Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் நேரடி போட்டி?

Posted: 14 Jun 2012 11:21 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்முகர்ஜி- அப்துல் கலாம் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நாளை மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றன. 

காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, ஹமித் அன்சாரி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். 

அவரும், முலாயம்சிங்கும் சேர்த்து அப்துல்கலாமை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் பிரணாப் முகர்ஜி- அப்துல் கலாம் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதில் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தேசிய வாத காங்கிரஸ், ராஷ்டிரீய லோக் தளம், தேசிய மாநாட்டு கட்சி ஆகிய கட்சிகள் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க சம்மதம் தெரிவித்துவிட்டன. 

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியும் வெளியில் இருந்து ஆதரவு தரும் முலாயம்சிங்கும் போட்டி வேட்பாளராக அப்துல் கலாமை அறிவித்து இருப்பதால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் ஓட்டுகள் கணிசமாக குறையும் நிலை உருவாகியுள்ளது. 

இதை சரிக்கட்ட எதிர் அணியில் இருக்கும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளை உடைக்கும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதற்காக தேசிய ஜன நாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாவுடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். 

அப்துல்கலாமை நிறுத்த சரத்யாதவ் மறைமுக எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. இதேபோல் மராட்டிய முதல்-மந்திரி மூலம் சிவசேனா ஆதரவை திரட்டவும் முயற்சி நடக்கிறது. பிரணாப் முகர்ஜியும் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் பேசி நேரடியாகவே ஆதரவை கோரினார். அவர் கம்யூனிஸ்டு தலைவர்கள் புத்ததேச் பட்டாச்சார்யா, பிமன்போஸ் ஆகியோருடன் டெலிபோனில் பேசினார். 

திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை காங்கிரஸ் இழந்ததால் கம்யூனிஸ்டு ஆதரிக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே அப்துல் கலாமுக்கு ஆதரவு பெருகுகிறது. மம்தா பானர்ஜி, பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவரிடம் ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் மம்தா பானர்ஜி டெலிபோனில் பேசி ஆதரவு கேட்டார். அப்துல் கலாமை ஏற்கனவே பாரதீய ஜனதா தான் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்து எடுத்தது. கடந்த முறையும் அப்துல்கலாமை நிறுத்த பாரதீய ஜனதா முயற்சி மேற்கொண்டது. ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அப்துல் கலாம் போட்டியிட மறுத்து விட்டார். 

இந்த முறை அவரையே வேட்பாளராக மம்தாவும்- முலாயம்சிங்கும் அறிவித்து இருப்பதால் அப்துல்கலாமை ஆதரிக்கும் முடிவை பாரதீய ஜனதா எடுக்கும். காங்கிரசுக்கு எதிரான வேட்பாளர் என்பதால் அப்துல்கலாமுக்கும் சிரோன்மனி, அகாலி தளம், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சிகளும் ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.




விஜய்க்கு சாபம் விடும் சீமான்...!!!

Posted: 14 Jun 2012 11:06 PM PDT


பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.

விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.

பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.

ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




அஜித்தின் பில்லா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted: 14 Jun 2012 10:48 PM PDT


விஷணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான 'பில்லா' படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.
இளமை ததும்பும் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம். இது அஜித் குமாரின் 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி ஓமனகுட்டன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இன்று சென்சார் போர்டுக்கு சென்ற 'பில்லா 2' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் 'ஏ' சான்றிதழ் வழங்கபட்டதாம்.

இதனையடுத்து இம்மாதம் 21-ம் தேதி இப்படத்தை திரையிட இருக்கிறார்களாம்.



பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார்

Posted: 14 Jun 2012 10:42 PM PDT


நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். பழம்பெரும் நடிகரான அவர் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

உடல் நலமில்லாததால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், அவர் இன்று காலமானார்.
சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.



15 இடங்களில் ஜெகன் கட்சி முன்னிலை-காங்கிரஸ் படுதோல்வி

Posted: 14 Jun 2012 10:34 PM PDT


ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 14 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 14 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. இது தவிர காங்கிரஸ் 3 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் பணியில் 3000 பேர் ஈடுபட்டுள்ளனர். 12 முதல் 19 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படவிருக்கிறது.

இடைத்தேர்தலில் பதிவான 79.69 சதவீத வாக்குகள் ஜெகன் மீது உள்ள அனுதாபத்தால் பதிவானது என்று கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு 18 சட்டசபை தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 சட்டசபை தொகுதிகளிலும், பிரஜா ராஜ்ஜியம் கட்சி 2 சட்டசபை தொகுதிகளிலும் வென்றன. மேலும் நெல்லூர் லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.



புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முன்னிலை

Posted: 14 Jun 2012 10:14 PM PDT

புதுக்கோட்டை  தொகுதி இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துகுமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான்,  தே.மு.தி.க. சார்பில் ஜாகீர்உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 20 பேர் போட்டியிட்டனர்.  

224 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,43,277 வாக்குகள் பதிவாகின. ஆண்கள்  69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் வாக்களித்தனர். இது 73.48 சதவீதம் ஆகும். 

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 10 மேஜைகள் போடப்பட்டு 23 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர்,  நுண்பார்வையாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 4287 பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 1054 வாக்குகள் பெற்று தேமுதிக சாகிர் ஹுசேன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

முன்னதாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. மொத்தம் 108 வாக்குகளில் அதிமுக  97 வாக்குகளும், தேமுதிக 2 வாக்குகளும், 2 செல்லாத ஓட்டுக்களும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக் பயன்படுத்த தடை

Posted: 14 Jun 2012 09:32 PM PDT


அரசு அலுவலகங்களில் அரசின் செயல்பாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்கள் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதுடன், உலகமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.
 
இணையதளங்களையும் பயன்படுத்தி நான்கு சுவர்களுக்கு மத்தியில் உலகத்தையே கொண்டு வரும் விந்தையையும் செய்து வருகின்றனர்.   கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்களை பயன்படுத்தி தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, புதிய திரைப்படங்களை சிடி போட்டு விற்பது உட்பட சட்டத்துக்கு புறம்பான பல்வேறு செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.
சைபர் கிரைம் போலீசார் தவறு செய்பவர்களை கண்டுபிடித்து தண்டித்தும் வருகின்றனர்.
 
மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அலுவலக நேரங்களில் ஊழியர்கள் கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்கள் மூலம் பொழுது போக்குவது உட்பட பல்வேறு செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு வேலை தாமதப்படுவதுடன், அரசின் செலவினமும் அதிகரித்து வந்தது.
 
ஓடிசா மாநில தலைமைச்செயலகத்தில் உள்ள துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கம்ப்யூட்டரில் பேஸ் புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை இணையதளங்களை பார்வையிடவும், பயன்படுத்தவும் அம்மாநில அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
தமிழக அரசின் பார்வைக்கும் ஓடிசா மாநில அரசின் தடை உத்தரவு தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக பிரவுசிங் சென்டர்களில் சிறுவர்களை கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும் பேஸ் புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தவும் தடைவிதிப்பது குறித்தும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பொதுமக்களும் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்




புதுக்கோட்டை இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: மதியம் முடிவு தெரியும்

Posted: 14 Jun 2012 08:09 PM PDT


புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததால்,  கடந்த 12-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன் உள்பட 20 பேர் போட்டியிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
 
வாக்கு எந்திரங்கள் உள்ள அறை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்கு உள்ளே வருபவர்கள் பற்றிய விவரம் போலீசாரால் சேகரிக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
 
வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக 10 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின் 8.30 மணிக்கு மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். பகல் 12 மணிக்குள் முடிவு தெரிய வரும்.
 
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி புதுக்கோட்டை நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டதால் மம்தாபானர்ஜி மீது காங்கிரஸ் அதிருப்தி

Posted: 14 Jun 2012 11:05 AM PDT

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக  அறிவிக்காமல் இருந்தது. பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளர்  என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு திரினாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் தேர்வு செய்துள்ள  பெயர்களை நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார். 

முதல் தேர்வு பிரணாப் முகர்ஜி என்றும், 2-வது தேர்வு ஹமீது அன்சாரி  என்றும் சோனியா காந்தி தன்னிடம் கூறியதாக மம்தாபானர்ஜி  நிருபர்களிடம் தெரிவித்தார். 

காங்கிரசின் தேர்வை ஏற்காமல் மம்தாபானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்குடன் இணைந்து  அப்துல் கலாம், மன்மோகன்சிங், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். 

மம்தாபானர்ஜியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து  உள்ளது. அதோடு வேட்பாளர் பெயர்களை வெளியிட்டதால் அவர் மீது காங்கிரஸ் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளது. தனி அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் எப்படி வெளியிடலாம் என்று மம்தா மீது காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்து உள்ளது.  

கூட்டணி தர்ம விதியை மீறி விட்டார் என்றும் அவர் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுக் கொண்டே மம்தாபானர்ஜி காங்கிரஸ் அரசுக்கு பல்வேறு தொல்லை கொடுத்து கொண்டு வருகிறார். 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு நிலம் கையகப்படுத்தும் சட்டம், தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்பு பெட்ரோல் விலை  உயர்வு எதிர்ப்பு, ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்பட பல்வேறு  விஷங்களில் அவர் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஸ்டாலின் மருமகள் பெயரில் 'குரல்' மோசடி: அதிர்ச்சியில் ஸ்டாலின் குடும்பம்!

