பேசுவது தான் அந்த வசனம். மற்றபடி இந்த வசனம் யாரையும் தாக்கி எழுதப்படவில்லை. மற்றவர்கள் கற்பனைக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. நான் என் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வாலு படம் ஒரு நல்ல ஜாலியான படம் என்று கூறியுள்ளார்.





ஊழல் ஒழிப்பிற்காக எனது உயிரைத் துறக்கவும் தயார்: பாபா ராம்தேவ்

Posted: 09 Jun 2012 08:51 PM PDT


பிரபல யோகா குரு ராம்தேவ், சண்டிகரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு, வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க, பலன் தரக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைப்பை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இந்த இரண்டு விஷயங்களையும் அவர்கள் செய்ய வேண்டும். இல்லா விட்டால் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவுடன் நாங்கள், வரும் ஆஸ்ட் 9-ஆம் தேதியன்று மாபெரும் போராட்டத்தைத் துவங்குவோம்.
 
கறுப்புப் பணமும் மீட்கப்பட்டு, நாட்டில் வலுவான லோக்பால் அமைப்பும் உருவாக்கப்பட்ட பிறகே நாங்கள் சமாதானம் அடைவோம். இல்லா விட்டால், எனது உயிரைத் துறக்கவும் நான் தயார்.
 
ஆகஸ்ட் 9-ல் நாங்கள் நடத்த உள்ள போராட்டம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தை விட 100 மடங்கு பெரிதாக இருக்கும். அது, முடிவை எட்டக் கூடியதாக இருக்கும். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உயிரை விட வேண்டியிருந்தாலும் நாங்கள் போராடுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



அன்னா ஹசாரேக்கு சரத் பவார் சவால்

Posted: 09 Jun 2012 08:39 PM PDT


மும்பையில் நேற்று மத்திய வேளான் மந்திரி சரத் பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் அன்னா ஹசாரே குழுவினர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள்.
 
இந்த பிரச்சினையில் அவர்கள் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். கோர்ட்டில் வழக்கு தொடரட்டும். நீதி துறையில் நம்பிக்கை இருந்தால், அவர்கள் அதை செய்ய வேண்டும். கமிட்டி அமைத்து விசாரித்தால், அது தாமதமாகும். இதனால் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் என்று அவர் கூறினார்.
 
மேலும் பிரதமர் போன்ற சிறந்த நபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.





ஐரோப்பிய கால்பந்து:45 ஆண்டுக்கு பிறகு நெதர்லாந்தை சாய்த்தது டென்மார்க்

Posted: 09 Jun 2012 08:26 PM PDT


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் 2-வது மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான 'யூரோ' கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து போட்டி போலந்து நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
 
இந்த 14-வது ஐரோப்பிய கால்பந்து போட்டியை போலந்தும், உக்ரைனும் இணைந்து நடத்துகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி 'ஏ' பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷியா, செக் குடியரசு ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, போர்ச்சுகல் ஆகிய அணிகளும், 'சி' பிரிவில் ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, குரோஷியா ஆகிய அணிகளும், 'டி' பிரிவில் உக்ரைன், சுவீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
 
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
 
போட்டியின் 2-வது நாளான நேற்று கார்கிவில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-டென்மார்க் அணிகள் மோதின. இதில் பந்து பெரும்பாலான நேரம் நெதர்லாந்து அணி வசமே இருந்தது. என்றாலும் 24-வது நிமிடத்தில் டென்மார்க்கின் மைக்கேல் கிரோன் டெலி, கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.
 
பதில் கோல் திருப்ப நெதர்லாந்து அணி வீரர்கள் அலைஅலையாக டென்மார்க் கோல் கம்பத்தை முற்றுகைவிட்டனர். ஆனால், கிடைத்த நிறைய வாய்ப்புகளை நெதர்லாந்து வீரர்கள் மயிரிழையில் வீணடித்தனர்.
 
மேலும் டென்மார்க் கோல் கீப்பர் ஸ்டீபன் ஆண்டர்சன், நெதர்லாந்தின் பல கோல் வாய்ப்புகளை சூப்பராக தடுத்து நிறுத்தினார். இறுதிகட்டத்தில் டென்மார்க் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.
 
