Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


ஐபிஎல்: 'நோ பால்' போட ரூ.10 லட்சம் கேட்ட ஸ்ரீவாஸ்தவ்?

Posted: 14 May 2012 10:43 PM PDT


ஐபிஎல் போட்டியின்போது தான் நோ பால் போட பணம் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொய் என்றும், தான் குற்றமற்றவன் என்றும் கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் ஐபிஎல் போட்டி ஒன்றில் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ஒரு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஸ்பாட் பிக்சிங் பற்றி என்ன கூறினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அந்த தொலைக்காட்சி சேனல் நான் ஸ்பாட் பிக்சிங் செய்தேன் என்று கூறும் காட்சிகளை ஒளிபரப்புகிறதே. நான் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்ட காட்சியையும் ஒளிபரப்ப வேண்டியது தானே. டெலிபோன் பேச்சில் வரும் குரல் என்னுடையது அல்ல. போலியாக யாரோ பேசி வேறொருவரை மாட்டிவிடுவது சுலபம்.

இந்த விவகாரம் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறி என்னை சந்தித்தனர். எனக்கு நல்ல வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியதால் நான் அவர்களை 7 முதல் 8 தடவை சந்தித்துள்ளேன். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் 50 வீரர்களை சந்தித்தனர். குறைந்தது 15 கிரிக்கெட் வீரர்களிடமாவது நான் அவர்களைப் பற்றி பேசியுள்ளேன்.

ஆனால் அனைவருக்குமே அவர்கள் மீது சந்தேகம் இருந்தது. காரணம் அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் பிக்சிங் மற்றும் அணி உரிமையாளர்கள் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்பதைப் பற்றியே கேட்டுள்ளனர். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறிக்கொண்டு சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசினார்கள்.

அந்த தொலைக்காட்சி சேனல் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார்.

டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடும் டிபி சுதீந்திரா உள்ளூர் போட்டியில் லஞ்சம் வாங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் ஐபிஎல் போட்டியின்போது லஞ்சம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்தூர் டி20 லீக் மேட்சில் நோ பால் போட அவர் ரூ.40,000 கேட்டது கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த பிரச்சனைகளை அடுத்து ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று அவசரமாகக் கூடுகிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்படும் வீடியோவை விசாரணைக்கு கேட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் சிலர் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுவதாக சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன. ஊழல் மற்றும் முறைகேடுகளை பிசிசிஐ ஒரு நாளும் சகித்துக்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்துள்ள அந்த வீடியோக்கள் பரிசோதிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



நேபாள விமான விபத்தில் 'ரஸ்னா' விளம்பரக் குழந்தை நட்சத்திரம் பலி

Posted: 14 May 2012 10:37 PM PDT


நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார்.

ரஸ்னா விளம்பரம் உள்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ்(14). அமிதாப் பச்சன் நடித்த 'பா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும் பிரியாமணியுடன் வெள்ளிநட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடிவினா நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தளமான ஜோம்சோமுக்கு சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 16 இந்தியர்கள் உள்பட 21 பேர் இருந்தனர்.

நேற்று காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள். இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது தாயும் பலியாகினர்.

இந்த விபத்தில் விமானம் நொருங்கிப் போனது ஆனால் தீப்பிடிக்கவில்லை. விமானிகள் பிரபு ஷரண் பதக் மற்றும் ஜே.டி. மகாராஜன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் முகங்கள் படுமோசமாக சேதமைடந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.



விஜய்யுடன் இணையும் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார்

Posted: 14 May 2012 09:26 PM PDT


துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தீர்ப்பு

Posted: 14 May 2012 09:10 PM PDT


2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜா.

இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. இந் நிலையில் ராசாவை விடுதலை செய்தால் அவர் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இந் நிலையில் இன்று நீதிபதி சைனி தனது தீர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார்

Posted: 14 May 2012 09:02 PM PDT


முன்னாள் தலைமை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அஜீத் பிரகாஷ் சிங்,   கூடங்குளம் அணுஉலையை  எதிர்த்து போராடுபவர்கள் மீது தேச விரோத வழக்குகள் போடுவது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்ய முயற்சி மேற்கொள்ளபோவதாக தெரிவித்தார்.