Posted: 14 Jun 2012 11:02 AM PDT


பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா பெயரில் குரல் மோசடி நடப்பதாகவும், இதில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவரது வழக்கறிஞர் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகரும், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. கிருத்திகா முன்பு பல குறும்படங்களை இயக்கியவர். இதற்காக ஜெயப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதினை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று பிரபல நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளிவந்தது. அதில் கிருத்திகா உதயநிதி பெயரில் சிலர் குரல் மோசடி செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாளிதழ் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

பொது அறிவிப்பு:

எனது கட்சிக்காரர் திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், க/பெ, உதயநிதி ஸ்டாலின் அறிவுறையின்படி கொடுக்கப்படும் அறிவிப்பு.

எனது கட்சிக்காரர் பெயரைச் சொல்லியும், அவரைப் போல குரல் மாற்றம் செய்தும் பொது மக்களையும், நண்பர்களையும் தொடர்பு கொண்டு, சில சாதகங்களை செய்து தரும்படி, கேட்டு வருதாக எனது கட்சிக்காரர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது எனது கட்சி்க்காரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்றே செய்யப்படும் முயற்சியாகும்.

எனவே, எனது கட்சிக்காரர் பெயரைச் சொல்லி யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அப்படிபட்டவர்கள் மீது எனது கட்சிக்காரர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, ஏதுவாக அது பற்றி கீழ் கண்ட எனக்கு தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களும், நண்பர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அந்த நபருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் வேண்டாம் என்றும் பொது மக்களும், நண்பர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாராவது அத்தகைய நபர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டால் அதற்கு எனது கட்சிக்காரர் பொறுப்பாக மாட்டார்.

ரெ.ரமன்லால், வழக்கறிஞர், 457, கூடுதல் வழக்கறிஞர் அறை, சென்னை உயர் நீதிமன்றம், சென்னை- 600 104. கைபேசி - 98410 81445.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் உள்ள சிலரது பெயரில் திடீர் சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் ஸ்டாலின் குடும்பம் தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவே முன் எச்சரிக்கையாக இது போன்ற ஒரு அவசிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.



பெண்ணை கற்பழித்த தடகள வீராங்கனை கைது

Posted: 14 Jun 2012 10:31 AM PDT


கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் பிங்கி பிராமானிக்.
 
அதே ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பிங்கி விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
 
இந்த நிலையில் கொல்கத்தா வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாகுய்ஹாதி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில் 'பிங்கி பிராமானிக் ஒரு ஆண். அவர் என்னுடன் பல மாதங்களாகத் தொடர்பில் இருந்தபோது, என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி என்னை கற்பழித்து விட்டார். இப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்' என குறிப்பிட்டிருந்தார்.
 
ஆரம்பத்தில் அப்பெண்ணின் புகாரை மதிக்காமால் இருந்த போலீசார், அப்பெண்ணின் பிடிவாதத்தால் இவ்வழக்கு குறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
 
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது புகாரின் பேரில் பிராமானிக்கை இன்று காலை கைது செய்தோம். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனையில் அவர் ஆண் என்று தெரியவந்தது. அவரை அரசு பொது மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை பெற்றவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
 
இச்சம்பவம் விளையாட்டுத் துறை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது



இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கம்?

Posted: 14 Jun 2012 10:19 AM PDT

பெண் சீடர் ஆர்த்தி ராவ் செக்ஸ் புகார் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் நித்யானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்யவும், அவரது பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தவும் முதல் மந்திரி சதனாந்த கவுடா உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா சரணடைந்தார். அவருக்கு ஒருநாள் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி கோமளா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். மேலும் நித்யானந்தா தரப்பில் ஜாமீன் மனுவும் கோரப்பட்டிருந்து. 

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நித்யானந்தாவும் நிபந்தனையின் பேரில் நீதிபதி கோமளா ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா மேலும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவரது சீடர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நித்யானந்தாவின் கைதையடுத்து மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சாமிநாதன் என்பவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் அவர் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 

இதேபோல், தற்போது இளைய ஆதீனமாக பொறுப்பேற்றிருக்கும் நித்யானந்தா ஆன்மீகத்துக்கு பொருந்தாத செயலில் ஈடுபட்டுள்ளதால் இவரும் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இளைய ஆதீனமாக நித்யானந்தா நீடிப்பரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.