முடிவில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. டென்மார்க் அணி நெதர்லாந்தை 45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தோற்கடித்து இருக்கிறது. கடைசியாக 1967-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்றில் 3-2 என்ற கணக்கில் வென்றிருந்தது.
 
முன்னதாக ஏ பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ரஷியா-செக் குடியரசு அணிகள் மோதின. இதில் ரஷியா 4-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வென்றது.



'பில்லா 2'வை வம்புக்கு இழுக்கும் 'சகுனி'

Posted: 09 Jun 2012 08:15 PM PDT


பில்லா 2' படத்திற்கும் 'சகுனி' படத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

'பில்லா 2'  ஜுன் 22ம் தேதியும், 'சகுனி' ஜுலை 6ம் தேதியும் வெளியாகும் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி 'சகுனி'  ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

'சகுனி'  இன்று சென்சார் செய்யப்பட்டு, ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டு, தியேட்டர் ஒப்பந்தம் செய்வதை தொடங்கி விட்டார்கள்.

ஆனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'பில்லா 2' இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. இதனால் படம் எப்போதும் வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

'பில்லா 2', சகுனி இரண்டுமே ஒரே நாட்களில் வெளியாகி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுமே ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பெரிய ஓப்பனிங் இருக்கும் நாயகர்களின் படங்கள் வெளிவருவதால் எந்த படம் வெளிவந்தாலும் விநியோகஸ்தர்கள் காட்டில் பண மழை தான்.. தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் தான்.!



அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் செல்போன் பேச தடை

Posted: 09 Jun 2012 08:03 PM PDT


கேரளாவில் அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசக்கூடாது என்று கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களை அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
 
இதுதொடர்பாக பொதுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறைத் தலைவர்களின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
அவசர காலங்களில் மட்டும் செல்போனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. செல்போனில் பேசாமல் இருக்கும்போது எதன்மூலம்? எப்படி? அவசர காலம் என்ற முடிவுக்கு நாங்கள் வர முடியும் என்று கேரள அரசு தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அரசு அலுவலகங்களில் தரைவழி தொலைபேசி தவறாகப் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் சரியானதுதான். ஆனால், இது முற்றிலும் நடைமுறை சாத்தியமில்லாதது என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சமீபத்தில் பான்பராக், குட்கா, சூப்பர், ஷயனிஹயனி, மாவா போன்ற போதைப் பொருட்களுக்கு கேரள அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது



இந்தியாவிலிருந்து வருபவர்களையும் விரட்டுவோம் : இலங்கை

Posted: 09 Jun 2012 08:18 AM PDT


இந்தியாவிற்கு செல்லும் சிங்கள அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவமதிக்கப்படுவது  தொடர்ந்தால் இந்தியாவிலிருந்து வருபவர்களையும்  அவ்வாறே உபசரிக்க வேண்டிய நிலைமை உருவாகும் என இலங்கை எதிர்கட்சி  எம்.பி.யான ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

இலங்கை ௭திர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஐக்கிய தேசிய கட்சியின் ௭ம்.பி.  யுமான ஜோன் அமரதுங்க,இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

"அமைச்சர் ரெஜினோல்ட் குரே அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக  இந்தியா (கோவை) சென்றிருந்தார்.ஆனால் அங்கு அமைச்சருக்கு ௭திராக  ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பாக சபாநாயகர், இந்தியாவிலுள்ள இலங்கை தூதருக்கும், இலங்கைக்கான  இந்திய தூதருக்கும் தெரியப்படுத்தி ௭திர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

௭மது நாட்டு அமைச்சருக்கு ௭திராக இந்தியாவில் உருவான சம்பவமானது பிழையான  முன்னுதாரணமாகும்.அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை, ஏனைய  அமைச்சர்களுக்கும் ௭ம்.பி. க்களுக்கும் ஏற்படலாம். சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான  தெற்காசிய அமைப்பு) அமைப்புக்கான விசா பெற்றுக் கொண்டே அமைச்சர்கள் இந்தியா  செல்கின்றனர்.

