Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிறார் மன்மோகன் சிங்

Posted: 26 Jun 2012 09:08 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரணாப் முகர்ஜி தன்னுடைய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பையும் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்க உள்ளார். புகழ்மிக்க பொருளாதார மேதையான மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ள நிலையில் நிதித்துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நமோ நரைன் ஆகிய இருவர் இணை நிதியமைச்சர்களாக பதவி வகிக்க உள்ளனர். 
 
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான மன்மோகன், 1991-ல் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது 57.97 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க இருக்கும் மன்மோகன் சிங்குக்கு கூடுதல் சவாலாகக் கருதப்படுகிறது. மேலும் அணு சக்தி, விண்வெளி, திட்டமிடல், பணியாளர், மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகள் ஏற்கனவே மன்மோகன் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் வசமிருந்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நலத்துறை அமைச்சர் பொறுப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வசம் ஒப்படைக்கப்பட்டது. 




பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூண்டி விடுவது ராஜபக்சே?

Posted: 26 Jun 2012 09:04 PM PDT


இனி தமிழீழம் குறித்து இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி யாரும் பேசக் கூடாது. அப்படி நினைத்தால், குரல் கொடுத்தால், இலங்கையில் பெரும் பேரழிவுகளே ஏற்படும். இதை நான் உலக நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் தெளிவுபடக் கூறிக் கொள்கிறேன். ஈழ மக்களும் இதைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என்று இலங்கை இனவாத அமைச்சர் சம்பிக ரணவக்க மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி அமைச்சர்தான் இந்த சிங்கள இனவெறி பிடித்த ரணவக்க. சமீபத்தில், ஒரு முள்ளிவாய்க்காலை தமிழர்கள் சந்தித்தது போதாதா, இன்னும் 100 முள்ளிவாய்க்கால்கள் வேண்டுமா என்று இனவெறியுடன் குரைத்திருந்தார்.
இந்த வெறி பிடித்த பேச்சுக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசுக்கும் புகார் கூறியிருந்தனர். வழக்கம் போல வாயில் வாழைப்பழம் சிக்கிக் கொண்டதைப் போல பிரதமரும் சரி, மத்திய அரசும் சரி யாருமே பேசவில்லை. கம்மென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது பிரணாப் முகர்ஜியை எப்படியாவது குடியரசுத் தலைவராக்கி விட வேண்டும் என்ற ஒரே கவலை மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மெளனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மீண்டும் குரைத்துள்ளார் ரணவக்க.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது.ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை.
தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும். இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது.
இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன்.இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.
௭னவே இதற்கு ௭திராகவும் நடவடிக்கைகள் முன்னெடுப்பது அவசியமாகும். ௭வ்வாறாயினும் கருணாநிதி,சீமான்,வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இலங்கையில் ஈடேறாது.
௭னக்கு ௭திராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் பெரிய ௭திர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை வைகோ, சீமான் மற்றும் கருணாநிதி போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர்.
இலங்கை பிரச்னை ௭னக் கூறி சர்வதேச புலிகளிடமிருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் உள்நாட்டு அரசியலில் இருப்பைத் தேடிக் கொள்கின்றனர். இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற ௭வ்வகையான போராட்டத்திற்கும் அஞ்சப் போவதில்லை. அதேபோன்று உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதையும் அனுமதிக்கப் போவதில்லை.
புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கிக் கொள்ளவே தமிழ் நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது என்று கொக்கரித்துள்ளார் இந்த இனவெறி அமைச்சர்.
ரணவக்க தொடர்ந்து இந்தியாவையும், தமிழகத்தையும் மிரட்டுவது போல பேசி வருகிறார். ஆனால் ராஜபக்சே வாயை மூடிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் சொல்லித்தான் ரணவக்க பேசி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.



டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்திரியுடன் தொடர்பா?: மும்பையில் பரபரப்பு

Posted: 26 Jun 2012 09:17 PM PDT


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். நாட்டை உலுக்கிய இத்தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதி தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டு இருக்கிறான். 30 வயதான அபு ஜிண்டால் என்ற அந்த பயங்கரவாதி, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவன். பாகிஸ்தானில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியா சென்ற ஜிண்டால், சர்வதேச போலீஸ் உதவியுடன் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டான். 
இந்நிலையில், இந்தியன் முஜாகுதீன் இயக்கத்தைச் சேர்ந்த அபு ஜிண்டாலுக்கும், மராட்டிய மாநில பெண் மந்திரி பவுசியா கான் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக எழுந்த புகார் மும்பையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வித்துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்துவரும் பவுசியாவும், அபு ஜிண்டால் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்தான். கடந்த 2009-ம் ஆண்டில் பவுசியா மராட்டிய மேல் சபை உறுப்பினராக இருந்தார். அப்போது மராட்டிய தலைமைச்செயலகம் அருகே உள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள பவுசியாவின் அறையில் ஒரு நாள் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
ஆனால், இந்த புகாரை பெண் மந்திரி பவுசியா கான் மறுத்து இருக்கிறார். "எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள எனது அறையில் பலர் தங்கி இருந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொள்வது என்பது இயலாத காரியம். இந்த விவகாரத்தில் எனது பெயரை ஏன் இழுக்கிறார்கள் என்று புரியவில்லை. ஜிண்டாலை எனக்கு தெரியாது'' என்று, அவர் கூறினார். அதே நேரத்தில், இந்த பிரச்சினையில் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று அவர் உறுதி அளித்து இருக்கிறார்.



பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Posted: 26 Jun 2012 08:59 PM PDT


பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.
உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.
இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத் சிங்: சரப்ஜித் சிங் அல்ல

Posted: 26 Jun 2012 08:50 PM PDT


1990-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சரப்ஜித் சிங் என்னும் இந்தியரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2008-ம் ஆண்டிலேயே சரப்ஜித் சிங் மரண தண்டனை பெற்றிருப்பார். பிரதமர் கிலானியின் தலையீட்டால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது 49 வயதாகும் சரப்ஜித் சிங் 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். ஆனால் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சரப்ஜித் இந்தியாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தான் எல்லையருகே குடிபோதையில் அலைந்தபோது அவரை பாகிஸ்தான் தவறுதலாக கைது செய்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கிறார் என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டது. சரப்ஜித் சிங்கின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சகம் பிறப்பித்ததாகவும், அதுகுறித்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை அமைசகத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இச்செய்தி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் என்னும் இந்தியர்தான் விடுதலை செய்யப்படுகிறார் எனவும், அது சரப்ஜித் சிங் அல்ல எனவும், அந்நாட்டின் தலைமை செய்தித் தொடர்பாளர் பர்கதுல்லா பாபர் விளக்கம் அளித்துள்ளார். 

இதுபற்றி பேசிய பர்கதுல்லா, 'அது சரப்ஜித் சிங் அல்ல. சுச்சா சிங்கின் மகனான சுர்ஜீத் சிங்தான் அவர். சுர்ஜீத்தின் மரண தண்டனை 1989-ல் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின்பேரில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அவரது தண்டனைக் காலம் முடிந்ததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார்' என்றார். பாகிஸ்தானில் சியா-உல்-ஹக்கின் ராணுவ ஆட்சியின்போது அந்நாட்டு எல்லையில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜீத், 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளார்.   

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 20 வருடங்களாக சிறையிலிருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி காலில் சிஸ்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை

Posted: 26 Jun 2012 08:48 PM PDT

இலங்கையை சேர்ந்த தமிழர் பொன்னுதுரை நிமல்ராஜா (வயது 41). இவர் மீது இலங்கையில் வழக்கு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி குடும்பத்துடன் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தார். பிறகு இங்கிலாந்து சென்று கிழக்கு மிட்லாந்து பகுதியில் வசித்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுதுரைக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதில் அவர் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்கள், ஒரு சிறுமி ஆகியோரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பின்னர் போலீசாரே இந்த 7 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.





உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெயர் மாற்றம்

Posted: 26 Jun 2012 10:55 AM PDT


உலகப் புகழ்பெற்ற லண்டன் பிக் பென் கடிகாரத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் மகுடம் சூட்டி இந்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது.
 
இதை கொண்டாடும் விதமாகவும், ராணியை சிறப்பிக்கும் விதமாகவும் பிக்பென் கடிகாரம் 'எலிசபெத் டவர் கடிகாரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
 
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;
 
88 வயதாகும் எலிசபெத் ராணி மகுடம் சூட்டி,இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவரை சிறப்பிக்கும் விதமாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிக்பென் கடிகாரத்தின் பெயர் இனி எலிசபெத் டவர் கடிகாரம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஏகமனதாக வரவேற்று, ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி விரைவில் இப்பெயர் மாற்றம் குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பிக் பென் டவர்

பிக் பென் டவர் என்பது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூண்டு ஆகும். நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.
 
இம்மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு 'பிக் பென்'னின் மணியோசைதான்.
 
இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்தின் பிரபல குத்துச் சண்டை வீரரான பென் கான்ட் என்பவரின் புனைப் பெயர் பிக் பென் ஆகும். அவரது நினைவாகவே இம்மணிக்கூண்டிற்கு 'பிக் பென்' என அக்காலத்தில் பெயரிடப்பட்டதாம்.


குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய மனிஷா கொய்ரலா

Posted: 26 Jun 2012 09:58 AM PDT


தமிழில் முதல்வன், இந்தியன், பாபா, படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷாவுக்கும் ஆஸ்திரேலிய தூதர் ஒருவருக்கும் காதல் மலர்ந்து சில நாட்களிலேயே பிரிந்தனர்.

பிறகு அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை காதலித்தார். அதுவும் முறிந்து போனது. கடந்த 2010-ல் நேபாளத்தை சேர்ந்த சாம்ராத் தாஹப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். சந்தோஷமாக இருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச துவங்கி உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். அத்துடன் மும்பையில் குடியேறி இரவு விருந்துகளில் பங்கேற்று வந்தார். மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும் கிசு கிசுக்கள் பரவின. முன்னணி நடிகர், நடிகைகள் மனிஷா நிலை கண்டு பரிதாபப்பட்டார்கள். பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

தற்போது மனிஷாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபட துவங்கி உள்ளார். தினமும் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிறார். தியான மையங்களுக்கு சென்று தனிமையில் உட்கார்ந்து தியானமும் செய்கிறார்.



நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்கிறது

Posted: 26 Jun 2012 09:56 AM PDT


தர்மேந்திரா-ஹேமமாலினி மகள் ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஹேமமாலினி. தமிழ்ப்பெண்ணான இவர் இந்திப்பட உலகில் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். நடிகர் தர்மேந்திராவுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தார். பின்னர் தர்மேந்திராவையே ஹேமமாலினி திருமணம் செய்து கொண்டார்.

தர்மேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர். சன்னி தியோல், பாபி தியோல் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சன்னி தியோல் சில இந்திப்படங்களில் நடித்தார்.

தர்மேந்திராவை மணந்த பின் ஹேமமாலினி மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு ஈஷா தியோல், அகானா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஈஷா தியோல். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மணமகன் பரத் தக்தானி.

தொழில் அதிபரான இவர் மும்பை புறநகர் பகுதியில் 5 நட்சத்திர ஓட்டல் உள்பட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். பரத்-ஆஷா தியோல் திருமணம் வருகிற 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மும்பையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.

தமிழக கலாச்சாரப்படி புரோகிதர்கள் மூலம் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. இதில் குடும்பத்தினர் தவிர மற்ற யாருக்கும் அழைப்பு இல்லை. ஹேமமாலினி சென்னை வந்து மணமகளுக்கு தமிழக கலாச்சாரப்படி காஞ்சீபுரம் பட்டுப்புடவை, நகைகள், ஆபரணங்கள் வாங்கிச் சென்றார்.

மும்பை கலாச்சாரப்படி 4 நாள் திருமண விழா நடக்கிறது. இன்று மும்பை நட்சத்திர ஓட்டலில் சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல இந்தி நட்சத்திரங்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வருகிற 28-ந் தேதி மெகந்தி நிகழ்ச்சி ஜூகுவில் உள்ள ஹேமமாலினி பங்களாவில் நடக்கிறது. இதற்கு தனது குடும்ப நண்பர்கள், தோழிகள் என 150 பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக கலாச்சாரப்படி வாழைமரம், தோரணம் பூக்களால் வீட்டை அலங்கரித்துள்ளனர்.

ஈஷா, அகானா, மணிரத்னத்தின் உதவியாளர் கரன் மற்றும் குடும்பத்தினரது நடன நிகழ்ச்சி நடக்கிறது. தர்மேந்திரா-ஹேமமாலினி நடித்த பழைய இந்திப் பாடல்களுக்கு ஏற்ப ஹேமமாலினியும் நடனமாடுகிறார்.

ஈஷாவின் காஞ்சீபுரம் பட்டுப்புடவையை பிரபல டிசைனர் நீதா லுல்லா வடிவமைத்துள்ளார். கோவிலில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பது ஈஷாவின் கனவு. அதன்படி கோவிலில் திருமணம் நடக்க இருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் வராமல் இருக்க எந்த கோவில் என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

30-ந் தேதி மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியின் சினிமா, அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமண அழைப்பிதழ் தங்க பேழை போல் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதில் மணமக்களை ராதா-கிருஷ்ணன் போல் பெயினர் டிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் பிரமாண்டமான திருமணமாக இருக்கும் என்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை

Posted: 26 Jun 2012 09:47 AM PDT


நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவராக லெனின் கருப்பையா பிடதி ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் படுக்கை அறையில் இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டார். 

இதனை தொடர்ந்து அவர் மீது நித்யானந்தா கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

நித்யானந்தா அளித்த புகாரின் பேரில் லெனினை கைது செய்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். ஆனால் லெனின் இந்த வருடம் மார்ச் மாதம் 14-ந்தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு ஆஜர் ஆனார். இதனை தொடர்ந்து லெனினை புழல் மத்திய சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர். 

இவ்வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு லெனின் கோரியிருந்தார். ஆனாலும், இவருக்கு ஜாமீன் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் இவர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் லெனினுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து லெனின் கைதாகி 102 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார்.














பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை

Posted: 26 Jun 2012 09:45 AM PDT


1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கிறார் என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்ட சரப்ஜித் சிங்கின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதுகுறித்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை அமைசகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து 22 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
1990ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் 5 முறை பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார்.
 
49 வயதாகும் சரப்ஜித் சிங் தற்போது லாகூரில் உள்ள கோட்லக்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். சுமார் 22 ஆண்டுகளாக அவர் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1990ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண 4 குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சேர்க்கப்பட்டவர் மஞ்ஜித் சிங். தவறுதலாக சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோது சரப்ஜித் சிங் இந்தியாவில் இருந்ததற்கான தகுந்த ஆவண பூர்வ ஆதாரங்கள் இருப்பதாக சரப்ஜித் சிங் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
 
2008ஆம் ஆண்டிலேயே சரப்ஜித் சிங் மரண தண்டனை பெற்றிருப்பார். ஆனால் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் தலையீட்டால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. சரப்ஜித் பாகிஸ்தான் எல்லையருகே குடிபோதையில் அலைந்ததையடுத்து அவரை மஞ்ஜீத் சிங் என்று நினைத்து பாகிஸ்தான் கைது செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.