முள்ளிவாய்க்காலில் தடயங்களை அழிக்க சீனாவிடமிருந்து சிறப்பு திரவம்!

Posted: 14 Jun 2012 10:03 AM PDT


இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எலும்புகளை மக்க வைக்க சீனாவிலிருந்து சிறப்பு திரவத்தை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டுவைக்காமல் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இதனால்தான் போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் அங்கு தமிழர்கள் குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதிகளை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்றது. ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் மீட்பதாகக்கூறி முள்ளிவாய்க்கால் நிலப்பகுதியை சல்லடை போட்டுத் தேடும் இராணுவம் அங்கு இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் எச்சங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச விசாரணைக் குழுவோ விசாரணை நடத்தினாலும் எந்த ஒரு எச்சமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இலங்கை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காகவே அதிக சக்தி கொண்ட திரவத்தை சீனாவிடமிருந்து இலங்கை இறக்குஅம்தி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் கலாமை போட்டியிட வைப்போம்: திரிணாமுல் காங்கிரஸ்

Posted: 14 Jun 2012 09:58 AM PDT


டெல்லி அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை கிளப்பி வரும் விவகாரம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிராணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியையோ அல்லது துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியையோ காங்கிரஸ் கட்சி நிறுத்தினால் அவரை எதிர்த்து அப்துல் கலாமை போட்டியிட வைப்போம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியையோ அல்லது அன்சாரியையோ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயமாக போட்டி ஏற்படும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் சேர்ந்து அப்துல் கலாமை ஆதரிப்போம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி குணால் கோஷ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, மம்தா பானர்ஜியின் ஜனாதிபதி முடிவு குறித்து காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறும்போது,   ஜனாதிபதி வேட்பாளராக பிரதமரை மம்தா பானர்ஜி அறிவிக்கும் முன் அவர் யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இது அவருடைய சொந்த கருத்தாகும். இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது அவரது கௌரவத்துக்கு குறைவானது. அவர் அறிவித்த மூன்று பேரில் அப்துல் கலாம், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரை பரிசீலனையில் ஏற்றுக் கொள்ளமுடியாது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலே நீடிப்பார்.

என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை காலை காங்கிரஸ் கட்சி இதுகுறித்து ஆலோசனை செய்ய முக்கிய கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று தெரியவரும்.



நித்தியானந்தா ஆசிரமத்தில் கஞ்சா, காண்டம் சிக்கியதா?

Posted: 14 Jun 2012 08:15 AM PDT


பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில், சோதனை நடத்திய போலீஸார், அங்கு பெருமளவில் மது பாட்டில்கள், கஞ்சா, ஆணுறைகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை கடந்த 2 நாட்களாக போலீஸார் சோதனையிட்டனர். அங்கிருந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் அனைவரும் யூனிபார்ம் உடையை தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டனர். சில வெளிநாட்டுக்காரர்கள் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரமத்தில் அமைந்துள்ள ஒரு அறையைக் கூட விடாமல் ஒவ்வொரு அறையாக திறந்து சோதனையிட்டனர் அதிகாரிகளும், போலீஸாரும்.

இந்த நிலையில் ஆசிரமத்திற்குள்ளிருந்து சிலர் ஆசிரமத்திற்கு வெளியே பல பொருட்களை வீசியுள்ளனர். அவை கஞ்சாப் பொட்டலம், ஆணுறைகள், மது பாட்டில்கள், பல சிடிக்கள், பீடி, சிகரெட் என்று தெரிய வந்துள்ளது.

இவற்றை யார் வீசியது என்பது தெரியவில்லை. இவற்றை ஆசிரமத்திற்குள் யார் பயன்படுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை. வீசப்பட்டுள்ள சிடிக்களில் ஆபாசப் படங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த சிடிக்களை போலீஸார் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.




ஆத்தாடி மீண்டும் மின்வெட்டா? அலறும் பொது மக்கள்

Posted: 14 Jun 2012 03:08 AM PDT


தமிழகத்தில் புதுக்கோட்டை தவிர பல மாவட்டங்களில் 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழகத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டதால் மின்சார வினியோகம் குறைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் மின் தடையை அமல்படுத்துவதில் காட்டப்படும் பாரபட்சம் மக்களை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இயற்கையாக வெயில் அதிகமாக உள்ள திருச்சி, கரூர், வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கோவை, திருப்பூர் போன்ற தொழில் மாவட்டங்களில் மின்தடையால் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கூட மின் வினியோகம் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து சமுக சேவகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்,

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின் வினியோகம் ஓரளவு சீராக இருந்தது. இதனால் நாங்கள் அவசரப்பட்டு பேட்டரி, இன்வெர்ட்டர் வாங்கிவிட்டோமோ என்று வருத்தப்பட்டோம். பல ஆயிரம் ரூபாய் தேவையில்லாமல் செலவு செய்துவிட்டோமோ என கலங்கினோம்.