மாநில மனித உரிமை கமிஷன் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என தன் கவலையை தெரிவித்த அவர், இப்பிரச்சினையை தேசிய மனித உரிமை கமிஷன் பார்வைக்கு எடுத்து செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திருநெல்வேலியில் சுமார் 70,000 அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் கூடி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதில் தான் கலந்து கொண்டு உரையாற்ற விருப்பதாகவும் தெரிவித்தார்.



மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி மரணம்

Posted: 14 May 2012 08:40 PM PDT


தமிழ்த் திரையுலகை தனது இசையால் கட்டிப் போட்டவர்களில் வரிசையில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கு உண்டு. அவரது மனைவி திரு. ஜானகி அம்மாள் (வயது 74) உடல்தலக் குறைவு காரணமாக இன்று மாலை 4 மணிக்கு மரணமடைந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி, ஜானகி அம்மாள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவரது உடல்நிலை, இரண்டரை மாதங்களுக்கு முன் மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து. சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று மாலை, 4.10 மணிக்கு இறந்தார்.  அம்மாவின் இறுதிச் சடங்கு, நாளை நண்பகல் 11. 30 மணிக்கு, பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்க இருக்கிறது. இவரின் இறுதிச் சடங்கில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இத்தம்பதியினருக்கு கோபி, முரளி, பிரகாஷ், ஹரி என நான்கு மகன்களும் லதா, மது, சாந்தி என மூன்று மகள்களும் உள்ளனர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, மாலை மலர் இணையதளம் அதன் வாசகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது."



வரிசை கட்டும் சிம்பு படங்கள்!

Posted: 14 May 2012 08:34 PM PDT


வானம்' படத்தினைத்  தொடர்ந்து  சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் படம்  குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி  இருக்கின்றன.

'போடா போடி', 'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

அப்படங்களில் தற்போதைய ஸ்டேடஸ் :

'போடா போடி'யில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். படத்தை  ஜுன் மாதத்தில் வெளியிடலாம் எனத் தெரிகிறது.

'வேட்டை மன்னன்' படத்துக்கு  சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. வெளிநாட்டில் தான் மீதம் உள்ள அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட வேண்டும்.  பிரேசிலில் படம்பிடிக்க  மிக நீண்ட ஷெட்டியூல் தயாராகி வருகிறது.

'வாலு' திரைப்படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் சம்பந்தப்பட்ட போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்கள். அதற்கான விளம்பரங்கள் மற்றும் FIRST LOOK விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்போதைக்கு 'போடா போடி', 'வாலு', 'வேட்டை மன்னன்' என்கிற வரிசையில் தான் சிம்புவின் படங்கள் வெளிவரும்.

வெற்றிமாறன் - சிம்பு இருவரும் தங்களது பணிகளை முடித்த உடன் கண்டிப்பாக 'வடசென்னை'யில் இணைவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

சந்தானத்தை விட பிஸியா இருக்காருபா சிம்பு!  






பயங்கரம் : தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு 49 பேர் உடல்கள்

Posted: 14 May 2012 08:27 PM PDT


மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சான் ஜுயன் என்ற இடத்தில் பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டப்பட்டு 49 பேரின் உடல்கள் கிடந்தன. இதில் 43 ஆண்கள், 6 பெண்கள் உடல்களாகும்.

பலரது தலைகள், கை-கால்கள் வெட்டி துண்டிக்கப்பட்டு இருந்தன. எனவே இந்த 49 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி கொண்டு வந்து வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூர செயலை போதைப்பொருள் கடத்தல் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தலைகள், கை-கால்கள் வெட்டப்பட்டு உடல்கள் உருக்குலைந்து இருப்பதால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறுகிறார்கள். இந்த பிணங்கள் கிடந்த இடம் அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியாகும்.



சுக்மாவில் மீண்டும் இருவரை மாவோயிஸ்டுகள் கடத்தினர்

Posted: 14 May 2012 08:14 PM PDT


இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் உள்ளூர் பி.ஜே.பி பிரமுகர் உள்பட இருவரை மாவோயிஸ்டுகள் நேற்று கடத்தியுள்ளனர். கடந்த மாதம் சுகமா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டு 12 நாட்களுக்குபின் விடுவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், நேற்று மாலை சுக்மா மாவட்ட பி.ஜே.பி. செயலாளர் மோசாக்கி ஜோகா பஸ் மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மாவோயிஸ்டுகள் பஸ்சை  வழி மறித்து அவரை கடத்தி கொண்டுபோய்விட்டனர்.
 
