விழியே பேசு... |
- கலாமுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு- பாஜக கூட்டணியும் ஆதரிக்கும்?
- ஈழத்தமிழர் படுகொலைக்கு கருணாநிதிதான் காரணம்: அரியலூரில் வைகோ பேட்டி
- ஜப்பானில் கடும் நில நடுக்கம்
- அமெரிக்கக் குடியுரிமையற்ற திறமையான இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்: ஒபாமா
- இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளில் சிங்களர்களை குடியமர்த்துவதா?: பழ.நெடுமாறன் கண்டனம்
- காந்தி படத்துடன் முக்கிய தலைவர்கள் படம்: ரூபாய் நோட்டுகளில் மாற்றம் வருமா?
- இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
- இலங்கையில் எதிர்க்கட்சி பேரணியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
- தீபாவளிக்கு ரஜினி, அஜீத், சிம்பு படங்கள் ரிலீஸ்
| கலாமுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு- பாஜக கூட்டணியும் ஆதரிக்கும்? Posted: 17 Jun 2012 10:17 PM PDT குடியரசுத் தலைவராக மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது. ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது சிறப்புக்குரியது. இதில் குறிப்பிட்ட சிலர்தான் வாக்களிக்க முடியும்.இருப்பினும் என்னுடைய கருத்தாக இருப்பது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை மீண்டும் தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான். அவர்தான் சிறந்த வேட்பாளராக இருப்பார். கலாம்ஜியைப் பொறுத்தவரையில் எந்த ஒரு அரசியல் சார்பும் இல்லாதவர். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்றார் அவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது யாரையும் ஆதரிப்பதா? என்ற குழப்பத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருந்துவருகிறது. இந்த நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர், அப்துல் கலாமை ஆதரித்திருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அப்துல் கலாமை ஆதரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது கலாமுக்கு தமிழக பாஜக ஆதரவு? இதனிடையே நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் பதவியானது தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்குத்தான் கிடைக்க வேண்டும். இதற்காக கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்துல் கலாமின் பெயரை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை. அதனால் கலாமை மனதில் வைத்துத்தான் தமிழக பாஜக கூறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. |
| ஈழத்தமிழர் படுகொலைக்கு கருணாநிதிதான் காரணம்: அரியலூரில் வைகோ பேட்டி Posted: 17 Jun 2012 10:07 PM PDT ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அரியலூரில் நடைபெற்ற ம.தி.மு.க 19-ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்த இறுதி நிலவரம் தெரிந்த பிறகு யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஜனாதிபதி தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு வாக்கு உள்ளது. இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழ பாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள அரசின் இனப்படுகொலைகள் பற்றி தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சர்வதேச நீதி மன்றத்தில் அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. சுதந்திர தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. இதை மூடி மறைக்கவே தி.மு.க. இப்போது டெசோ மாநாட்டை நடத்துகிறது. கேரள மாநில அரசு முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், பாம்பாற்றில் அணை கட்டவும் திட்டமிடுகிறது. பாம்பாற்றில் அணை கட்டினால் கரூர் வரை விவசாயம், குடி தண்ணீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மாநில உரிமை பிரச்சினையை மத்திய அரசு தீர்க்காவிடில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் வரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னப்பா, நகர செயலாளர் மனோகரன் உடன் இருந்தனர். |
| Posted: 17 Jun 2012 09:57 PM PDT ஜப்பானில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக மிக உயரமான அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்களும் அறிவிக்கப்படவில்லை. |
| அமெரிக்கக் குடியுரிமையற்ற திறமையான இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்: ஒபாமா Posted: 17 Jun 2012 09:32 PM PDT அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் ஒபாமா முன்பு அறிவித்திருந்தார். ஆனால் வாஷிங்டனில் நேற்று நடந்த கூட்டத்தில், திறமையான இளைஞர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் தங்கலாம் என்றார். முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர் பாரக் ஒபாமா ஆணையிட்டுவிட்டார். ஒபாமாவின் இந்த அறிவிப்பால் குடியரசுக் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். அதிபரால் வழங்கப்பட்ட 'பொது மன்னிப்பு' என்றே இதனை அவர்கள் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை அதிபர் பறித்துவிட்டார் என்றும் சாடியுள்ளனர். அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குகளைக் குறிவைத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த ஒபாமா 'படித்த, திறமையுள்ள, அமெரிக்கா மீது பற்றும் பாசமும் கொண்ட, அமெரிக்க நலனில் அக்கறை காட்டி உழைக்கிற இளைஞர்களை 'குடியுரிமை இல்லை' என்ற ஒரே காரணத்துகாக வெளியேற்றாமல் தொடர்ந்து தங்க தாற்காலிகப் பணி அனுமதி வழங்கப்படும். அமெரிக்க தேசிய நலனுக்கும் பொது நலனுக்கும் ஊறுவிளைவிக்காத, ஊறு விளைவிக்க நினைக்காத நல்ல இளைஞர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். இது பொது மன்னிப்பல்ல. இது தாற்காலிக நிவாரணம்' என்றார். |
| இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளில் சிங்களர்களை குடியமர்த்துவதா?: பழ.நெடுமாறன் கண்டனம் Posted: 17 Jun 2012 09:01 PM PDT விழுப்புரம் மாவட்ட தமிழிளைஞர் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதியுள்ள பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு எழில் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் புலவர் காசி ஆனந்தன் கலந்து கொண்டு முதல் நூலை வழங்கிட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பார்வதியம்மாள் பெற்றுக்கொண்டார்.ம.தி.மு.க. மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள். இறுதியில் பழ.நெடுமாறன் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- முள்ளிவாய்க்கால் போரில் 1 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு எல்லாம் முடிந்துவிட்டது இனி தமிழீழம் இல்லை என்ற பிரமையை சிங்கள அரசும், இந்திய அரசும் ஏற்படுத்திட முயற்சி செய்கிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டும் வரலாறு தொடங்கும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பிரபாகரனின் புகழுக்காக எழுதப்படவில்லை. இன்றைய தமிழக இளைஞர்கள் தமிழக அரசியலிலும் திரை கவர்ச்சியிலும் சிக்கி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளனர். பொதுவாழ்க்கைக்கு அடிப்படையாக லட்சியம் இருந்தாக வேண்டும். ஆனால் அதிலிருந்து அவர்கள் திசை திருப்பப்பட்டுள்ளனர். விடுதலைப்புலியாக வேண்டுமென்றால் லட்சியம் தேவை. பிரபாகரன் பெயரால் இன்றைக்கு இளைஞர்களை ஒன்று திரட்ட முடியும். இங்கு போலித்தனமான அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களின் முகமூடியை கிழிக்க இந்த நூல் உதவும். முள்ளிவாய்க்கால் போர் முனைக்கு வீட்டுக்கொருவரை அனுப்ப வேண்டுமென்று கூறியதுடன் தனது வீட்டில் இருந்து தனது மூத்த மகனை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அதில் அவர் வீர மரணமடைந்தார். இலங்கையில் இந்தியா வீடு கட்டி கொடுக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த வீடுகளில் சிங்களர்தான் குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்கள் குடியமர்த்தப்படவில்லை. இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு மரியாதை கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரபாகரன்தான். தமிழகத்தில் 7 1/2 கோடி பேர் இருந்தும் போரை தடுக்க முடியவில்லை. அந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாது. 1975-ம் ஆண்டு நான் கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றபோது கருணாநிதி என்னை பாராட்டினார். ஆனால் வைகோ சென்று வந்தபோது அவர் விளம்பரத்திற்காக சென்று வந்தார் என்று கூறினார். தமிழினத்தை ஒன்றுபடுத்திட இந்த நூல் உதவும். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார். |
| காந்தி படத்துடன் முக்கிய தலைவர்கள் படம்: ரூபாய் நோட்டுகளில் மாற்றம் வருமா? Posted: 17 Jun 2012 07:44 AM PDT இந்திய ரூபாய் நோட்டுகளில் 1993-க்கு முன்பு வரை அசோகர் தூண் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு, ரூபாய் நோட்டுகளில் மகாத்மாகாந்தி படத்தை அச்சிட, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் தீர்மானித்தது. இதை பரித்துரையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. முதன் முதலில் ரூ.500 நோட்டில் காந்தியின் உருவம் இடம் பெற்றது. 1996 முதல் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் காந்தி படம் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில் ரூபாய் நோட்டுக்களில் மேலும் மாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. ரூபாய் நோட்டுக்கள் அனைத்திலும் காந்தி படம் மட்டுமே அச்சிடப்படுவதற்கு பதிலாக ஒவ்வொரு மதிப்பிலான ரூபாய் நோட்டிலும், நாட்டுக்காக பாடுபட்ட பிற தலைவர்களின் படங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு கடிதங்கள் வந்தன. குறிப்பாக டாக்டர் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயர்களை பொதுமக்கள் பரிந்து ரைத்துள்ளனர். இதுபற்றி, ரிசர்வ் வங்கி மத்திய வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக முடிவு எதுவும் எடுக்க இயலாது. அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் தனது பரிந்துரையை அனுப்ப உள்ளது. இந்த விவரம், பொதுநல ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால் Posted: 17 Jun 2012 05:06 AM PDT இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான சாய்னா, சீனாவின் சுயூரி லி-யை சந்தித்தார். இப்போட்டியில் 13-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் சுயூரியை வீழ்த்தி, சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார். இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சாய்னா சாம்பியன் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். மேலும் இந்த வருடத்தில் சாய்னா வென்றுள்ள 3-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனிலும் சாய்னா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து பேசிய சாய்னா, 'போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இங்கே கூடியிருந்த ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். ரசிகர்கள் அளித்த ஆதரவால், ஒவ்வொரு முறை இந்த மைதானத்தில் களமிறங்கும் போதும் நான் சாம்பியனைப் போலவே உணர்ந்தேன்' என்றார். |
| இலங்கையில் எதிர்க்கட்சி பேரணியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி Posted: 17 Jun 2012 03:44 AM PDT இலங்கையில் உள்ள ஹம்பன்போடா என்ற இடத்தில் நேற்று எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியின் பேரணி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஜே.வி.பி. கட்சி பெண் தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என தெரியவில்லை. அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| தீபாவளிக்கு ரஜினி, அஜீத், சிம்பு படங்கள் ரிலீஸ் Posted: 17 Jun 2012 02:10 AM PDT சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்கள் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகின்றன என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு வரும் படம் கோச்சடையான். ஏற்கனவே மக்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோச்சடையானைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஜப்பானிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவிருக்கிறதாம். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினிகாந்தின் மனம் கவர்ந்த அஜீத் குமார் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சிம்புவின் வாலு படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது. ஆக தீபாவளி அன்று 3 படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகிறது. ரஜினி, அஜீத், சிம்புவுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால் ரஜினியின் ரசிகர்கள் தற்போது அஜீத்தின் ரசிகர்களாகவும் உள்ளனர். அஜீத்தின் ரசிகர்களில் பலர் சிம்புவின் ரசிகர்களாக உள்ளனர். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








