Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


துப்பாக்கி இந்தி ரீமேக்கில் விஜய் ...?

Posted: 15 Jun 2012 05:54 AM PDT


இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் துப்பாக்கி படம் கடைசிகட்ட படபிடிப்பில் இருக்கிறது. துப்பாக்கி படம் முடிந்ததும் இந்தியில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தியில் உருவாகவிருக்கும் படம் 'துப்பாக்கி' படத்தின் ரீமேக்காம்.

ஏ.ஆர்.முருக்கதாஸின் இந்தி படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதால் அந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா? எனக் கேட்ட போது ஏ.ஆர்.முருகதாஸ், 'இதுவரை சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிப்பது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

என் கவனமெல்லாம் துப்பாக்கி படத்தை முடிப்பதில் தான் இருக்கிறது. பிரபுதேவாவின் 'ரவுடி ரத்தோர்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்தார். என் படத்திலும் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக விஜய்யை நடிக்க வைப்பேன்' என்று கூறியுள்ளார்.



பிரணாப் முகர்ஜிக்கு முலாயம்-மாயாவதி ஆதரவு: பாஜக, இடதுசாரிகளும் ஆதரவு?

Posted: 15 Jun 2012 05:39 AM PDT


நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியை சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஆதரித்துள்ளன.

அதே போல பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

தம்மை மமதா நிராகரித்தபோதே உடனடியாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மூத்த இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார் பிரணாப் முகர்ஜி. இடதுசாரிகளும் அமைதி காத்து வந்தனர்.

கடந்த காலங்களில் தேசிய அரசியல் இடதுசாரிகள் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருந்ததைப் போல தாமும் உருவெடுக்க முடியும் என்று மமதா கருதியிருந்தார். இப்போது மமதாவின் இடம் காலியாவதால் மீண்டும் காலச்சக்கரம் இடதுசாரிகளிடமே திரும்பியிருக்கிறது. பிரணாப்பை இடதுசாரிகள் ஆதரிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது

தேஜகூ ஆலோசனை

பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் கூடி ஆலோசனை நடத்துகிறது. மேலும் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜூடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

அனேகமாக குடியரசு துணைத் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு பிரணாப்பை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கலாம் என்று தெரிகிறது.

முலாயமுடன் பேச்சு

பிரணாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அதே போல பிரதமரும் பேசினார். இதையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு சமாஜ்வாடி ஆதரவளிக்க முன் வந்துள்ளது. இத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.

பகுஜன் ஆதரவு

இதனிடையே லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

கலாம் போட்டியில்லை

இதனிடையே தமக்கு ஆதரவு குறைந்து வருவதால் தாம் தோற்று விடுவோமோ எனக் கருதும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிடத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.




டெபாசிட் வாங்கியது தேமுதிக! ஜெ.வை சந்திக்க அதிமுக அமைச்சர்களுக்கு பயம்!

Posted: 15 Jun 2012 05:25 AM PDT


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

பிரச்சாரத்திலும் அதிமுகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தேமுதிக 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தேமுதிக தனது டெபாசிட்டை பெற்றுவிட்டது.

இதனால் தேமுதிகவினர் உற்சாகம் அடைந்தனர். வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடியதுடன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தேமுதிக டெபாசிட் வாங்கியதால், அதிமுக அமைச்சர்கள் கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்திக்க நடுங்குகின்றனர். புதுக்கோட்டையில் தங்கியுள்ள அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பீதியில் உள்ளனர்.



ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!

Posted: 15 Jun 2012 05:19 AM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தி்ல அவர் பிரணாபின் பெயரை முன்மொழிந்தார். இதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து ஜூன் 24ம் தேதி நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து விட்டன. மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வரும் முலாயம் சிங்யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் கடைசி நேரத்தில் முலாயம் சிங் யாதவை தங்கள் பக்கம் காங்கிரஸ் கட்சி திருப்பி விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்தது காங்கிரஸ்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவித்தார். இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அதை கைதட்டி வரவேற்றனர்.

24ம் தேதி பதவி விலகுவார் பிரணாப்

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். வருகிற 24ம் தேதி அவர் தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் வழங்குவார் என்று தெரிகிறது.




விஸ்வரூபத்தில் பூஜா குமாரை முத்தமிட்டாரா கமல்??