டோர்நாபால் எனும் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் மோச்சாக்கி காச்சி எனும் வியாபாரியை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றுள்ளனர். உடனடியாக தேடுதல் பணியை தொடங்கிவிட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.



தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்

Posted: 14 May 2012 07:31 AM PDT


தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.

சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,

பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.

பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.

தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில்லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.



OK OK ராஜேஷுடன் காமெடியில் கலக்கப் போகிறார் விஜய்?

Posted: 14 May 2012 07:01 AM PDT


துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.

சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.  ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..

முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.




மாநிலங்களவை உறுப்பினராக வரும் 16-ந் தேதி பதவியேற்கிறார் தெண்டுல்கர்

Posted: 14 May 2012 06:08 AM PDT


இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஏப். 26-ல் பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  
 
இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்ததுபோல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு எம்.பி. பதவி வழங்கக்கூடாது என்று கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் வரும் 16-ந் தேதி மாநிலங்களவை உறுப்பினராக தெண்டுல்கர் பதவியேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.



புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு?

Posted: 14 May 2012 05:38 AM PDT


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு வழங்கும் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், தா.பாண்டியனுக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால், அங்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்யிடவில்லை.

அதே நேரத்தில் இங்கு போட்டியிடப் போவது போல பாவ்லா காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.

அதே போல திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் போட்டியிட மாட்டோம் என அறிவித்துவிட்டன. ஆனால், அதிமுகவை எதிர்த்து நிற்பது என்று முடிவெடுத்து, களத்தில் குதிக்கவுள்ளது தேமுதிக.

அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை தொடங்கி தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளார்.

இந் நி்லையில் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், கேட்கும் கட்சியை பொறுத்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தானாகவே சென்று திமுகவின் ஆதரவு கேட்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திமுகவே முன் வந்து ஆதரித்தால், அதை வரவேற்று ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேமுதிகவுக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட பொது வேட்பாளர் அந்தஸ்து தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. இதனால் அந்தக் கட்சியின் வேட்பாளரை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூடவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற விஜயகாந்த் தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.



நடிகர் சிரஞ்சீவி மருமகன் வீட்டில் வருமானவரி சோதனை: ரூ.35 கோடி சிக்கியது

Posted: 14 May 2012 05:19 AM PDT


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஷாவும் என்ஜினீயரிங் படித்து வந்த சிரிஷ் பரத்வாஜும் 2007-ம் ஆண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிரிஷ் பரத்வாஜை நான்கு வருடமாக காதலிப்பதாகவும் காதலை பெற்றோர் ஏற்காததால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஸ்ரீஷா தெரிவித்தார்.

இதனால் சிரஞ்சீவி அதிர்ச்சியானார். மகளை வீட்டில் சேர்க்கவில்லை. ஸ்ரீஷா கணவர் வீட்டிலேயே குடியேறினார்.   சில மாதங்களுக்கு பின் சிரஞ்சீவி குடும்பத்தினர் சமரசம் ஆனார்கள். மகளையும் மருமகனையும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்.

இதற்கிடையில் ஸ்ரீஷாவுக்கும் சிரிஷ் பரத்வாஜுக்கும் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிரிஷ் தன்னை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்துவதாக ஸ்ரீஷா குற்றம்சாட்டினார். ரூ.1 1/2 கோடி வரதட்சணை கேட்பதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்தார். அத்துடன் விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.   தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிரிஷ் பரத்வாஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 12-ந் தேதி  திடீர் சோதனை நடத்தினார்கள்.

இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றதில் வருமான வரித்துறையினர் 35 பெட்டிகளை எடுத்துச் சென்றனர். இதில் கணக்கில் வராத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 கோடி ஆகும். கையகப்படுத்திய ரூ.35 கோடி பணம் ரிசர்வ் வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.




கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு! - கே எஸ் ரவிக்குமார் தகவல்

Posted: 14 May 2012 05:14 AM PDT


ரஜினியின் கோச்சடையான் படத்தில், மறைந்த நடிகர் நாகேஷ் 'நடிக்கிறார்.' அனிமேஷன் முறையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ராணாவில், வடிவேலு மற்றும் விவேக் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்தார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஜினிக்கு மாமாவாக ஒரு காமெடி கேரக்டர் வருகிறது கோச்சடையானில். அதில் சந்தானம் போன்ற நடிகர்கள் நடித்தால் சரியாக வராது... வாடா போடா என்று கூப்பிட முடியாது என்பதால், மறைந்த நாகேஷை அனிமேஷனில் மீண்டும் உருவாக்கியிருக்கிறோம். கஷ்டமான காட்சி என்றாலும், மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கி வருகிறார்கள் சௌந்தர்யா குழுவினர்.