அவ்வாறு சட்ட ரீதியாக அங்கு சென்ற அமைச்சருக்கு இவ்வாறான நிலைமை உருவாகி  வெளியேற்றப்பட்டுள்ளார்.இது மிகவும் பயங்கரமான ஆபத்தான நிலைமையாகும்.  இந்நிலைமை தடுக்கப்படாவிட்டால் இந்தியாவிலிருந்து வருபவர்களையும் அவ்வாறே  உபசரிக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

அத்தோடு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இந்தியா  செல்லவில்லை.அதிகாரப்பூர்வகமான விஜயத்தை மேற்கொண்டே அங்கு சென்றார்.

இதற்கு மேலாக ஜனாதிபதி ராஜபக்ச பிரிட்டிஷ் மகாராணியின் 60 ஆவது முடி சூட்டு  ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார்.அப்போது அங்குள்ள வர்த்தக  மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றவிருந்தார்.

ஆனால் ஜனாதிபதியால் அங்கு உரையாற்ற முடியாமல் போனதுடன் பாதுகாப்பும்  வழங்கப்படவில்லை.இதனால் இம்மாநாடே இடம்பெறவில்லை.அது ரத்துச் செய்யப்பட்டு  விட்டது.இதனால் இலங்கைக்கே அகௌரவம் ஏற்பட்டது.

ஜனாதிபதியை அவமதிப்பது ௭மது நோக்கமல்ல.இனி மேலும் இவ்வாறான சம்பவங்கள்  இடம்பெறாமல் இருக்க வழி செய்ய வேண்டுமென்பதே ௭மது வலியுறுத்தலாகும்"என்று  கூறினார்.



மணிரத்னம் படத்திலிருந்து சமந்தா நீக்கம்! உண்மைக் காரணம்!

Posted: 09 Jun 2012 07:40 AM PDT


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் ஷூட்டிங் கடலோர கிராமங்களில் ஒரு நாளும் தடைபடாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென கடல் படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட நடிகை சமந்தா படத்திலிருந்து விலகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா மணிரதனம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் நடிக்கும் கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் துள்ளி குதித்தை அனைவரும் அறிவர். கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்ட போது, சமந்தாவிடமிருந்து கால்ஷீட்டை மொத்தமாக தருவதாக வாய்
வார்த்தையாய் கேட்டுக்கொண்டது தான் கடல் படக்குழுவின் தவறு என்கின்றனர் படக்குழுவில் உள்ளவர்கள்.

அனைத்து நிபந்தனைகளுக்கும் சிரித்தவாறே ஒப்புக்கொண்ட சமந்தா இப்படி கால்ஷீட் குளறுபடி செய்வார் என்று மணிரத்னமே எதிர்பார்த்திருக்கமாட்டார் போல. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது சமந்தா வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ஆனால் கடல் படம் ஓகே ஆனதும் தான் பல படங்கள் வந்து குவிந்தன. அதன் விளைவு இன்று 8 படங்களுக்கு மேல் சமந்தாவின் பர்ஸில்.

அதிகமான படங்களை ஒப்புக்கொண்டதால் முன்னர் கூறியது போல கால்ஷீட்டை மொத்தமாக தரமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக்கொடுக்கிறாராம் என்று சமந்தா தரப்பிலிருந்து கடல் பட யூனிட்டிற்கு செய்தி போக, பரவாயில்லை மொத்தமாகவே வேறு படத்திற்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறது கடல் படக்குழு.

'கடல் படத்திலிருந்து சமந்தா விலக்கப்பட்டார்' என்ற செய்தி வருவதற்கு முன்னரே டுவிட்டரில் சமந்தா " கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் கடல் படத்திலிருந்து விலகிவிட்டேன். அது எனக்கு ஒரு இழப்பு தான் இருந்தாலும் ஈடு கட்ட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

'கடல் படத்திலிருந்து சமந்தா விலகினார்' என்ற செய்தி மட்டும் ரசிகர்களுக்கு போதாது என்பதால், கடல் பட யூனிட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி கேட்ட போது "நடிகை சமந்தாவுடன் கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றாலும், அவர் விலகியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. கடல் படத்தின் ஹீரோ கௌதமிற்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கதைப்படி 14 வயது தான் ஆகிறது. கௌதம் கதாபாத்திரத்திற்கு 17 வயது.