'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகும் நித்யானந்தா!

Posted: 26 Jun 2012 08:07 AM PDT


மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம்.
நித்யானந்தா என்றைக்கு மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டாரோ அன்றில் இருந்து அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆரப்போட்டிருந்த நித்யானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சி சிடி வழக்கு விசாரணையும் தற்போது சூடுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
கர்நாடகத்தில் நிம்மதி இல்லை என்று மதுரை வந்தால் ஒரு புறம் மக்கள் போராட்டம் மறுபுறம் போலீசாரின் ரெய்டு அது இது என்று இங்கும் ஒரே பிரச்சனையாக உள்ளது. மடத்தில் பெண்களின் கவர்ச்சி நடனம் நடப்பதாகவெல்லாம் புகார் எழுந்துள்ளது. இத்தனை நாட்களும் இந்த பிரச்சனைகளை எல்லாம் கண்டும், காணாதது போல் பூஜை, அன்னதானம் என்று இருந்த நித்யானந்தா இனியும் இங்கிருந்தால் ஏதாவது ஒரு வழக்கில் சிறையில் தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
இதையடுத்து இந்தியாவில் இருந்தால் தானே இந்த பிரச்சனை எல்லாம் அதனால் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். பாரீஸ் மற்றும் ஸ்பெயின் செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே அவரது பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக போலீசார் முனைப்பாக உள்ளனர். ஆனால் நித்யானந்தா 2 ஆண்டுகள் பாரீஸ் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அவரது சீடர்கள் தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.



ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும்பிய அஜீத்!

Posted: 26 Jun 2012 07:26 AM PDT


பெங்களூரில் நடந்த படப்பிடிப்பின்போது ரசிகர்களின் ரகளையால் கடுப்பான அஜீத், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார் அஜீத். இதில் அவருக்கு ஜோடி நயன்தாரா. உடன் ஆர்யா - டாப்ஸி, சுமன் ரங்கநாதன் நடிக்கின்றனர்.
ஆரம்பத்தில் மும்பையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பின்னர் பெங்களூருவுக்கு மாற்றினர். அங்கு கடந்த 18-ம் தேதியிலிருந்து முகாமிட்டுள்ள படக்குழு, பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கைகலப்பு
பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.
அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விபத்து தவிர்ப்பு
நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக்' செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால், கோபமடைந்த அஜித், 'பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன்' என கூறி, சென்னை சென்று விட்டார்.



பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.!

