Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


அழகிரியை மிஞ்சும் ஸ்டாலின்

Posted: 10 Jun 2012 09:19 PM PDT


தி.மு.க.,விற்குள் அண்ணன், தம்பி சண்டை அமைதியாய் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வாரம் ஸ்டாலின், டில்லி சென்று வந்தது, அண்ணன், தம்பி கோஷ்டிக்குள் மேலும் சர்ச்சசையை உண்டாக்கும் என, டில்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.டில்லி வந்த ஸ்டாலின், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து அரசியல் பேசினார். "காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., தொடர்ந்து நீடிக்கும் என்றும், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவில் எவ்வித மாறுதலும் இல்லை' என, சோனியாவிடம் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலின், டில்லி வந்த சமயத்தில் ராகுல் ஊரில் இல்லை. அடுத்த முறை வரும் போது ராகுலை சந்தியுங்கள் என, ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார் சோனியா."இனி ஸ்டாலின் தான் எங்கள் கட்சி மேலிடத்தோடு, எந்த விஷயத்திலும் பேச்சு வார்த்தை நடத்துவார்' என, காங்கிரசார் கூறுகின்றனர். அழகிரி மத்திய அமைச்சராக இருந்தும் சோனியா சந்திப்பதில்லை.பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் அழகிரி கலந்து கொள்வதில்லை; அத்தி பூத்தாற்போல் எப்போதாவது தான் கலந்து கொள்கிறார். தி.மு.க., அமைச்சர்கள், ஒரு முறை பதவி விலக ராஜினாமா கடிதங்களுடன் டில்லி வந்த போது, சோனியாவை சந்தித்தார் அழகிரி. அதற்குப் பிறகு சோனியாவை சந்திக்கவில்லை. தி.மு.க.,விலிருந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு தி.மு.க., தரப்பு வாதங்களை வைக்க, சரியான தலைவர் இல்லை. அந்த குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டார் என்கின்றனர் காங்கிரசார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்த, ஒரு விழா டில்லியில் நடக்கப் போகிறது. அதில், தி.மு.க., தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினிடம் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று கருணாநிதி டில்லி வருவாரா என்பது இன்னமும் முடிவாகவில்லை.



'கெரகம்' சரியில்லாததால் நாடு நாடாக அலையும் ராஜபக்சே!

Posted: 10 Jun 2012 09:06 PM PDT


ராஜபக்சேவுக்கு கிரகம் சரியில்லையாம். இதனால்தான் அவர் கொழும்பில் தங்கியிருக்காமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாராம். கொழும்பு ஜோசியக்காரர்கள்தான் இப்படிக் கூறியுள்ளனர்.

இந்த ஜோசியக்காரர்கள் கூற்றுப்படி, மே 16-ம் தேதி காலை 6.47 மணி முதல் சனி கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறது. அதன்பின்னர் 17-ம் தேதி 9.45-க்கு குரு ரிஷப ராசிக்கு செல்கிறது. இந்த மாற்றம் இலங்கைக்கு சரிவராதாம். இதனால் இலங்கை தலைவர்களுக்கும் கிரகப்பலன் சரியாக இல்லையாம்.

எனவேதான் இந்த காலகட்டத்தில் ஊரில் இருக்காமல் வெளிநாடுகளுக்குப் போகுமாறு ராஜபக்சேவுக்கு அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால்தான் ராஜபக்சே நாடு நாடாக அலைவதாக கூறுகிறார்கள்.

இருப்பினும் அதெல்லாம் கிடையாது, அப்படியெல்லாம் இல்லை என்று ராஜபக்சே தரப்பு மறுக்கிறது.



புகைப்பட ஆதாரங்களுடன் நித்தி மீது ஆர்த்தி ராவ் பாலியல் குற்றச்சாட்டு

Posted: 10 Jun 2012 08:54 PM PDT


நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, "சுவர்ணா டிவி'யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் பேட்டியளித்து இருந்தார். நித்யானந்தாவால் தான் பல முறை பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு எச்சில் மூலம் பரவும் "ஹெர்பிஸ் 2' என்ற பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்தால் தனக்கும் அந்த நோய் வந்திருக்குமே என, கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு, ஆர்த்தி ராவ் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

 இது குறித்து அவர்,   ''நித்யானந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது ஆசிரமத்திற்கு எப்போதாவது வந்து செல்லும் சாதாரண பக்தை அல்ல நான். 2005ல் அவர் முதன் முதலாக ஒரு குழுவுக்கு, "ஆனந்த ஸ்புரணா தியானம்' என்ற முதல் நிலை தியானப் பயிற்சியை தானே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்.

இந்தக் குழுவினர் தான் ஆசாரியர்கள் என பெயர் சூட்டப்பட்டு, 2005 முதல் இவர்கள், மற்றவர்களுக்கு ஆனந்த ஸ்புரணா தியானத்தை கற்றுக் கொடுக்கத் துவங்கினர்.


இந்த குழுவில் நானும், என் தந்தையும் இடம் பெற்றிருந்தோம். இந்தக் குழு நித்யானந்தாவுக்கு மிகவும் நெருக்கமானது. இதற்கான ஆதாரமாக என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்தப்புகைப்படம்.

அதில் கீழே உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவதாக நான் இருக்கிறேன். கடைசியாக என் தந்தை இருக்கிறார்.  இதில் இருந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் சாதாரண பக்தைகள் வரிசையில் நான் இல்லை என்பதையும், அவரது மிக முக்கியமான குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன் என்பதையும் சாதாரண மனிதர் கூட புரிந்து கொள்ள முடியும்''என்று தெரிவித்துள்ளார்.