ராணாவில் வடிவேலு, விவேக் என பெரிய காமெடியன்கள் உள்ளனர். அதற்கு நிகராக வரவேண்டும் என்பதால் கோச்சடையானில் இப்படிச் செய்திருக்கிறோம்," என்றார்.



ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே? ரஞ்சிதா பதில்!

Posted: 14 May 2012 05:03 AM PDT


நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் அவருடன் இருக்கிறார் என்று ஜெயேந்திரர் கூறி இருந்தார்.


இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார். 

ரஞ்சிதாவும் ஜெயேந்திரர் கருத்தை கண்டித்து எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நான் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறேன். நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டு உள்ளேன். 

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்தியானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இது எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு, சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னைப்பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த வழக்கு இன்று (14.05.2012) விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு ரஞ்சிதா இன்று ஆஜரானார். கோர்ட்டு கூண்டில் ஏறி நின்று மாஜிஸ்திரேட்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்பு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே சமாதானமாக வந்தால் ஏற்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, இப்போது நான் அவதூறு வழக்கு போட்டுள்ளேன். அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் பிறகு யோசிக்கலாம் என்றார். ரஞ்சிதாவுடன் அவரது வக்கீல் முருகையன் பாபு வந்திருந்தார். 

16-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரருக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.



நான் ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல...: நித்யானந்தா

Posted: 14 May 2012 04:56 AM PDT


மதுரை ஆதீன மடத்தை விட்டு ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவி்த்துள்ளார்.

மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா ஆதீன மடத்தில் இன்று சொற்பொழிவாற்றினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக என்னை நியமித்துள்ளார்கள். என்னை ஆதீனமாக்கியதை எதிர்த்து சிலர் போராடி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தை மீட்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

என்னை எதிர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார். என்னைப் பற்றியும், மதுரை ஆதீன மடம் குறித்தும் தான் கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காஞ்சி மடத்தில் இருந்து தனது உதவியாளரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளது அவர்களுக்கு இடையேயான பிரச்சனை. அதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அதனால் ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ரஞ்சிதா தான் முடிவு எடுக்க வேண்டும். என்னை மதுரை ஆதீனமாக்கியதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்திப்போம். எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் கேலிக்கூத்தானது. நான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆன்மீகமானவன். அதனால் மதுரை ஆதீன மடத்தைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். தற்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.



ராணுவ தளபதியின் ரகசிய கடிதத்தை லீக் செய்தது பெண் அதிகாரி? மத்திய அரசு விளக்கம்

Posted: 14 May 2012 12:49 AM PDT


நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.

ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வேட்பாளர் இன்று அறிவிப்பு

Posted: 14 May 2012 12:33 AM PDT


புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த தேர்தலில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, ம.தி. மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளன. ஆனால் தே.மு.தி.க. போட்டியிடப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தை ஏற்று விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார்.
 
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வேட்பாளர் பெயரை விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. தே.மு.தி.க. மாவட் செயலாளர் ஜாகீர் உசேன், அவைத் தலைவர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு. தி.க.வை ஆதரிக்க போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தி.மு.க. தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என் பதை தெரிவிக்க 49 (ஓ)வை பயன்படுத்த போவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார். இதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் கட்சி தலைமையிடம் கேட்டுள்ளனர்.




தாவூத் இப்ராகீமைவிட ஜெகன்மோகன் ரெட்டி ஆபத்தானவர்: சந்திரபாபுநாயுடு

Posted: 14 May 2012 12:03 AM PDT

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்திற்கு அதிக கூட்டம் வருவதாகவும், அவரது கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆந்திர மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எப்போதும் தெளிவான முடிவையே எடுப்பார்கள். பிரபல தீவிரவாதி தாவூத் இப்ராகீமைவிட ஆபத்தானவர். இடைத்தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. 

ஜெகன்மோகன் ரெட்டியின் மைத்துனர் அனில் கிறிஸ்தவ போதகராக உள்ளார். அவர் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று போதனை செய்து வருகிறார். அப்போது அவர் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். 