Posted: 26 Jun 2012 07:06 AM PDT


முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம்.
சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சியாகி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தவிர இவர்களை விட வேறு யாருமே தேவையில்லை என்ற அவல நிலை. வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் கூப்பிட்டு வைத்து அத்தனை பேரையும் திட்டித்தீர்த்து விட்டாராம் ஜெயலலிதா.
ஒவ்வொரு கவுன்சிலரும் செய்த தவறுகளை பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து ரெய்டு விட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனராம்.
திமுக கட்டிய கட்டடத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு சாத்துப்படி
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிட்டி தியாகராயர் அரங்கத்தில்தான் இந்த ரெய்டு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். செல்போன், ஜெயா டிவி ரிப்போர்டர்கள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்குக் கூட உள்ளே வர அனுமதியில்லை. நேரம் காலம் தெரியாமல், வழக்கம் போல ஜெயலலிதாவை வரவேற்று ஏகப்பட்ட பேனர்களைக் கட்டி வைத்து விட்டனர். ஜெயலலிதா வந்தபோது இவற்றைப் பார்த்து டென்ஷனாகி விட்டார். எது எதற்கெல்லாம் பேனர் வைப்பது என்ற விவஸ்தையே இல்லையா என்று திட்டித் தீர்த்த ஜெயலலிதா, திட்டுவதற்காக வந்துள்ளேன். இதைப் போய் வரவேற்கிறீர்களே என்று கோபத்துடன் கூறியபடி உள்ளே வந்தார்.
ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர். பின்னர் பேசத் தொடங்கிய ஜெயலலிதாவின் பேச்சில் சூடு பறந்ததாம்.
முந்தைய திமுக ஆட்சியின்போது மாநகராட்சியில் கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு பிடி பிடிக்க பாதி கவுன்சிலர்களுக்கு வயிற்றைக் கலக்கி விட்டதாம்.
வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாதுனு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார்.
பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்னு டிமாண்ட் பண்றீங்க. வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டியிருக்கிற வீடுகளுக்கே போய் அடாவடி வசூல் பண்றீங்க. கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க. டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க. ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது என்று வாங்கியுள்ளார்.
64வது வார்டு கவுன்சிலர் சுந்தர் பெயரைக் கூறி எழுந்திருக்கச் சொன்ன ஜெயலலிதா, குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடுனு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க...என்று கடுமையாக டோஸ் விட ஆடிப் போய் விட்டாராம் சுந்தர்.
அதேபோல 63வது வார்டு கவுன்சிலர் அலிகான் பஷீர் என்பவரை நிற்கச் சொன்ன ஜெயலலிதா, மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க.. என்று புகார் பட்டியலைப் படிக்க அவர் அமைதியாக நின்றாராம்.
இவர் சசிகலாவுக்கு நெருக்கமானவராம். சசிகலாவுக்கு அடிக்கடி புதுப் படங்களின் டிவிடிகளைக் கொடுத்து நட்பைப் பெற்று இதன் மூலம் கவுன்சிலர் சீட்டை வாங்கியுள்ளாராம். மேலும், சென்னையில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியை இழந்ததற்கு, இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெ. அன்பழகனுடன் ரகசியமாக கூட்டுவைத்து அலிகான் பஷீர் செயல்பட்டதாக உளவுத்துறை அம்மாவிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இதை விட பெரிய அசிங்கம் இருக்கா...
ஜெயலலிதா அடுத்து ரெய்டு கொடுத்த கவுன்சிலர்தான் இங்கு குறிப்பிடத்தக்கவர். அவரது பெயர் ராஜலட்சுமி. 173வது வார்டு கவுன்சிலர். அவரது பெயரைச் சொல்லி ஜெயலலிதா கூறியபோது, இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது என்று கடும் உஷ்ணப் பார்வை பார்த்தபடி ராஜலட்சுமியை கடுமையாக சாடினார். இதைக் கேட்டு ராஜலட்சுமி ஆடிப் போய் அமைதியாக நின்றார்.
கவுன்சிலர்களிலேயே அதிக அளவிலான புகார்கள் 114வது வார்டு கவுன்சிலர் முகம்மது அலி ஜின்னா மீதுதான் வாசிக்கப்பட்டதாம். சகல மோசடிகள், முறைகேடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இவர் வேறுயாருமல்ல, 2009 லோக்சபா தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மகனும் தப்பவில்லை
இதேபோல மாதவரம் 27வது வார்டு உறுப்பினர் கண்ணதாசன் மீதும் புகார் வாசித்தார் ஜெயலலிதா. இவர் அமைச்சர் மூர்த்தியின் மகன் ஆவார்.
கவுன்சிலர் போல ஆக்ட் கொடுத்த குப்பம்மா
ஜெயலலிதா அடுத்த பிடித்த நபர்தான் சுவாரஸ்யமானவர். 93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க, அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.
ஓவர் ஆக்ட் பண்ணாதே...
அடுத்து 38வது வார்டு சந்தானத்தைப் பிடித்து கடுமையாக திட்டியுள்ளார் ஜெயலலிதா. அதைக்கேட்டு பயந்து போன சந்தானம்,தனது இரு கைகளால் கன்னத்தில் புத்தி போட்டுக் கொண்டு, புத்தி வந்துருச்சும்மா என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, கோபமாகிப் போன ஜெயலலிதா, ஓவர் ஆக்டிங் கொடுக்காதே என்று அதட்டலாக கூறினார்.
தொடர்ந்து ஜெயலலிதா மொத்தமாக அத்தனை பேரையும் எச்சரிக்கும் வகையில் பேசியபோது,
பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்​திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன்.
சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன் என்று தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாராம் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 169 கவுன்சிலர்களில் 100க்கும் மேற்பட்டோர் டோஸ் வாங்கினராம்.
'அம்மா'விடம் திட்டு வாங்கி விட்டுச் சென்ற அத்தனை கவுன்சிலர்களும் உளவுத்துறை போலீஸார் மீது கடும் காட்டத்துடன் இருக்கிறார்களாம். அதேசமயம், இவர்கள் அத்தனை பேரும் உடனடியாக திருந்தும் திட்டத்திலும் இல்லையாம். மாறாக, வழக்கம் போல நடை போடப் போவதாக பலரும் சவால் போல கூறி வருகிறார்களாம். நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம், எங்களிடம் பங்கு வாங்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களையும் நாங்கள் பட்டியல் போட்டுத் தரத் தயார். அவர்களையும் கூப்பிட்டு அம்மா ரெய்டு விடட்டும் என்று கோபத்துடன் கூறுகிறார்கள்.
எப்படியோ, விரைவிலேயே மாநகராட்சி அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.



தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் தள்ளிவைப்பு

Posted: 26 Jun 2012 06:57 AM PDT


ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாகும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. 'கோச்சடையான்' தீபாவளிக்கு ரிலீசாகும் என ரஜினி அறிவித்தார். இதனால் வேறு படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டன.

தீபாவளி விருந்தாக 'கோச்சடையான்' இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் படம் தீபாவளிக்கு வராது என்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

'கோச்சடையான்' தமிழ், இந்தி மொழிகளில் தயாராகிறது. அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கும் 'சன் ஆப் சர்தார்' படம் தீபாவளிக்கு வருவதால் 'கோச்சடையான்' வசூல் பாதிக்கும் என தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

'கோச்சடையான்' படம் வசூல் தென் மாநிலங்களில் பாதிக்காது. ஆனால் வடக்கில் சமீபத்தில் ரிலீசான 'ரவுடி ரத்தோர்' படம் ஹிட்டானதால் அதில் நடித்த சோனாக்ஷி சின்ஹா மார்க்கெட் தீபிகா படுகோனேயை பின்னுக்கு தள்ளி விட்டு எகிறியுள்ளது.