ஒபாமா பற்றி தகவல் கொடுத்தால் ஒட்டகங்கள் பரிசு: அல்கொய்தா அறிவிப்பு

Posted: 10 Jun 2012 08:42 PM PDT


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் எங்கிருக்கிறார்கள் என்று தகவல் அளித்தால் அவர்களுக்கு கோழிகளும், ஒட்டகங்களும் பரிசாகத் தரப்படும் என்று அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய சோமாலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஷபாப் அல் முஜாகிதீன் அமைப்பின் முகமது காலப் என்பவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக எஸ்.ஐ.டி.இ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உளவு அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை கண்காணித்து வருகிறது.

ஒபாமாவின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஒட்டகங்களும், ஹிலாரியின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 கோழிகளும், 10 சேவல்களும் பரிசாக அளிக்கப்படும் என அவர் கூறியதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக காலப் மற்றும் அவருடைய 3 சகாக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது. அதற்கு பதிலடியாக ஷபாப் இவ்வாறு கேலியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது



சூர்யா சித்தார்த் தனுஷ் மற்றும் நான் : சுருதி சிறப்பு பேட்டி

Posted: 10 Jun 2012 08:21 PM PDT


தெலுங்கு சினிமாவின் 80 வருட வசூல் சாதனையை உடைத்த 'கப்பார் சிங்' படத்தின் ஹீரோயின்... ஸ்ருதிஹாசன். இந்த அளவுக்கு உற்சாகமாக ஸ்ருதியை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெடிக்கிறது ஆர்.டி.எக்ஸ். சந்தோஷம். 

''எதிர்பார்க்கவே இல்லாத சமயம் இப்படி ஒரு ஹிட்... எப்படி இருக்கு ஸ்ருதி?''

''அதுதான் சினிமாவோட பியூட்டி. இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சில படங்கள் சரியாப் போகலை. அப்போ கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது. ஆனா, அதுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எந்த சினிமா ஓடும், எது ஓடாதுனு யாராலயும் சொல்ல முடியாது. உழைப்பைக் கொட்ட வேண்டியது மட்டும் தான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட கடமை. அதனால, ஒவ்வொரு படத்துக்கும் ஹண்ட்ரட் பெர்சன்ட் உழைச்சேன்.  அப்படித் தான் 'கப்பார் சிங்'குக்கும் உழைச்சேன். இந்தப் பிரமாண்ட வெற்றி... என்ன சொல்றதுனு தெரியலை... ரொம்ப சந்தோஷம்! அப்பாவுக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷம். வெற்றியோ, தோல்வியோ எல்லாமே ஒரு அனுபவம்னு நினைப்பேன். தோல்வியை ஏத்துக்கிட்ட மாதிரி இந்த வெற்றியைக் கொண்டாடுறேன்!''

'' 'விஸ்வரூபம்' படத்துல உங்க பங்கு என்ன?''

''எனக்கும் விஸ்வரூபத்துக்கும் துளி சம்பந்தம் கிடையாது. ஆனா, அப்பா படம் பத்தி நிறைய சொன்னார். கேட்கவே சர்ப்ரைஸா இருந்துச்சு. சில படங்களை அப்பா தனக்காகவும் சில படங்களை ரசிகர்களுக்காகவும் பண்ணுவார். 'விஸ்வரூபம்' ரெண்டு பேருக்குமான படமா இருக்கும்!''

''உங்களோட நடிச்ச ஹீரோக்களைப் பத்தி சம்திங் சம்திங் ஷேர் பண்ணிக்கலாமே?'

''சூர்யா... எங்க ஃபேமிலி ப்ரெண்ட். சினிமா, நடிப்பு, டெக்னாலஜினு அவ்வளவு விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவர்கூட இருக்கும்போது, குடும்பத்துல ஒருத்தர் பக்கத்துல இருந்து கேர் எடுத்துக்கிற மாதிரி இருக்கும். சித்தார்த்... ஸ்க்ரீன்ல எனக்கு பக்கா ஃபிட். அதையும் தாண்டி எங்களுக்குள்ள நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. பெர்சனல் ஈக்குவேஷன்னு சொல்வாங்களே... அது சூப்பர்ப்பா இருக்கும். என்னைப் புரிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுக்கிற நல்ல நண்பன். தனுஷ் ரொம்ப புரொஃபஷனல். நல்ல பெர்ஃபார்மர். இன்னைக்கு டிரெண்ட் செட்டர் அவர்தான். ஒரே வார்த்தையில் சொல்லணும்னா, எல்லாரும் எனக்கு நல்ல நண்பர்கள்!''

''நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, சித்தார்த்தோட லிவிங் டுகெதர், தனுஷோட லவ்னு நிறைய சர்ச்சைகள் ரவுண்ட் அடிக்குதே?''

''என் மனசாட்சிக்கு என்னைத் தெரியும். சினிமாவில் என் லைஃப் 'ஆக்ஷன்', 'கட்'  ரெண்டுக்கும் நடுவில் மட்டும்தான் இருக்கு. வேற எந்த பெர்சனல் லைஃபை யும் நான் இன்னும் செலெக்ட் பண்ணலை. நான் நினைச்சிருந்தா, ஃபாரின்ல படிச்சப்பவே காதலிச்சிருக்கலாம். இன்னைக்கு வரை அப்படி ஒரு எண்ணமே எனக்கு வரலை. அப்போ மியூஸிக்ல பிஸியா இருந்தேன். இப்போ ஷூட்டிங்ல பிஸியா இருக்கேன். அவ்வளவுதான்!''