19 வயதே ஆன கௌதம் இளவயது கதாநாயகனாக பொருந்திவிட்டார். ஆனால் 27 வயது ஆகும் சமந்தா 14 வயது பெண்ணின் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அவர் முகத்தில் முதிர்ச்சி தெரிந்திருக்கிறது. சமந்தாவைவிட கௌதம் 8 வயது சிறியவராக இருப்பதால் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை. அவர்கள் இருவரையும் கேமராவில் பார்த்த இயக்குனர் மணிரதனத்திற்க்கும், கேமராமேன் ராஜீவ் மேனனுக்கும் திருப்தி ஏற்படவில்லை. எனவே தான் கால்ஷீட் பிரச்சினையின் மூலம் சமந்தாவை நீக்கிவிட்டனர்" என்று கூறுகின்றனர்.

மணிரதனம் படத்தில் நடித்த பல ஹீரோயின்கள் திரையுலகின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்திருக்கின்றனர். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் சமந்தா விலகியிருப்பதை பற்றி கோடம்பாக்கத்தில் வசிக்கும் நடிகைகளிடம் கேட்ட போது "நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மணிரதனம் சார் படத்தைத் தான் வலது கையில் வைத்திருப்போம்" என்று கூறுகின்றனர்.

கடல் படத்திலிருந்து விலகினாலும் சமந்தாவிடம் இருக்கும் இரு முக்கிய படங்கள் ராஜமௌளி இயக்கத்தில் ரிலீஸாகவிருக்கும் 'நான் ஈ' படமும், கௌதம் மேனனின் 'நீ தானே என் பொன்வசந்தம்' படமும் தான். சமந்தாவை நீக்கியபின் பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த மணிரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை ராதாவின் இளைய மகள் துளசி.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ஏற்கனவே சினிமாவில் கால் பதித்துவிட்டார். இப்போது ராதாவின் இளையமகளும் சினிமாவில் நுழைகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ராதா நடித்த 'இதயகோயில்' படம் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



இந்தியில் கலக்கும் தமிழ் ரீமேக் படங்கள்: ரூ.650 கோடி வசூல் சாதனை

Posted: 09 Jun 2012 07:17 AM PDT


இந்தியில் ரீமேக் ஆன தமிழ்படங்கள் வசூல் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் மும்பை தயாரிப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டு ஹிட்டான தமிழ்ப்படங்களின் இந்தி உரிமைக்கு விலை பேசி வருகிறார்கள்.

கஜினி படமே இதற்கு முதல் பிள்ளையார்சுழி போட்டது. சூரியா, நயன்தாரா, அசின் நடிப்பில் வந்த அப்படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்தார். அப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த ஒரே படத்திலேயே அசின் இந்தி திரையிலகில் முன்னணி இடத்தை பிடித்தார்.

தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை சல்மான்கான் நடிக்க வாண்டட் என்ற பெயரில் இந்தியில் பிரபுதேவா ரீமேக் செய்தார். அப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இதுபோல் தமிழில் விஜய் நடித்த காவலன் படம் இந்தியில் பாடிகார்ட் என்ற பெயரில் சல்மான் நடிப்பில் தயாரானது. இதுவும் மெகாஹிட் ஆனது.

சூர்யா நடித்த சிங்கம் படமும் அஜய் தேவ்கான் நடிக்க இந்தியில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது. பிரபு, ரம்பா நடித்து நீண்ட நாட்களுக்கு முன் தமிழில் வந்த பந்தா பரமசிவம் படத்தை தற்போது ஹவுஸ்புல்-2 என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இந்த படமும் பட்டையை கிளப்பியது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் பட்டியலிலும் சேர்ந்துள்ளது.

இதுபோல் தெலுங்கில் ஹிட்டான படங்களையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். தென்னிந்திய மொழி படங்களின் ரீமேக்கால் ரூ.650 கோடி வசூல் பார்த்துள்ளார்கள்.

தற்போது தமிழில் ஹிட்டான மங்காத்தா, காஞ்சனா, அருந்ததி, தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய பிசினஸ்மேன், மகதீரா போன்ற படங்களையும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.



கற்பழிப்பு புகார் : நித்தியானந்தா தலைமறைவு?: ஆசிரமத்தைக் கைப்பற்ற கர்நாடக அரசு திட்டம்

Posted: 09 Jun 2012 06:58 AM PDT


சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் போலீசில் புகார் அளித்தார்.
 