ஆனால் தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகின்றது. இதற்கு காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். புதுக்கோட்டையில் இடைத் தேர்தலை முன்னிட்டு அங்கு சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதனால் புதுக்கோட்டைக்கு மின் தடை இல்லாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் மீண்டும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.




ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் அறிவிப்பேன்: கருணாநிதி பேட்டி

Posted: 14 Jun 2012 03:00 AM PDT


திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்த பின்னர், சென்னை செல்வதற்காக திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-  
 
கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறீர்களா?
 
பதில்:- முதலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தோம். தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால், ஜனாதிபதி வேட்பாளர் மாறுதலுக்கு உட்படும் நிலை உள்ளது. எனவே பொறுத்திருங்கள். பின்னர் அறிவிக்கிறேன்.
 
கேள்வி:- பிரதமரே வேட்பாளராக சொல்கிறார்களே?
 
பதில்:- இதற்கு பதில் இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார். பின்னர், கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சென்னை புறப்பட்டார்.



நித்தியானந்தா ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறார்கள்... யார்?

Posted: 14 Jun 2012 02:49 AM PDT


நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்திய அதிகாரிகளும், போலீஸாரும் அங்குள்ள அறை ஒன்றில் 50 சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் யார், எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப் பூட்டி சீல் வைத்து விட்டனர்.

அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.

சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

போலீசார் ஆசிரமத்தில் நுழைந்தபோது 200 பக்தர்கள் உள்ளே இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சில சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு ரகசிய அறையில் 50 சிறுவர்- சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அனைவருக்கும் 8 முதல் 15 வயதே இருக்கும். அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களிடம் செக்ஸ் சில்மிஷ வேலைகளில் நித்தியானந்தாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் இதுகுறித்து தனியாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரமத்தில் இருந்த அத்தன பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். வெளிநாட்டுக்கார ஆதரவாளர்களைத்தான் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் விழிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கேயேதான் டேரா போட்டுள்ளனர்.




காலை 7 மணிக்குள்ஆவின் பால் கெட்டுவிடுகிறது: விற்பனையை புறக்கணிக்க முகவர்கள் எச்சரிக்கை

Posted: 14 Jun 2012 02:37 AM PDT


தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால் முகவர்கள் சரியான ஊதியம் இன்றி தவித்து வருகிறோம். இந்த நிலையில், ஆவின் பால் தற்போது காலை 7 மணிக்குள் கெட்டுப்போய் விடுவது முகவர்கள் மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆவின் மொத்த வினியோகஸ்தர்கள் ஆவின் நிர்வாகத்திடம் கமிஷன், வாகன வாடகை பெற்றுக் கொண்டு தனியார் பால் நிறுவனங்கள் தருகிற கமிஷனையும் பெற்றுக்கொண்டு ஆவின் பாலினை இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் பால் முகவர்களாகிய எங்களிடம் தந்து விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி மொத்த வினியோகஸ்தர்கள் திறந்த நிலையில், வெறும் தார்ப்பாய் போட்டு மூடி, குளிர் நிலையின்றி கொண்டு வருகிறார்கள். குளிர் நிலை குறையாமல் பாதுகாக்கும் வசதி இல்லாததால் பால் குளிர் நிலையின்றி காலை 4 மணி முதல் 7 மணிக்குள் கெட்டுவிடுகிறது.
கெட்டுப்போன பால் பாக்கெட்டுகளை மொத்த வினியோகஸ்தர்கள் மாற்றி தருவதில்லை. இதனால், பால் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் ஆவின் பாலை புறக்கணித்து தனியார் பாலை விரும்ப தொடங்கியுள்ளனர்.
எனவே, ஆவின் நிர்வாக மொத்த வினியோகஸ்தர்கள் இன்றி, நேரடியாக பால் முகவர்களுக்கு ஆவின் பாலை வழங்கவேண்டும். அரசு உடனடியாக பிரச்சினையில் தலையிட்டு, பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவதை தடுக்கவேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், பொதுமக்கள், சில்லரை வணிகர்கள் பாதிப்பை நிறுத்தும் வகையில் ஜுலை 1-ந் தேதி வியாசர்பாடியில் நடைபெற உள்ள பால் முகவர்கள் பொதுக்குழு கூட்டத்தில், ஆவின் பால் விற்பனையை புறக்கணிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டு, போராட்ட தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.ஏ.பொன்னுசாமி கூறினார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™