''தனுஷ், ஸ்ருதி நெருக்கமா நடிச்ச காட்சிகளைப் பார்த்து டைரக்டர்ங்கிறதை மறந்துட்டு, மனைவியா ஐஸ்வர்யா டென்ஷன் ஆனாங்க. அதைத்தான் மீடியா பெருசுபடுத்திருச்சு'னு கஸ்தூரி ராஜா சொல்லியிருக்கார். ஐஸ்வர்யா அப்படி எதுவும் ஃபீல் பண்ணினாங்களா?''

''தனுஷ், ஐஸ்வர்யா ரெண்டு பேரும் கணவன், மனைவிங்கிறதைவிட, ஹீரோ, டைரக்டராத்தான் ஸ்பாட்ல நடந்துக்கிட்டாங்க. '3' படத்தில் நடிக்க நான் சம்மதிச்சதே ஸ்கூல் பொண்ணு, மனைவி, விதவைனு மூணு கேரக்டர்ல வெரைட்டி காட்டலாமேனுதான். ஐஸ்வர்யா எப்படி டைரக்ட் பண்ணுவாங்களோனு சந்தேகமா இருந்துச்சு. ஆனா, முதல் நாளே அவங்க நல்ல டைரக்டர்னு தெரிஞ்சுக்கிட்டேன். படத்துல நடிச்சப்ப, நான் ஜனனிங்கிற கேரக்டரா மட்டும்தான் ஃபீல் பண்ணேன். அவங்க என்னை ஸ்ருதியா பார்த்தாங்களா... அதனால டென்ஷன் ஆனாங்களானு எல்லாம் எனக்குத் தெரியாது!''
''இப்படி நிறைய சர்ச்சை வர்றதைப் பார்த்துட்டு அப்பா எதுவும் கேட்டாரா?''
''உங்களுக்கு நான் ஸ்ருதி... அவருக்கு நான் மகள். நீங்க என்னை நம்பாம இருக்கலாம். ஆனா, அவர் எப்படி நம்பாம இருப்பார்? யாரையும் காதலிச்சா, நானே அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதனால, அவர் இதைப்பத்தி ஒரு வார்த்தைகூடக் கேட்கலை. கேட்கவும் மாட்டார்!''

''ஸ்ருதிக்குப் பிடித்த '3' பிடிக்காத '3' என்னென்ன?''

''ஹார்டுவொர்க், திறமை, நேர்மை  பிடிக்கும். டிராஃபிக், பொய், வெயில் பிடிக்காது!''



இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை

Posted: 10 Jun 2012 07:29 PM PDT


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பஸ்டன் நகரில் நடந்து வருகிறது. பலத்த மழையால் முதல் இரு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
 
இதைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டத்தில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ராம்டின் 60 ரன்களுடனும், ராம்பால் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ராம்பால் முந்தைய நாள் ரன்னுடன் வெளியேற்றப்பட்டார்.
 
அடுத்து கடைசி விக்கெட்டுக்கு டினோ பெஸ்ட் களம் இறங்கினார். ராம்டின்- பெஸ்ட் ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. நிலைகொண்டு விளையாடிய இந்த இணையால் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பாராத விதமாக 400 ரன்களை கடந்தது. மேலும், டினோ பெஸ்ட் புதிய சாதனையும் நிகழ்த்தினார்.
 
2004-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியாவின் ஜாகீர்கான் 75 ரன்கள் எடுத்ததே, 11-வது வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்டில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும். அந்த ஸ்கோரை கடந்து 30 வயதான பெஸ்ட் புதிய உலக சாதனை படைத்தார். 5 ரன்னில் முதலாவது சதத்தை தவற விட்ட பெஸ்ட் 95 ரன்களில் (112 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 426 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ராம்டின் 107 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
 
ராம்டின்-பெஸ்ட் ஜோடி 10-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் திரட்டியது. கடைசி விக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் (இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்ல் ஹூபர்-வால்ஸ் 1993-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்திருந்தனர்) இதுவாகும். ராம்டின்-பெஸ்ட் கூட்டணி இன்னும் 9 ரன்கள் எடுத்திருந்தால், இந்த வகையிலும் உலக சாதனை படைத்திருப்பார்கள்.
 
இங்கிலாந்து தரப்பில் ஆனியன்ஸ் 4 விக்கெட்டுகளும், பிரிஸ்னன், ஸ்டீவன் பின் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 11 ஓவர் முடிந்திருந்த போது குக் (4 ரன்), டிராட் (17 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சே இன்னும் முடியாததால் இந்த டெஸ்ட் டிராவில் முடிகிறது. 



புதிய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் இன்று பதவி ஏற்பு

Posted: 10 Jun 2012 07:23 PM PDT


மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் தலைமை தேர்தல் ஆணையாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.சம்பத் நியமிக்கப்பட்டார். அவர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இன்று (திங்கள் கிழமை) காலை பதவி ஏற்றுக் கொள்கிறார். ஓய்வு பெற்ற குரேஷி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
 
இந்தியாவின் 18-வது தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்கும் சம்பத் வருகிற 2014-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை தலைமையேற்று நடத்துவார். இந்திய அரசியல் சட்டப்படி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்பவர் 6 ஆண்டுகள் அல்லது அவரது 65-வது வயது வரை இந்த பதவியில் இருக்கலாம். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கு 65 வயது நிறைவடைவதால், அப்போதுவரை அவர் இந்த பதவியில் இருப்பார்.