இதைத் தொடர்ந்து, பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆர்சிரமத்துக்கு எதிரே கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையில் திடீரென்று மோதல் வெடித்தது.
 
இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
 
பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீடத்தில் நடைபெறும் ஆட்சேபகரமான நடவடிக்கைகள் காரணமாக, அந்த ஆசிரமத்தின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். தியான பீடத்துக்கு ஒரு நிர்வாகியை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதனிடையே  நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.



அண்ணா சிலையில் இருந்த புத்தகத்தை திருடிய மாணவர்கள்!!

Posted: 09 Jun 2012 06:18 AM PDT


திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 24.10.2011 அன்று திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் அவர்களால் அண்ணாவின் திருவுருவ சிலை திறக்கப்பட்டது. கையில் புத்தகத்தை வைத்து படிப்பது போல் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 07.06.2012 அன்று இரவு சில மாணவர்கள் மது அருந்திவிட்டு சிலை அருகே ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும், அண்ணா சிலையின் கையில் இருந்த புத்தகத்தை அந்த மாணவர்கள் தனியாக எடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால் பல்கலைக்கழக மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்துக்கே இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை தெரியவில்லை. இப்போதுதான் அவர்களே அப்படியா என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.



நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : பேச்சு

Posted: 09 Jun 2012 06:02 AM PDT


நாட்டின் சவால்களை சமாளிக்க இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும் என கடலூரில் நடந்த விழாவில் அப்துல்கலாம் பேசினார்.


பசுமை கலாம் திட்டத்தின் கீழ் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதன் முதல் பகுதி நிறைவு விழா, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் துவக்க விழா ஆகியன கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.




முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடையே பேசினார்.

மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ,மார்க் குழுமத் தலைவர் ஜி.ஆர்.ரெட்டி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் டாக்டர் அப்துல்கலாம் பேசியபோது,

''விவேக்கிடம் ( நடிகர் )ஒரு முறை மரம் வளர்ப்பதை பற்றி திரைப்படத்தின் மூலம் எப்படி எடுத்து செல்வது என்று ஆலோசித்தேன்.

அதனையே அவர் இலக்காக கொண்டு 10 லட்சம் மரக்கன்று என்ற இலக்கினையும் தாண்டி 14 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதித்து காட்டியுள்ளார். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்க விடாமல் செய்வது தான் கனவு. பசுமை கலாம் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சாதனை படைப்பதற்கு அந்த கனவு தான் அச்சாரமிட்டிருக்கிறது.


ஒரு மரம் 20 கிலோ கிராம் கார்பன்டை ஆக்சைடை ஒரு வருடத்துக்கு உள்வாங்கி அழிக்கிறது. அப்படியென்றால் நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதை பாதுகாத்தால் 100 கோடி மரங்கள் நடும் இலக்கை இலகுவாக அடைய முடியும். அப்படி 100 கோடி மரங்கனை நாம் நட்டால் இந்தியா மாறி வரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து நம் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும்.


நன்கு வளர்ந்த ஒரு கோடி மரங்களால் 20 லட்சம் டன் கரியமில வாயுவை உள்ளிழுத்து 14 லட்சம் டன் ஆக்சிஜனை சுற்றுப்புறச்சூழலுக்கு மரங்கள் அளிக்கும்.


கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 1.5 கோடி இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். ஒவ்வொரு இளைஞரும் மாணவரும் தனித்துவமானவர்கள். அதனை அனைவரும் நிரூபிக்க வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நம் இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும்.

ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சி வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடைய செய்ய வேண்டும். இந்த 4 குணங்களும் இருந்தால் கனவு நினைவாகும்'' என்று பேசினார்.



துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்!

Posted: 09 Jun 2012 05:55 AM PDT


துப்பாக்கி படப்பிடிப்பில் நடிகர் விஜய் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் துப்பாக்கியின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கால்மூட்டில் அவருக்கு அடிபட்டது. வலியால் துடித்தார் விஜய். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

லண்டன் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்திருந்தார் விஜய். ஆனால் காலில் அடிபட்டதால் அந்த விழாவுக்கு செல்வதை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.