Posted: 15 Jun 2012 03:40 AM PDT


கமல் படம் என்றால் நடிப்பு, மேக்கப் மற்றும் முத்தம் ஆகியவைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசனுக்கும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமாருக்கும் இடையே முத்தக் காட்சி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விஸ்வரூபம் படம் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு வேறு கமல் போகப் போவதால் படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் குஜாலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகி பூஜா குமார் தனது தமிழ் மறு வருகை குறித்தும், கமல் குறித்தும் புளகாங்கிதப்பட்டுப் பேசியுள்ளார். இவர் ஏற்கனவே 2000மாவது ஆண்டு வந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தவர். அத்தோடு நடிப்பிலிருந்து விலகிப் போனவர். இப்போது கமல்ஹாசன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இதுகுறித்துக் கூறிய பூஜா, இந்தப் படம் நானாக திட்டமிட்டதில்லை. கமல் சார்தான் என்னை திடீரென கூப்பிட்டுப் பேசினார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. எனக்கு அறிமுகம் கொடுத்த சென்னைக்கும், தமிழ் சினிமாவுக்கும் நான் செய்துள்ள பிரதிபலனாகவே இப்படத்தை கருதுகிறேன் என்றார்.

சரி, கமல் படம் என்றாலே முத்தம் இல்லாமல் இருக்காது. இப்படத்தில் எப்படி என்று கேட்டால், அப்படியா, எனக்குத் தெரிந்து இப்படத்தில் முத்தக்காட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லையே என்று சிரித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஆனால் நான் வேறு ஒரு படத்தில் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறி நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தார்.



சினிமாவுக்கு லாயக்கு இல்லாதவர் நடிகை : இயக்குனர் தாக்கு

Posted: 15 Jun 2012 02:55 AM PDT


அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி. இப்படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். அவர் திடீரென நடிக்க மறுத்து படப்பிடிப்பில் இருந்து ஓடியதால் மம்தா மோகன்தாஸ் நாயகியானார்.

பிராச்சி தேசாய் ஓடியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக இயக்குனர் மகிழ்திருமேனி கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக நடிக்க பிராச்சி தேசாயை தேர்வு செய்ததும் அவர் வீட்டுக்கு போய் முழு கதையையும் சொன்னேன். அவருக்கு பிடித்தது. முந்தைய படங்கள் வயதுக்கு மீறிய கதைகளாக இருந்தன. இந்த படம் என் வயதுக்கு ஏற்ற கதை. நிச்சயம் நடிப்பேன் என்றார். அட்வான்சும் வாங்கினார்.

சென்னையில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. பிராச்சிதேசாயும் அதில் நடிக்க மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வந்தார். இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்தோம். மறுநாள் காலை படப்பிடிப்பை திடீரென ரத்து செய்து விட்டு மும்பை போய்விட்டார். இதனால் அவரது காட்சிகளை படமாக்க முடியவில்லை.

அதன்பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் நடிக்க வரவில்லை. பிராச்சி தேசாய் சினிமாவுக்கு லாயக்கு இல்லாத நடிகை. என் படங்களுக்கு அவரை இனிமேல் அழைக்க மாட்டேன். 'தடையற தாக்க' படம் நன்றாக ஓடுகிறது. ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

வினியோகஸ்தர்களும் வசூலில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து போலீஸ் கதையொன்றை படமாக்க உள்ளேன். இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

இவ்வாறு மகிழ்திருமேனி கூறினார்.



குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக முன்பு உள்ள 4 வழிகள்!

Posted: 15 Jun 2012 02:25 AM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தரப்பும் கூட குழப்பத்தில்தான் உள்ளது. இப்போதைய நிலையில் பாஜக முன்பு நான்கு வழிகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில்தான் அக்கட்சி போயாக வேண்டும்.

காங்கிரஸ் கட்சி யாரையாவது ஒருவரை வேட்பாளராக நியமிக்கும். அவர்களை ஆதரித்து விட்டு, பதிலுக்கு துணைக் குடியரசுத் தலைவராக ஜஸ்வந்த் சிங்கை நிறுத்தி விட்டு கப்சிப்பென்று போய் விடலாம் என்ற ரீதியில்தான் பாஜகவின் நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸுக்கும், மமதா பானர்ஜிக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பால், நிலைமை களேபரமாகி பெரும் குழப்பமான காட்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

மமதா பானர்ஜி தரப்பில் அப்துல் கலாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தரப்போ பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபக்கம் பி.ஏ சங்மா தொடர்ந்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் பாஜக முன்பு நான்கு வழிகளே தென்படுகின்றன. அதில் ஏதாவது ஒன்றை அக்கட்சி தேர்வு செய்தாக வேண்டும்...

- காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிப்பது. பிரதிபலனாக ஜஸ்வந்த் சிங் அல்லது வேறு யாராவது ஒரு மூத்த பாஜக தலைவரை குடியரசுத் துணைத் தலைவராக்குவது.

- மமதா பானர்ஜி அறிவித்துள்ள அப்துல் கலாமை ஆதரிப்பது, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை மறந்து விடுவது.

- ஜெயலலிதாவுடன் இணைந்து பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது, தேர்தலில் படு தோல்வியைச் சந்திப்பது.

- தானே ஒரு வேட்பாளரை நிறுத்துவது.