ஹாலிவுட்டில் தயாராகும் இந்திய சரித்திர கதையில் கமல்: ஹாலிவுட் டைரக்டர்

Posted: 10 Jun 2012 07:00 AM PDT


இந்திய சரித்திர கதையை வைத்து தயாராகும் ஹாலிவுட் படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.   நடிகர் கமலஹாசன் படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தமிழ் சினிமாவை உலக அளவில் பேசவைத்து வருகிறார்.

தற்போது 'விஸ்வரூபம்' படத்தை எடுத்து முடித்துள்ளார். இதில் கதாநாயகனாக நடித்து இருப்பத்துடன் அவரே டைரக்டும் செய்து இருக்கிறார். விஸ்வரூபம் படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் கதை.

ஹாலிவுட் படங்களைப் போன்ற சண்டைக்காட்சிகளை பிரத்யேகமாக வெளிநாடுகளில் எடுத்து பிரமிப்பூட்டி இருக்கிறார். தற்போது விஸ்வரூபம் படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அடுத்து கமலஹாசன் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். ஹாலிவுட் படத்தில் நடிப்பது பற்றி சிங்கப்பூரில் நடந்த விஸ்வரூபம் பட அறிமுக விழாவில் கமலஹாசன் அறிவித்தார்.


 அவர் கூறியதாவது:-

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஒஸ் போர்னே எனது நண்பர் அவர் என்னிடம் இணைந்து இந்திய சரித்திர கதை ஒன்றை ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் ஹாலிவுட் சாம்பியானான ஒஸ்போர்னேயுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

அவரது திறமையும் உழைப்பும் உலகுக்கு நன்கு தெரியும் கடின உழைப்பே சிறப்பாக அமையும். அப்படிப்பட்ட ஒஸ்போர்னே நம்மை அணுகினால் சம்மதிக்காமல் இருக்க முடியுமா? ஒஸ்போர்னே எனது மனதில் இடம் பிடித்தவர். எல்லா நடிகர்களும் அவருடன் பணியாற்றுவதை விரும்பாமல் இருக்க முடியாது. அவர் ஹாலிவுட்டில் மிகப்பெரிய சாம்பியன்களுடன் பணியாற்றிவர்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

திலார்டு ஆப் ரிங்ஸ், தி ரிட்டன் ஆப் கிங், தி வாட்டர் ஹார்ஸ், தி வாரியர்ஸ் வே, தி புராபெட் போன்ற ஹாலிவுட் படங்கள் ஓஸ்போர்னேயை உலக அளவில் பேச வைத்தது குறிப்பிடத்தக்கது. 

கமல் பற்றி ஒஸ்போர்னே கூறுகையில், 


அவர் ஒரு சினிமா பெட்டகம். சர்வதேச அளவில் புகழ் பெற்றவர். சில வருடங்களுக்கு முன்பே கமலஹாசனை எனக்கு தெரியும். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. சமீபத்தில் 'விஸ்வரூபம்' படத்துக்காக ஹாலிவுட் வந்திருந்தார். அப்போது விஸ்வரூபம் படத்தை பார்க்க எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

படத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். படத்துடன் ஒன்றிவிட்டேன். அதில் இருந்து மீள முடியவில்லை. அவரும் நானும் இந்திய சரித்திர கதையை ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

இதுபற்றி கமலிடம் பேசியபோது அவரது அறிவும், திறமையும் என்னை வியக்க வைத்தது. அப்போதே அவர் சினிமா பெட்டகம் என்பதை புரிந்து கொண்டேன். புதிய படம் பற்றி விவாதித்தோம். ஹாலிவுட்டுக்கு ஏற்ப புதுப்புது ஐடியாக்களை உருவாக்கி உள்ளோம். நான் படத்தில் நடிப்பதுடன் கதாசிரியராகவும் உள்ளேன். அவர் இந்த படத்தை என்னையே டைரக்டு செய்யச் சொன்னதால் டைரக்ஷன் பணியையும் நான் மேற்கொள்ள சம்மதித்தேன் என்றார்.



பாலியல் கொடுமைக்கு எதிரான பேரணியில் பெண்கள் மானபங்கம்

Posted: 10 Jun 2012 05:31 AM PDT


எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் முபாரக் ஆதரவாளர்கள் புகுந்து பெண்களை மானபங்கம் செய்ய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் முபாரக்கின் ஆதரவாளர்கள் போட்டியிட கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உள்ளே நுழைந்த முபாரக் ஆதரவாளர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்..

இதைக் காண்டித்து தக்ரீர் மைதானத்தில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஆண்கள் ஆதரவு வளையம் அமைத்து நின்றனர். ஆனாலும் முபாரக்கின் ஆதரவாளர்கள் அட்டகாசம் தொடர்ந்தது. இதையடுத்து பெண்கள் அங்கிருந்து தப்பியோடி அகதி முகாம்களில் பதுங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.



காதல் கொன்று காமம் வென்று காதலனை கொலை செய்ய துணிந்த வேலூர் மாணவி

Posted: 10 Jun 2012 05:25 AM PDT

வேலூரை சேர்ந்தவர் சீனிவாசன் (மிராசுதாரர்). பெங்களூர் ஜாலஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சுஷ்மா (வயது22). பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். முதலாமாண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வருவார். கார் டிரைவராக ஜாலஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் வேலைபார்த்து வந்தார். இருவரும் அடிக்கடி தனியாக காரில் சென்று வந்ததால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். பெற்றோருக்கு தெரியாமல் கோவா, டெல்லி, மங்களூர் போன்ற இடங்களுக்கு சுற்றுலாவுக்கு சென்று ஓட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்தனர்.