எனவே இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசானால் 'கோச்சடையான்' வசூல் பாதிக்கும் என்று கருதி தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.



விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி

Posted: 26 Jun 2012 05:56 AM PDT


கனடாவின் ஒட்டாவோ மாகாணத்தில் இளம் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை அந்த ஊர் போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமிகளை கடத்தி வந்து ஒரு வீட்டில் அடைத்து வந்து இந்தப் பெண் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு உதவியாக இருந்து வந்த 15 வயது மதிப்புடைய மேலும் இரு பெண்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சிறுமிகளாக இருப்பதால் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை போலீஸார். பேஸ்புக், டி்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளார் அப்பெண்.
தனது மகளின் செயல் குறித்து அறிந்த அந்தப் 16 வயது பெண்ணின் தாயார் தனது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.



சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா

Posted: 26 Jun 2012 05:47 AM PDT


பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் 'டேவிட்' திரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடிக்கின்றனர். இரண்டு தனிக் கதைகளைக் கொண்டதாக வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கிறது இத்திரைப்படம்.

இரண்டு விதமான கதைகளை இரண்டு கேமிரா மேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர்கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசை கலைஞராகவும் இருக்கிறார்.

இருவரும் ஒரு சிக்கலை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பது தான் இப்படத்தின் கதை. விக்ரம்,ஜீவா ஆகியோரோடு நாசர், தபு,ரோகினி ஹட்டங்காடி, லாரா தத்தா, இஷா ஷெர்வானி,கே.பி.நிஷான், ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மீனவர் கதையை ரத்னவேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷாவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

Posted: 26 Jun 2012 05:45 AM PDT


மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.



நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்

Posted: 26 Jun 2012 05:42 AM PDT


'கோவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பியா. ஜீவாவுடன் 'கோ' படத்திலும் நடித்தார். 'கோவா' படத்தில் பியாவுடன் பிரேம்ஜியும் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு பரவியது.
பிரேம்ஜி 'சென்னை-28', 'மங்காத்தா' 'சரோஜா' படங்களில் நடித்துள்ளார். பியாவை காதலிப்பதாக பிரேம்ஜி வெளிப்படையாகவும் அறிவித்தார். தனது டுவிட்டரில் நானும் பியாவும் காதலிக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த காதல் சர்ச்சையால் பியாவுக்கு படவாய்ப்புகள் குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரேம்ஜியை காதலிக்கவில்லை என்று பியா தற்போது மறுப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

எனக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்பதெல்லாம் பொய். இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவதற்கு பிரேம்ஜிதான் காரணம். இண்டர்நெட்டில் என்னை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால் எனக்கு சங்கடம் ஏற்பட்டு உள்ளது.

செய்தியை நீக்கும்படி பிரேம்ஜியிடம் வற்புறுத்தினேன். அதற்குள் வதந்தி பரவி விட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிரேம்ஜி பற்றி வெங்கட்பிரபுவிடம் புகார் கூறினேன். பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை.

தமிழில் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் நடிக்கிறேன். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி

Posted: 26 Jun 2012 05:36 AM PDT


சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு வழியாக கிரிக்கெட் அணி ஒன்றில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் சச்சின் மகனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் அப்பாவைப் போல கிரிக்கெட் ஆடி வருகிறார். சச்சினும், இவரும் சேர்ந்து இந்திய அணியில் விளையாடுவார்கள் என்றுகூட அவ்வப்போது கிண்டலடித்து செய்திகள் வரும். சச்சின் தனது 100வது சதத்தை எடுக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது சச்சினும், அர்ஜூனும் சேர்ந்து ஆடுவது போலவும், அப்போது சச்சின் 99 ரன்களுடன் இருப்பது போலவும், அர்ஜூன் சதம் அடித்திருப்பது போலவும் கூட கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டு அலப்பறை செய்தார்கள்.
இந்த நிலையில் அர்ஜூன் டெம்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில்இடம் கிடைக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் அர்ஜூன் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடந்த சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான சோதனை ஆட்டத்தின்போது சதம் அடித்திருந்தார் இடது கை ஆட்டக்காரரான அர்ஜூன் என்பது நினைவிருக்கலாம். தற்போது 12 வயதாகும் அர்ஜூன், ஜிம்கானா அணிக்காக ஆடி வருகிறார்.
அர்ஜூன் டெண்டுல்கர், இடது கை வேகப்பந்து வீச்சாளரும் கூட.1999ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்த அர்ஜூன் தனது தந்தையுடன் பலமுறை இந்திய அணியின் பயிற்சி முகாம்களில் தலை காட்டி வருகிறார். மேலும் இந்திய வீரர்களுடனும் அவர் பயிற்சிகளில் பங்கேற்பதுண்டு. இப்போது அவருக்கு 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பாவைப் போல அசத்தட்டும் அர்ஜூனும்...!



நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார்

Posted: 26 Jun 2012 05:32 AM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தமது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்துக்கு மாலையில் சென்ற பிரணாப் முகர்ஜி அதன் பினன்ர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. இன்று நிதி அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்யும் நிலையில் அடுத்த நிதி அமைச்சர் யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக பிரதமர் மன்மோகன்சிங்கே நிதி அமைச்சக பொறுப்பையும் தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது. மன்மோகன்சிங்கிடம் தமது பொறுப்புகளை பிரணாப் ஒப்படைக்கக் கூடும்.
அப்படி மன்மோகன்சிங்கே கூடுதல் பொறுப்பை ஏற்கும் நிலையில் பிரதமர் அமைச்சகத்துக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும். ஏனெனில் பல்வேறு அமைச்சர் குழுக்களுக்கு பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ஜி, 3ஜி ஏலம் விடுவது தொடர்பாக அமைச்சர்கள் குழுவுக்கும் பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார்.



சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?

Posted: 26 Jun 2012 02:12 AM PDT


மத்திய அரசு ரயில்வே சேவை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால், அடுத்த மாதம் 1ம் தேதி முதல், குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து வகையான ரயில் டிக்கெட்களும் உயர்த்தப்பட்டது. அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சாதாரண வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் உயர்வு குறைக்கப்படவில்லை.
இதனால் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்க 20 முதல் 25 சதவீதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில் பயணிகளின் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் ஆகியவற்றிற்கு சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மமதா பானர்ஜியின் எதிர்ப்பு காரணமாக, ரயில்வே டிக்கெட் கட்டணத்திற்கான சேவை வரிக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, மமதா பானர்ஜி ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் மமதா பானர்ஜி, பிரணாப் முகர்ஜி இடையே கசப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 30ம் தேதியுடன் ரயில்களின் முதல் வகுப்பு, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்திற்காக விதிக்கப்பட்ட சேவை வரி விலக்கை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மேற்கண்ட ரயில் பெட்டிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 3.6 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை வரி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் நிதி துறைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள சேவை வரி விலக்கை ரயில்வே துறையினால் ஏற்க முடியாத நிலையில் இருப்பதால், ரயில் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்




சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANCER" - தனுஷ்

Posted: 26 Jun 2012 01:52 AM PDT



SIIMA விருதுகள் 2012 துபாயில் நடைபெற்றது. அவ்விழாவில் விக்ரம், சிம்பு, தனுஷ், சமீரா ரெட்டி, ஸ்ரேயா, அமலா பால், குஷ்பு என தமிழ் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.

இவ்விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சிம்பு மற்றும் தனுஷ் தான்.   தனுஷிற்கு Sensation of South Indian Cinema என்னும் விருதினை வழங்கினார்கள்.

தனுஷ் விருதினை வாங்கியவுடன் 'கொலவெறி' பாடல் பாட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். உடனே தனுஷ் "பாடுறேன்.... என்னுடன் சேர்ந்து பாட இன்னொருவரையும் அழைக்கிறேன்" என்று கூற, வேறு யாரோதான் வர இருக்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் தனுஷ் "என்னுடன் சேர்ந்து பாட YOUNG SUPER STAR சிம்புவை மேடைக்கு அழைக்கிறேன். அவர் என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANCER" என்று சிம்புவிற்கு புகழாரம் சூட்டினார்.

அதனைத் தொடர்ந்து சிம்பு மேடையேற, தனுஷ் "எல்லாரும் எங்களை எதிரிகள் என்று நினைக்கிறார்கள். ஆமாம் நாங்கள் எதிரிகள் தான். ஆனால் வெளியே, உள்ளுக்குள் நாங்கள் நண்பர்கள்" என்று இருவரும் தோள் மீது கைபோட்டு கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து 'கொலவெறி' பாடலை ஒன்றாகப் பாடினார்கள்.

இவர்களது நட்பையும், பாடியதையும் ஒருவர் கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார். அவர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்!



பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்!

Posted: 26 Jun 2012 01:07 AM PDT


பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிராமனிக் ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கொல்கத்தாவில் சோதனை நடத்தப்பட்டபோதும், இது போதாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வேறு ஒரு சோதனையை நடத்த அவர்கள் கோர்ட்டிடம் கூடுதல் அவகாசம் கோரத் திட்டமிட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான பிங்கி பிராமனிக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், பிங்கி ஒரு ஆண். அவருடன் நான் சில ஆண்டுகளாக பழகி வருகிறேன். பிங்கி என்னைக் கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பண் தனது மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு பாலினச் சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கொல்கத்தாவில் உள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு பிங்கி கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு சில சோதனைகள் செய்யப்பட்டன. இருப்பினும் அதில் டாக்டர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. பிங்கியின் பாலினத்தை நிர்ணயிப்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ஒரு சோதனையை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சோதனைக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால் வேறு எங்காவது அந்த சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கே.கோஷ் கூறுகையில், எம்ஆர்ஐ, யுஎஸ்ஜி உள்ளிட்ட பல சோதனைகள் பிங்கியிடம் நடத்தப்பட்டன. இருப்பினும் குரோமோசோம் சோதனை நடத்த வேண்டியுள்ளது. அதில்தான் துல்லியமான முடிவை அறிய முடியும். ஆனால் அந்த வசதி இங்கு இல்லை. இதனால் வேறு ஒரு இடத்தில் அதை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் ஒரு சோதனை நடத்தப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் கோரவுள்ளோம் என்றார்.
டாக்டர் பிஸ்வநாத் கஹாலி தலைமையிலான 11 பேர் கொண்ட மருத்துவக் குழு பிங்கிக்கு பாலினச் சோதனைகளை நேற்ஏறு நடத்தியது. மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டோர் அதில் இடம் பெற்றிருந்தனர்.



ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சாட்சிகள் விசாரணை ரத்து!

Posted: 25 Jun 2012 11:54 PM PDT


சென்னையில் பட்டப் பகலில் வகுப்பறையில் ஆசிரியர் உமா மகேஸ்வரி கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட் நடத்திய சாட்சிகள் விசாரணை செல்லாது என்று அறிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனைப் பகுதியில் உள்ள செயின்மேரீஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி இவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியை உமாவை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்து விட்டான்.
நாட்டையே பெரும் பதைபதைப்பில் ஆழ்த்திய இந்த கொலை வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சி விசாரணையை முழுவதுமாக ரத்து செய்தும், செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக சாட்சிகள் விசாரணையை ரத்து செய்யுமாறு கோரி மாணவர் சார்பில் அவரது வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை கோடை விடுமுறைகால நீதிபதி நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து சாட்சிவிசாரணைக்கு தடை வித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முறையான நீதிபதி நாகமுத்து முன்னிலையில் வந்தது. அப்போது அவர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதன் முழு விவரம்:
வழக்கின் இறுதி அறிக்கையை போலீசார் கடந்த 17.5.12 அன்று தாக்கல் செய்தனர். அன்று சிறுவர் நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட் (12-வது கோர்ட் மாஜிஸ்திரேட்) விடுமுறை என்பதால், 12-வது கோர்ட்டின் பொறுப்பில் 20-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டார். அவர் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாணவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.
மே மாதம் 29, 30, 31-ந் தேதிகளில் 27 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மாணவன் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு தடையாணை பெற்றார்.
வழக்கின் ஆவணங்களை பார்க்கும்போது, சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் நியமனமே தவறானது என்பது தெரிய வருகிறது. சிறுவர்கள் நீதி வாரியத்தின் சட்டப்படி, குழந்தைகள் மனோதத்துவம் தெரியாத அல்லது அதில் பயிற்சி பெறாதவர்கள் அந்த நீதிமன்றத்தின் முதன்மை மாஜிஸ்திரேட்களாக நியமிக்கப்படக் கூடாது.
12-வது கோர்ட்டின் பொறுப்புப் பணிக்கு வரும் மாஜிஸ்திரேட் எப்படி தலைமை மாஜிஸ்திரேட் பணியை செய்ய முடியும். தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்படாத அவர் தலைமை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வழக்கின் சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.
எனவே 17.5.12 அன்றிலிருந்து 31.5.12 வரை தலைமை மாஜிஸ்திரேட் பதவியில் இருந்து கொண்டு 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை அனைத்தும் செல்லாது. கடுமையான கொலை குற்றச்சாட்டு வழக்கில் சாட்சி விசாரணையை நடத்திவிட்டு, அது வெறும் சாதாரண விசாரணைதான் என்று மாஜிஸ்திரேட் கூறுவதை ஏற்க முடியாது.
குறுக்கு விசாரணை நடத்துவதற்கு கால அவகாசம் தரப்படவில்லை என்பதால் குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் போய்விட்டது என்று மாணவன் தரப்பு வக்கீல் கூறுவதில் நியாயம் உள்ளது. 48 சாட்சிகள், 95 ஆவணங்களைக் கொண்ட இந்த வழக்கில், சிறுவனின் நலனை கருதாமல் அவசர அவசரமாக விசாரணை நடத்தியது தெரிகிறது.
சிறுவர்களை விசாரிப்பதற்காக புரசைவாக்கத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயம் ஏற்படாதபடி, நட்பின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே கோர்ட்டு அல்லாத தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்களை விசாரிக்கும் 20-வது கோர்ட்டுக்கு கொண்டு வந்து, அங்கு சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.
மேலும் சிறுவர்களை கையாளும் தனி போலீஸ் பிரிவை வைத்துத்தான் அந்த வழக்குகளை நடத்தி இருக்க வேண்டும். மாணவன் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எத்தனையோ விஷயங்களை கூற முடியும் என்றாலும், மனுதாரரின் மனுவைத் தாண்டி வெளியே செல்ல விரும்பவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுவர் நீதிமன்றங்களில் சிறப்பு அரசு வக்கீல்களை அரசு நியமிக்க வேண்டும். அந்தப் பதவியில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருப்பதோடு, குழந்தைகள் நலன் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
எனவே மாணவன் வழக்கில் 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சிறுவர் நீதிமன்றத்துக்கு தகுதியான தலைமை மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும். இங்கு தகுதியான உறுப்பினர்களை நியமித்து பிறகு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் புதிய நீதிபதி வந்து அதன் பிறகே சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்பதால் இந்த வழக்கு மேலும் தாமதமடையும் என்று தெரிகிறது.
தற்போது இந்த சாட்சிகள் விசாரணையை நடத்தியவர் 20வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™