துப்பாக்கி படப்பிடிப்பு தொடர்ந்து விஜய்க்கு சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற புகைப் பிடிக்கும் காட்சிக்காக பெரிய சர்ச்சை கிளம்பியது. இதனால் புகைப்பிடிப்பது மாதிரி காட்சிகளே இந்தப் படத்தில் இருக்காது என்று இயக்குநர் முருகதாசும், விஜய்யும் அறிவித்தது நினைவிருக்கலாம்!



நாங்கள் பக்குவம் அடைகிறோம்: தலைமறைவாகவில்லை- மதுரை ஆதீனம் பேட்டி

Posted: 09 Jun 2012 05:30 AM PDT


பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் கன்னட அமைப்பினர் புகுந்து நித்யானந்தா ஆசிரம சீடர்களை சரமாரியாக தாக்கினர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மதுரை ஆதீனமும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் மதுரை ஆதீனம் நிருபரிடம் கூறியதாவது:-
தொடர்ந்து எங்கள் மீது தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி அவதூறு பரப்புபவர்கள் விரைவில் எங்களின் ஆதரவாளர்களாக மாறுவார்கள். நாங்கள் எங்கும் தலைமறைவாக வில்லை. இருவரும் பெங்களூரில்தான் உள்ளோம். பிரச்சினைகள் வரவர நாங்கள் அதனை எதிர்கொண்டு அதிக பக்குவம் அடைகிறோம். எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஆன்மீகம் மற்றும் தமிழுக்காக சிறப்பாக பணியாற்றுவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.















கே.என்.நேரு மொட்டை அடித்த ரகசியம்!

Posted: 09 Jun 2012 05:10 AM PDT


திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய தம்பி கே.என்.ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை தாடி எடுப்பது இல்லை என்கிற உறுதியுடன் இருந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கையும் குழப்பம் குழப்பம் என்று நீடித்துக்கொண்டே இருந்தது.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின் போது, அவரைப் பார்க்க கே.என்.நேரு சென்றுள்ளார். அப்போது, கே.என்.நேருவிடம், உங்களிடம் பழைய உற்சாகத்தை பார்க்கமுடியவில்லை, ராமஜெயத்தின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். சராசரி வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்று கலைஞர் கூறியதாக நேருவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் நேருவுக்கு வேண்டப்பட்ட கட்சிகாராகள் 2 பேர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள சாமியார்களிடம் குறி கேட்க அவர்கள் இந்த கொலையில் மர்மமே நீடிக்கும் கொலையாளியை கடைசி வரைக்கும் போலீசார் கண்டுபிடிக்காமல் செய்து விடுவார்கள் என்று சொல்லியுள்ளனர்.

இதனால், சரி இனிமேல் நடப்பதை கவனிப்போம் என்று அம்மா மண்டபத்திற்கு சென்று மொட்டை அடித்துவிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிவித்துவிட்டு, திருச்சி சிறையில் உள்ள ஐ.பெரியசாமியை சந்திக்க சென்றார் நேரு.

மொட்டை போட்ட தகவல் போலிஸ் டிப்பாட்மெண்ட மத்தியலும், கட்சிகாரர்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம் கொலைகாரனை கண்டுபிடித்துவிட்டார்கள் அதனால் தான் நேரு மொட்டை அடித்துவிட்டார் என்று பரபரப்பு அடைந்து விட்டது.

போலீஸ் இனி கண்டுபிடிக்காது என்கிற உணர்வில் நேரு மொட்டை அடித்துவிட்டார் என்று தெரிந்து கொண்ட புதிய தனிப்படை போலிஸ் டீம் காட்டாயாம் கண்டு பிடித்துவிடுவோம் என்கிற ரீதியில் செல்கிறார்கள்.



கார்த்திக் மகனுக்கு ஜோடி ராதாவின் இளைய மகள் துளசி!!

Posted: 09 Jun 2012 04:46 AM PDT


ராவண் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோதே, கவுதமுக்கு ஜோடி, பழைய நடிகை ராதாவின் மகள் துளசிதான் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் சமந்தா நாயகியாக ஒப்பந்தமானார்.

இப்போது சமந்தா அந்தப் படத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார். அவருக்கு பதில் ராதாவின் இளைய மகள் துளசியை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார் மணிரத்னம்.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கும் ராதாவும் ஜோடியாக பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்கள். இப்போது கார்த்திக்கின் மகனும் ராதாவின் மகளும் ஜோடியாக மணிரத்னம் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.



தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா

Posted: 09 Jun 2012 04:34 AM PDT


தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
 
இந்த போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை சப்சிரீயை எதிர்கொண்டார். போட்டியின் முடிவில் 21-10, 22-20 என்ற நேர் செட்களில் சப்சிரீயை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
 
அரையிறுதியில் அவர் தாய்லாந்து வீராங்கனை போன்டிப்பை எதிர்கொண்டார். 24-22, 21-11 என்ற நேர் செட்களில் போன்டிப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  
 
இறுதிப் போட்டியில் மற்றொரு தாய்லாந்து வீராங்கனையான ரச்சநோக் இந்தனோன் என்பவரை சாய்னா எதிர்கொள்கிறார். ரச்சநோக் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.



புதுக்கோட்டையில் தேமுதிக அலுவலகம் எரிப்பு- விஜயகாந்த் கடும் கண்டனம்!

Posted: 09 Jun 2012 04:27 AM PDT


புதுக்கோட்டை அடுத்த வாராப்பூரில் உள்ள தேமுதிக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் பலியானார். இதனையடுத்து அங்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என்று 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக, தேமுதிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி மாநில செயலளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாராப்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்ச்சனம் செய்தார். இதனால் தேமுதிக, அதிமுகவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஜூன் 8ம் தேதி இரவு 11 மணியளவில் வாராப்பூரில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேமுதிக நிர்வாகிகள் அங்கு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த தகவலை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனால் தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே மோதல் வராமல் இருக்க போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.




ஹசாரே குழுவினரை தேச விரோதிகள் என்பது சரியல்ல: கட்காரி

Posted: 09 Jun 2012 04:11 AM PDT


மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியபோது, அன்னா ஹசாரே எளிமையான மனிதர். ஆனால் அவரைச் சுற்றிலும் தேச விரோத சக்திகளும், வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு பெற்ற நபர்களும் உள்ளனர்.

அவரது குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹசாரே கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வசூல் செய்யப்பட்ட பெரும் தொகை என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளது என்றார்.

நாராயணசாமி தெரிவித்த கருத்து குறித்து, பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, யாரையும் தேச விரோதிகள் என்று கூறுவது சரியல்ல.

நாட்டு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை தேச விரோதிகள் என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

















அரசு பங்களா எனக்கு வேண்டாம்: சச்சின்

Posted: 09 Jun 2012 04:02 AM PDT


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கர் தமக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட சச்சினுக்கு ராகுல்காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவுக்கு எதிரே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஒதுக்கீடு செய்யும் பங்களா எதுவும் தமக்குத் தேவையில்லை என்றும் அரசுப் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் சச்சின் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் தமது சொந்த செலவிலெயே ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகவு அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை எம்.பி.யாக நியமித்தது கவுரவித்ததே போதும்.. அரசு சலுகைகள் எல்லாம் வேண்டாமே என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் க்கூட்டத்தில் ஒரு சில நாட்கள்தானே தாம் பங்கேற்கப் போகிறேன் அதற்காக சலுகையெல்லாம் வேண்டாம் என்பதும் சச்சினின் கருத்து.




கிராபிக்ஸ் ஆபாச படத்தை காட்டி நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்

Posted: 09 Jun 2012 03:40 AM PDT


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தூள், பாரதி, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் விஜய் சாணக்யா. இவருக்கு தெலுங்கு திரையுகில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இவர் தெலுங்கு நடிகர், நடிகைகளை உல்லாசமாக இருப்பது போல் கிராபிக்ஸ் படம் தயாரிப்பவர். பின்னர் அந்த நடிகர், நடிகைகளிடம்  கிராபிக்ஸ் ஆபாச படத்தை காட்டி பணம் பறிப்பார். இதேபோல் நடிகர் சாயாஜி ஷிண்டேவிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். இதற்காக அவர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போல் கிராபிக்ஸ் வீடியோ படம் தயாரித்தார்.