அங்கு இருவரும் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு சந்தோஷமாக சுற்றி திரிந்தனர். இப்படி சந்தோஷமாக சென்ற காதல் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. சுஷ்மா, மஞ்சுநாத்துடன் பழகுவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் இருந்து சுஷ்மா விலகி வருவதை உணர்ந்த மஞ்சுநாத் அதுபற்றி அவரிடம் கேட்டார். அப்போது உன்னுடன் பழகுவதை விரும்பவில்லை. என்னை நீ மறந்து விடு என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத் ஆவேசப்பட்டார். என்னை காதலிக்க மறுத்தால் நாம் சுற்றுலாவிற்கு சென்றபோது உன்னுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிடுவேன் என்று மிரட்டினார். 

இதனால் மஞ்சுநாத்துடன் பழகுவதை சுஷ்மா முற்றிலும் நிறுத்திவிட்டார். ஆனால் மஞ்சுநாத் தொடர்ந்து சுஷ்மாவை சுற்றிசுற்றி வந்தார். மேலும் திருமணம் செய்யவும் வலியுறுத்தி வந்தார். தனது நண்பன் உசேன் என்பவர் மூலம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுஷ்மாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுஷ்மா மஞ்சநாத்தையும் அவரது நண்பர் உசேனையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். கொலையை நிறைவேற்ற தன்னுடைய பள்ளி தோழன் அஜய்குமார் என்ற ஜாக்கியின் உதவியை நாடினார்.

மஞ்சுநாத்தையும், உசேனையும் கொலை செய்ய ஜாக்கி கூலிப்படை ஏற்பாடு செய்தார். கூலிப்படைக்கு  ரூ.5 லட்சம் பணம் சுஷ்மா கொடுத்தார். திட்டத்தை நிறைவேற்ற மஞ்சுநாத்தையும் உசேனையும் போனில் தொடர்பு கொண்ட சுஷ்மா ஜாலஹள்ளி எச்.எம்.டி. ஜங்ஷனுக்கு வருமாறு அழைத்தார். அப்போது அவர் உன் விருப்பப்படி நாம் திருமணம் செய்து கொள்ளலாம். என்று அழைத்துள்ளார். இதனை நம்பி கடந்த மே மாதம் 11-ந் தேதி இரவு மஞ்சுநாத், உசேனுடன் அங்கு வந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த சுஷ்மா இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு  வந்தார். காரில் ஜாக்கி இருந்தார். கார் சிறிது தூரம் சென்றதும் கூலிப்படையினர் 4 பேர் காரில் ஏறினர். கூலிபடையை பார்த்ததும் ஏதே விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்து கொண்டு மஞ்சுநாத் வேகமாக சென்ற போதே காரிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். உசேன் மட்டும்  கூலிப்படையிடம் மாட்டிக் கொண்டார். கூலிப்படையினர் அவரை காரில் வைத்தே சுஷ்மாவின் கண் எதிரில் சுத்தியால் குத்தி கொலை செய்தனர். பிணத்தை தொட்டப்பள்ளாப்புராசில் வீசி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

2 நாட்கள் கழித்து உசேனின் பிணத்தை மீட்டு ஜாலஹள்ளி மற்றும் தோட்டப்பள்ளாபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மஞ்சுநாத் போலீசாரிடம் நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார். போலீசார் தனிப்படை அமைத்து சுஷ்மாவையும் கூலிப்படையையும் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது சுஷ்மா அவரது சொந்த ஊரான வேலூரில் பதுங்கியிருந்து போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் வேலூர் வந்து சுஷ்மாவை கைது செய்தனர். அவரை பெங்களூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதலனையும் அவரது நண்பரையும் கொலை செய்ய ரூ.5 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவியதை ஒப்புக் கொண்டார். அதில் காதலனின் நண்பர் பலியானதையும் காதலன் தப்பி ஓடியதையும் போலீசாரிடம்  கூறினார். அவர் கொடுத்த தகவலின்படி  ஜாக்கி (20), கூலிப்படையை சேர்ந்த தீபக் (19), அபிஷேக் (19), லட்சுமணன் (27), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாணவி காதலனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின்!

Posted: 10 Jun 2012 04:53 AM PDT


சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது.

பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது லெனினின் உடல். மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் இத்தனை காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்த்துள்ளனர்.

சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1924ம் ஆண்டு 53வது வயதில் லெனின் மரணமடைந்தார். அவரது உடலை இத்தனை காலமாக அடக்கம் செய்யாமல் வைத்திருப்பது அபத்தமானது என்று ரஷ்ய கலாச்சார அமைச்சர் விலாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார். இவர் அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மிகுந்த மரியாதைக்குரியவரான லெனின் உரிய அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மெடின்ஸ்கி கூறியுள்ளார். அதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் தனது உடலை மிகச் சாதாரணமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசை. அதைக் கூட இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது தவறானது. அவரது விருப்ப்பபடி சாதாரண கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

மிகவும் மரியாதைக்குரிய இடத்தில், மரியாதையான, கெளரவமான முறையில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படும். தற்போது லெனின் உடல் அடங்கியுள்ள நினைவிடம், சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றப்படும் என்றார் அவர்.

லெனின் உடலை அடக்கம் செய்ய ரஷ்ய அரசு தீர்மானித்திருப்பதையே மெடின்ஸ்கியின் பேச்சு குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. லெனினின் தாயார் செயின்ட் பீ்ட்டர்ஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறைக்கு அருகிலேயே லெனின் உடலும் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த சோவியத் தலைவர் ஸ்டாலின் உதத்ரவின் பேரில் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் மக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அவரது உடல் அடக்கம் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

தற்போதைய அதிபர் புடின் கூட லெனின் உடலை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தியே வந்துள்ளார். மூத்த ரஷ்யர்களால் லெனின் ஒரு மாபெரும் தலைவராக இன்று வரை மதிக்கப்படுவதால் லெனின் உடலை அடக்கம் செய்ய புடின் தயங்குவதாக தெரிகிறது.