இதில் கடைசி இரண்டுக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று சென்னையில் அத்வானி கூறியிருப்பதால் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவையும் பல்டி அடிக்க வைத்து அப்துல் கலாமை ஆதரிக்க பாஜக முடிவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இன்னும் 24 அல்லது 34 மணி நேரத்தில் பாஜகவின் நிலைப்பாடும் சற்று தெளிவாகும் என்று எதிர்பார்க்கலாம்.




நான் ரஜினி ரசிகன்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

Posted: 15 Jun 2012 02:02 AM PDT


டெல்லியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்று நடக்க இருக்கிறது. இதில், சினிமா உள்ளிட்ட பல துறைகளிலும் உள்ள பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவும் இதில் பங்கேற்கிறார்.
 
டெல்லி வந்துள்ள அவர் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓய்வுக்கு இடையே ஜெயசூர்யா அளித்த பேட்டி வருமாறு:-  
 
ரஜினிகாந்த் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் நடித்துள்ள சில படங்களை பார்த்திருக்கிறேன். அவரது நடிப்பும், ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். இந்தி சினிமா உலகில் மாதுரி தீட்சித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தி சினிமா பார்த்ததில்லை. ஆனால் மாதுரி தீட்சித் நடித்த ஒரு படம் பார்த்திருக்கிறேன். படத்தின் பெயர் ஞாபகமில்லை. அந்த படத்தில் அவர் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். அவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.  
 
எனக்கு நடனம் ஆடவே தெரியாது. இப்போதுதான் நடனம் ஆட பயிற்சி எடுக்கிறேன். நடனம் என்பது கடினமான மற்றும் வித்தியாசமான பணியாகும். 'ரியாலிட்டி ஷோ'வில் என்னால் இயன்ற அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சி செய்வேன். பயிற்சி வகுப்பை நல்லமுறையில் பயன்படுத்தி வருகிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



ஆந்திராவில் ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

Posted: 15 Jun 2012 12:16 AM PDT


ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் 4 இடங்களிலாவது வெற்றி பெற்றால் தான் அரசுக்கு ஆபத்தில்லை.

ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 9 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. இது தவிர காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இன்னொரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. மேலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், தெலுங்கு தேசம் கட்சியும் தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.

ஜெகன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றே ஆந்திர மக்கள் நம்புகின்றனர். அதனால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஜெகன் கட்சிக்கு அனுதாப ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆந்திராவில் அவ்வப்போது பிரச்சனைகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு தற்போது ஜெகன் பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் 4 இடங்களையாவது கைப்பற்றினால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு 4 இடங்களை கைப்பற்றாவிட்டால் காங்கிரஸ் அரசு பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கையில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறுவது கடினம் என்றே கூறலாம்.

ஏற்கனவே குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த விவகாரம் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.



காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறுகிறார்: பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருமா?

Posted: 14 Jun 2012 11:43 PM PDT

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா தீவிரமாக உள்ளார். 

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவை மனதில் கொண்டு சோனியா இந்த முடிவை எடுத்துள்ளார். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு வருவதை மம்தா பானர்ஜியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அவர் பிரணாப்முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதில் பிடிவாதம் பிடித்தார். 

முலாயம்சிங் யாதவின் ஆதரவால் நாலுகால் பாய்ச்சலில் மம்தா வேகம் காட்டினார். ஆனால் திடீரென முலாயம்சிங் இன்று காலை தன் முடிவை மாற்றிக் கொண்டார். சமாஜ்வாடி கட்சியின் அந்தர் பல்டியால் மம்தா பானர்ஜி தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். 

இன்று மாலை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கட்சி பங்கேற்காது என்று தெரிய வந்துள்ளது. எனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மம்தா பானர்ஜி நடவடிக்கையால் ஏற்கனவே மேற்குவங்க காங்கிரசுக்கும்-திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே விரிசல் விழுந்து விட்டது. அது விரைவில் டெல்லி வரை எதிரொலிக்க வாய்ப் புள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் விலகும் பட்சத்தில் பாராளு மன்றத்துக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மத்திய அரசுக்கு முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுப்பதால் ஆபத்து வராது என்று கருதப்படுகிறது. 

தற்போதைய சூழலில் புயல் போல வந்த மம்தா பானர்ஜி புஸ் என காற்று போன பலூனாகி விட்டார்.





ஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ - 1300 அரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகள்!

Posted: 14 Jun 2012 11:29 PM PDT


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.

அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட அதிகம்... 1300 திரையரங்குகள்!

வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.

படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை. ரோபோ ரஜினி முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும் மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.

வில்லன் ரஜினி மே... என பழித்துக் காட்டுவாரே... அது அந்த ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

ஆரம்பத்தில் 2 மணிநேரப் படமாக காட்டப்பட்ட ரோபோ, இப்போது 3 மணி நேரப் படமாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™