பின்னர் சாயாஜி ஷிண்டேவை போனில் தொடர்பு கொண்டு நீங்கள் நட்சத்திர ஓட்டலில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ படம் உள்ளது. அதை நான் உங்கள் மனைவிக்கு அனுப்பினால் நிலைமை என்னாகும். எனக்கு ரூ.15 லட்சம் தந்தால் அந்த வீடியோ படத்தை உங்களிடம் தந்து விடுகிறேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாயாஜி ஷிண்டே பஞ்சாராஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்போன் நம்பரை வைத்து விஜய் சாணக்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஆபாச சி.டி.க்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிராபிக்ஸ் ஆபாச படம் தயாரித்து ஒரு கவர்ச்சி நடிகை மற்றும் சில நடிகர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்தது.





இந்தி எதிர்ப்பு கேலிச்சித்திரத்தைக் கண்டித்து ஜூன் 11-ல் போராட்டம்: வைகோ

Posted: 09 Jun 2012 03:21 AM PDT


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் புத்தகங்களில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரத்தைக் கண்டித்து மதிமுக சார்பில் ஜூன் 11ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் அறிஞர்களும், இலட்சக்கணக்கான மாணவர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழக வரலாற்றின் வீரம் செறிந்த அத்தியாயம் ஆகும். ஆனால், மத்திய அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், இந்த வரலாறைத் திரித்துக் கூறி, தமிழர் மனங்களைக் காயப்படுத்தும் விதத்தில் கருத்துப்படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இதில், இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, ஆங்கிலமும் தெரியாது என்றும், ஆனால், ஆங்கிலம் வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்ததாகவும், அன்றைய மாணவர்களை இழிவுபடுத்துகிறது.

1965 இல் இந்தி எதிர்ப்பு மொழிப்புரட்சி எரிமலையாக வெடித்தபோது, அதில் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கு ஏற்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலப் புலமையும் உண்டு. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விடுவோம்; எனவே, தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும். அதுவரை, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தே போராட்டம் நடைபெற்றது.

ராஜாஜி

இந்தக் கருத்துப் படத்தில், அன்றைய தமிழக முதல் அமைச்சர் பக்தவத்சலம் படமும் இடம் பெற்று இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு, கொடிய அடக்குமுறையை அவர் ஏவினார் என்பதுதான் உண்மை ஆகும். 37 இல் இந்தியைத் திணித்த இராஜாஜி, அறுபதுகளில், இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.

தீக்குளிப்பு

37 போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தாளமுத்துவும், இப்போராட்டக் களத்தில் சிறையிலேயே மாண்டனர். 64 இல் சிங்கத்தமிழன் சின்னச்சாமி, திருச்சி ரயிலடியில் இந்தியை எதிர்த்து முழங்கி, தீக்குளித்து மடிந்தார்.

1964 இல், அறிஞர் அண்ணாவின் ஆணைக்கு ஏற்ப அவரது இயக்கம், அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டுக் களம் கண்டது. 1965 இல், அறப்போருக்கு அறிஞர் அண்ணா அறைகூவல் விடுத்தார். சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்தனர்.

1965 மாணவர் போராட்டத்தை ஒடுக்க, இந்திய இராணுவம் எண்ணற்ற தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. தமிழகம் அதுவரை வரலாறு காணாத போராட்டம், பூகம்பமாய் வெடித்தது. இதன் விளைவாகவே, 1967 இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று, முதல்வராக அறிஞர் அண்ணா, ஒருமனதாக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் தியாக வரலாறை இழிவுபடுத்தும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கேலிச்சித்திரத்தை பாடபுத்தகத்தில் அச்சிட்டு உள்ளது. மத்திய அரசு பாடத்திட்டத்தை ஏற்றுள்ள பள்ளிகளில் மட்டும் அல்லாது, இந்தியாவில் 13 மாநிலங்களில் இந்த பாடத்திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

எனவே, வரலாற்று உண்மையை மூடி மறைத்து, தமிழர்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களையும் ஏளனமாக இழிவு செய்யும் வகையில் கேலிச்சித்திரத்தை இடம் பெறச் செய்ததைக் கண்டிக்கின்ற வகையிலும், மத்திய அரசும், பயிற்சிக் கழகமும் உடனடியாக அந்தக் கேலிச்சித்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும்,

ஜூன் 11 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் வடசென்னை துறைமுகத்துக்கு எதிரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் எனது தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.அறப்போர் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™