இந்தி எதிர்ப்பு கார்ட்டூன் தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதா:கல்வியாளர் பேட்டி

Posted: 10 Jun 2012 04:39 AM PDT


தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டுள்ளது.

அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது என்று, இங்குள்ள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்று கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில் மத்திய அரசு பாடப்புத்தகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்து கார்ட்டூன் அச்சிடப்பட்டிருப்பதாக கூறுவதை கல்வியாளர் மறுத்துள்ளார். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழக தலைமை ஆலோசகராக இருந்தவர் யோகேந்திர யாதவ்.

அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திர விவகாரத்தை அடுத்து, இப்பதவியில் இருந்து விலகினார். அவர் இந்தி எதிர்ப்பு கேலிசித்திரம் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு பாடப்புத்தகத்துக்கு திராவிட இயக்கத்தினர் ஆட்சேபனை எழுப்பி இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். இதுபோன்ற முயற்சிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வேதனை அளிக்கிறது. ஒரு நிகழ்வை அல்லது சம்பவத்தை எழுத்து வடிவமாக்கும்போது, அதற்கு தகுந்தவாறு கார்ட்டூன்கள் வரைந்து, அதில் வரும் உருவங்கள் பேசுவதுபோல் வசனங்கள் எழுதப்படுவது உண்டு. குறிப்பிட்ட கதை, அல்லது கட்டுரைக்கு சுவையையும் சுலபமாக புரிதலையும் தருவதுதான் கார்ட்டூன்.

வசனமோ அல்லது வாசகமோ இல்லாமல் ஒரு கார்ட்டூனை படிக்க முடியாது. கார்ட்டூனும், வசனமும் பிரிக்க முடியாதவை. இந்த பாடப்புத்தகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட ஆழமான விளைவையும் அங்கீகரிக்கிறது. இந்தியாவில் எழுதப்பட்ட வரலாற்று புத்தகங்களில், திராவிட இயக்கத்து முறையான அங்கீகாரம் அளித்து எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவாகும்.

மேலோட்டமாக பார்த்தால், இந்தி எதிர்ப்பை கொச்சைப்படுத்துவதுபோல் தோன்றலாம். ஆனால் முழுமையாக படித்து முடிக்கும்போது அதில் உண்மை இல்லை என்பது தெரியவரும். தேசியவாதத்துக்கும், மாநில வாதத்துக்கும் ஒத்தியல்புகள் இருப்பதை பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது. அப்படி இருக்கையில், தமிழின் பெருமையை, இது அவமதிக்கிறது. தமிழர்களை புண்படுத்துகிறது என்ற வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது?

இவ்வாறு அவர் கூறினார்.




ஜெர்மனிக்கு ஆதரவாக நூதன நிர்வாண போஸ் கொடுத்த அழகி!(போட்டோக்கள்)

Posted: 10 Jun 2012 04:32 AM PDT


யூரோ கோப்பைக் கால்பந்து ஜூரம் ஐரோப்பிய நாடுகளை சுழன்றடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மாடல் அழகி மிக்கேலா ஷீபர், ஜெர்மனி அணிக்கு ஆதரவு தெரிவித்து தனது உடலின் முக்கிய பாகங்களில் கால்பந்து மற்றும் ஜெர்மனி நாட்டு தேசியக் கொடியின் படத்தை வரைந்து வித்தியாசமான முறையில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்போட்டியில் தனது நாட்டு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மிக்கேலா நூதனமான முறையில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

தனது இரு மார்புகளையும் கால்பந்து படத்தை வரைந்து மறைத்துள்ள அவர் தனது அந்தரங்கப் பகுதியில் ஜெர்மனி தேசியக் கொடியை வரைந்துள்ளார்.

இந்தக் கோலத்துடன் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, பொதுமக்கள் முன்பு காட்சி அளித்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார் மிக்கேலா.

மிக்கேலா, அந்த ஊர் பூனம் பாண்டே போல...!














சென்னையில் விரைவில் அரசு கேபிள் டி.வி.- 500 சேனல்களை பார்க்கலாம்

Posted: 10 Jun 2012 04:04 AM PDT

அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
சென்னையில் அதிநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் அரசு கேபிள் டி.வி. விரைவில் செயல்பட உள்ளது. இதற்கான செட்ஆப் பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உலக அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

வருகிற 20-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மொத்தம் 3 வகையான செட்ஆப் பாக்ஸ் விற்பனை செய்யப்படும். இதில் விருப்ப சேனல்கள் உள்பட 500 சேனல்களை பார்க்க முடியும். இதில் எச்.டி. எனப்படும் உயர்தொழில் நுட்பம் கொண்ட 20 சேனல்களும் அடங்கும்.

சென்னைக்கு முதல் கட்டமாக 20 லட்சம் செட்ஆப் பாக்ஸ் தேவைப்படும். இவற்றை மிகவும் தரமானதாக தயாரித்து வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 வருடமாவது உழைக்கும் வகையில் செட்ஆப் பாக்ஸ் கருவிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.

செட்ஆப் பாக்ஸ் வழங்க டெண்டர் போட்டுள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் கேபிள் ஒளிபரப்பில் செட்ஆப் பாக்ஸ் கட்டாயம் என்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை நகரில் செட்ஆப் பாக்ஸ் வழங்குவதற்காக வீடுதோறும் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ.500 டெபாசிட் வசூலித்து வருகிறார்கள்.




தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்

Posted: 10 Jun 2012 03:32 AM PDT

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் பெற்றார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான அவர் 19-21, 21-15, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த ராட்ஷானோக்கை வீழ்த்தினார்.

இந்த ஆண்டு அவர் கைப்பற்றிய 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். மார்ச் மாதம் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரீயில் தங்கம் வென்று இருந்தார்.





எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜீத்: முருகதாஸ்

Posted: 10 Jun 2012 03:09 AM PDT


நடிகர் அஜீத் குமார் தான் தனக்கு திரையுலக வாழ்க்கையைத் தந்தவர் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் கடந்த 2001ம் ஆண்டு தீனா படம் மூலம் இயக்குனரானார். அதைத் தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். கோலிவுட் தவிர பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கிலும் ஒரு படம் எடுத்துள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தான் கடந்து வந்த பாதை பற்றி கூறுகையில்,

வட இந்திய மக்கள் என்னை ஒரு இயக்குனராக அதிலும் வெற்றிகரமான இயக்குனராக ஏற்க கஷ்டப்படுகிறார்கள். இப்பொழுதே இப்படி என்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்து பாருங்களேன். ஆனால் அஜீத் எனக்கு 'நோ' சொல்லவில்லை. நான் கேட்டதும் ஒப்புக் கொண்டார். நாங்கள் அப்போது தீனா படத்தில் பணியாற்றினோம். இன்றைக்கு நான் எனது ஏழாவது படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறேன். நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்க அவர் தான் காரணம்.

நான் 6 படங்கள் எடுத்த பிறகே விஜயுடன் பணியாற்ற முடிந்தது. அவர் என்னுடைய நல்ல நண்பர். அவர் பிறரிடம் படத்தை தவிர வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார். ஆனால் என்னிடம் மட்டும் சொந்த விஷயங்களைப் பற்றி பேசவும் தயங்கமாட்டார் என்றார்.



மின் அழுத்தக் குறைவால் எகிறிய மின் கட்டணம்: 4 மடங்கு அதிகரிப்பு

Posted: 10 Jun 2012 02:38 AM PDT


சென்னையில் கோடை காலத்தை சமாளிப்பது பெருங்கஷ்டம். வெளியில் மட்டும் வெயில் கொளுத்துவதில்லை. வீட்டிற்குள்ளும் அனலாய் தகிப்பதால் மக்கள் இரவில் தூக்கமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நடுத்தர மக்களும் வீடுகளில் ஏ.சி. பொருத்தி உள்ளனர். ஆனால் மின் அழுத்தக் குறைவு காரணமாக மின் விசிறி, ஏ.சி. சரியாக இயங்குவதில்லை. மின் அழுத்தம் குறைவாக இருந்தாலும் மின் கட்டணம் 4 மடங்கு எகிறி இருப்பது நுகர்வோரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

அமைந்தகரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறும்போது, கோடை காலத்தில் ஏ.சி. பயன்படுத்தினாலும் இதுவரை 500 யூனிட்டுகளை தாண்டியதில்லை. ஆனால் இம்முறை 649 யூனிட் காட்டுகிறது. மின் கட்டணம் 2,700 செலுத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளேன் என்றார்.

இதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறும்போது, கடந்த ஆண்டும் கோடையில் ஏ.சி. பயன்படுத்தினேன். அப்போது 650 யூனிட் வரை செலவானது. மின் கட்டணமாக 1,023 செலுத்தினேன். இந்த ஆண்டு 780 யூனிட் என்று காட்டுகிறது. மின் கட்டணம் 3 ஆயிரத்து 50 செலுத்தவேண்டி உள்ளது என்றார்.

இதேபோல் கார்த்திகேய புரத்தை சேர்ந்த பாபு கூறும்போது, கடந்த ஆண்டு கோடையில் மின் கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தினேன். இந்த ஆண்டு 9 ஆயிரத்து 100 வந்துள்ளது என்றார். இதேபோல அரும்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் மின் அழுத்தக் குறைவால் மின் பயனீட்டு அளவு அதிகரித்து மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த ஏப்ரல்-1 முதல் மின் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வை பொதுமக்கள் சகித்து கொண்டனர். ஆனால் தற்போது உருவாகி உள்ள இந்த மறைமுக மின் கட்டண தாக்குதல் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி மின்வாரிய என்ஜினீயர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மின் விநியோகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதனால் பயனீட்டு அளவு (யூனிட்) வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக மின் விநியோகம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது. பெரும்பாலான துணை மின் நிலையங்களில் கெப்பாசிட்டர் பேங்குகள் மற்றும் சின்டுரோன்ஸ் கண்டென்சர்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

இவற்றை பராமரித்தால்தான் இந்த ஏற்ற இறக்கத்தை தவிர்க்க முடியும் என்றார் நுகர்வோர்கள் ஏ.சி. அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் மின் அழுத்தக்குறைவு ஏற்படுகிறது என்று மின் வாரியம் கதை கட்டினாலும் பல கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு வருமானம் குவிந்துள்ளது என்பதுதான் உண்மை.




''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத்த சிறுவன்!

Posted: 10 Jun 2012 01:31 AM PDT


பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நரம்பு புடைக்க உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தபோது பத்து வயது சிறுவன் ஒருவன் சரியான கேள்வி, அப்படியே கேளு என்று சத்தமாக பேசி விஜயகாந்த்தைப் பார்த்து பாராட்டியதால் விஜயகாந்த் ஆச்சரியமடைந்து சில நிமிடங்களுக்கு தனது பேச்சை நிறுத்தி விட்டு அந்த சிறுவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்து அவர் நேற்று இரவு அவர் பிரசாரம் செய்தார்.