தன்னை மதசார்பற்றவர் என்று கூறிக்கொள்ளும் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர்களிடம் மறைமுகமாக மைத்துனர் மூலம் ஆதரவு திரட்டுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி கட்சி வெற்றி பெற்றால் ஆந்திராவில் ஜனநாயகத்தை வேரறுத்துவிடுவார். 

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.





எடியூரப்பாவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: சமரச முயற்சி வெற்றி பெறுமா?

Posted: 13 May 2012 11:55 PM PDT


சட்ட விரோத சுரங்கத் தொழிலுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் 8 மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதல்- மந்திரி பதவியை எடியூரப்பா இழந்தார். புதிய முதல்- மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார்.
 
லோக்ஆயுக்தா அமைப்பில் சிறை தண்டனை பெற்ற எடியூரப்பா, ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்-மந்திரியாக பல தடவை முயற்சி செய்தார். பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளும் தோல்விலேயே முடிந்தன. இதனால் அவர் கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் எடியூரப்பா மீதான சட்ட விரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது எடியூரப்பாவை ஆவேசப்படுத்தியது.
 
பா.ஜ.க. தலைவர்கள் யாரும் தன்னை காப்பாற்ற முன்வரவில்லை என்று வேதனைப்பட்டார். பெங்களூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா தன் குமுறல்களை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், காங்கிரசில் மூத்த தலைவர் யாராவது பாதிக்கப்பட்டால் சோனியா நேரயாக உதவுகிறார். கட்சியும் உதவிக்கு முன்வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார்கள். இதற்காக சோனியாவை பாராட்டுகிறேன் என்றார்.
 
எடியூரப்பாவின் இந்த பேச்சு கர்நாடக பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து எடியூரப்பாவை சமரசப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. மந்திரிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் முதல்- மந்திரி சதானந்த கவுடா அவமதித்து வருவதாக எடியூரப்பா ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
 
சதானந்தா கவுடா தொடர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி 9 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவி விலக முன் வந்துள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
எடியூரப்பா இன்று காலை தன் ஆதரவு மந்திரிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்பதில் எடியூரப்பா ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல தடவை எடியூரப்பா இது மாதிரி போர்க்கொடி உயர்த்தி விட்டு பிறகு சமரசம் ஆகி உள்ளார்.
 
இந்த தடவையும் அவரை சமரசம் செய்ய கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தடவை எடியூரப்பா சமரசம் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர் இன்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவை அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



ஷங்கரின் அடுத்த டார்கெட் 'ஓட்டுக்கு பணம்'

Posted: 13 May 2012 11:52 PM PDT


கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது... பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!

விக்ரம் - பிசி ஸ்ரீராம் - ஏ ஆர் ரஹ்மான் என மீண்டும் ஒரு மெகா கூட்டணியோடு ஆரம்பிக்கும் தன் அடுத்த படத்தின் கதைக் களம் 'ஓட்டுக்குப் பணம்' என்பதுதான்.

இந்தப் பின்னணியில் ஆக்ஷன் - காதல் - காமெடி என்ற கட்டமைப்பில் திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர் எழுத்தாளர்கள் சுபா.

இந்தப் படத்துக்கு தென்றல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதே பெயரில் 2003-ல் பார்த்திபன் நடிப்பில் ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம்.

பாலிவுட்டிலிருந்து ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஒருவரை இந்தப் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். அசினுடனும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். ஆனால் இன்னமும் இறுதியாகவில்லையாம்.

யாராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் எக்கச்சக்க பணம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்!



சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதியை தோண்டிய மர்ம நபர்கள்!

Posted: 13 May 2012 11:29 PM PDT


மேட்டூர் அருகே மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டதால் திடீர் என்று பரபரப்பு ஏற்பட்டது.

வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

காவிரிக் கரையோரத்தில் இருக்கும் அவரது சமாதிக்கு வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். சிலர், சமாதியில் இருந்து மண்ணை எடுத்து செல்வதும் உண்டு.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் வீரப்பனின் நினைவு நாளில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகள்கள் பிரபாவதி, வித்யாராணி மற்றும் உறவினர்கள் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீரப்பனின் ஆதரவாளர்களும் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழி எடுத்து செல்வார்கள்.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டிருந்தது. சமாதியின் மீது சுமார் ஒன்றரை அடி உயரத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் முழுவதும் அகற்றப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் பரவியதும் வீரப்பனின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™