அப்போது பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து அவர் மக்களைப் பார்த்து கேள்வி கேட்டபடி பேசினர். அப்போது சரியான கேள்வி, அப்படித்தான் கேட்கணும், அப்படியே கேளு என்று ஒரு குரல் திடீரென கேட்டது. இதைக் கேட்டு அனைவரும் யாரப்பா அது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.

அப்போது விஜயகாந்த் வேன் நின்றிருந்த இடத்திற்கு அருகே இருந்த ஒரு ஓட்டு வீட்டின் உச்சியில் ஒரு பத்து வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவன்தான் அப்படி சத்தமாக பேசியது. இதைப் பார்த்து விஜயகாந்த்தின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், சிறுவனை கீழே இறங்குமாறு கூறினர்.

ஆனால் சிறுவன் இறங்கவில்ல. அப்போது விஜயகாந்த்தும் அந்த சிறுவனைப் பார்த்தார். அதைப் பார்த்த சிறுவன், சரியாத்தான் பேசுறீங்க, சரியாத்தான் கேக்குறீங்க, அப்படியே பேசுங்க என்று படு தில்லாக கூறியதால் விஜயகாந்த் வியப்படைந்து பேச்சை நிறுத்தி விட்டார்.

அப்போது போலீஸார் மீண்டும் சிறுவனை கீழே இறங்குமாறு கூறியபோது, இது என்னோட வீடு, எப்ப இறங்கனும்னு எனக்குத் தெரியும் என்று படு துணிச்சலாக பதிலளித்தான். அத்தோடு நில்லாமல் அதே வேகத்தில் விஜயகாந்த் பக்கம் திரும்பி, நீங்க தொடர்ந்து பேசுங்க என்றும் உத்தரவிடுவது போல கூறவே விஜயகாந்த் சிரித்து விட்டார். பிறகு மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

சங்கரன்கோவில் பிரசாரத்திற்குப் போனபோது ஒரு விவசாயி, விஜயகாந்த்துடன் சண்டைக்குப் போனது நினைவிருக்கலாம். ஆனால் புதுக்கோட்டையில் ஒரு சிறுவன் விஜயகாந்த் பேச்சை பலமாக பாராட்டிப் பேசி அனைவரையும் அசர வைத்தது குறிப்பிடத்தக்கது.




ராஜசேகர ரெட்டி மரணத்தில் பயங்கர சதி திட்டம்: மனைவி குற்றச்சாட்டு

Posted: 10 Jun 2012 01:23 AM PDT


ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு எம்.பி. தொகுதிக்கும் வருகிற 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ராஜசேகர ரெட்டி மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவரது தாயார் விஜயலட்சுமி, தனது மகள் சர்மிளாவுடன் தேர்தல் பிரசாரத்தில் குதித்து உள்ளார்.

நேற்று நெல்லூர், மற்றும் காவலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு நின்றனர்.

அவர்கள் மத்தியில் விஜயலட்சுமி பேசியதாவது:-
எனது கணவர் (ராஜசேகர ரெட்டி) ஹெலிகாப்டர் விபத்து மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. இது குறித்து அப்போதைய விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேலிடம் எனது மகன் புகார் செய்து இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது கணவர் மரணம் அடைந்த அன்று வழக்கமாக பயணம் செய்யும் ஹெலிகாப்டர் கொண்டு வரப்படவில்லை. பழைய ஹெலிகாப்டர்தான் கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி என் கணவர் கேட்டபோது அது சர்வீஸ் செய்ய அனுப்பப்பட்டதாக கூறினார்கள். ஆனால் எனது கணவர் புறப்பட்ட 1 மணி நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்துள்ளது. மோசமான மேகங்களால் விபத்து நடந்ததாக கூறினார்கள். ஆனால் விசாரணையில் மேகங்களே இல்லை என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டரில் உள்ள கறுப்பு பெட்டியில் 36 நிமிடம் பேச்சுகள் பதிவு செய்யும் வசதிகள் உள்ளது.

ஆனால் 7 நிமிட பேச்சு மட்டுமே உள்ளது. மற்றவை அழிக்கப்பட்டதாக கருதுகிறோம். அதோடு எந்த மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டர் 2 1/2 மணி நேரம் நடுவானில் பறக்க முடியும். அதற்கான எரிபொருள் வசதி உள்ளது. அப்படி இருக்கும்போது இது ஏன் மலைப் பகுதிக்கு செல்லவேண்டும். ஹெலிகாப்டர் விபத்தில் எனது கணவரின் பாதுகாப்பு அதிகாரி வெஸ்லியும் இறந்து உள்ளார். அவரது துப்பாக்கி கிடைத்துள்ளது. ஆனால் அதில் தோட்டாங்கள் இல்லை. அது எப்படி மாயமானது.

இப்படி பல சந்தேகங்களுக்கு எங்களுக்கு விடை கிடைக்கவில்லை எனது கணவர் மரணத்தில் பயங்கர சதி நடந்துள்ளது. எப்படி அவரசர அவசரமாக ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்தார்களோ அதேபோல் ஹெலிகாபடர் விபத்து விசாரணையும் அவசர அவசரமாக விசாரித்து விபத்து என முடிந்துவிட்டது. இதற்காக நான் யார் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. எங்களை வெற்றி பெறச் செய்தால் இந்த சதியின் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு விஜயலட்சுமி பேசினார்.






Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™