விழியே பேசு... |
- நடராஜனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் செய்த சதி - சக்தி எது?
- பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி
- நித்தியானந்தா கெடு விவகாரம்! ஜெயேந்திரர் கருத்து கூற மறுப்பு!
- புனேவை புரட்டியெடுத்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- சுதந்திர தினத்தில்...
- எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் சுஷ்மா சுவராஜ்? - சீமான் ஆவேசம்
- 3 வயது மகனுக்கு பாலூட்டலாமா?!
- பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: மம்தா பானர்ஜி
- ராணுவத்துக்கு ரூ.3000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
- பில்லா-2 பற்றி பார்வதி ஓமனக்குட்டன்!
- பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படும்: கபில் சிபல்
- சண்டையில் ’வழக்கு எண் 18/9’!
- கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?
- ஏ. ஆர். ரஹ்மானை மிஞ்சிய இளையராஜா ; நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!
- திருமண மற்றும் திருமண வரவேற்பு வீடியோ
- தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்கப்படும்: கபில் சிபல்
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு
- புதுக்கோட்டையில் யாருக்கு வாய்ப்பளிப்பார் விஜயகாந்த்?
- உதயக்குமார் போராட்டத்தில் திடீர் திருப்பம்... அத்தனை பெண்களும் விலகல்!
- சினேகாவை இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!(போட்டோக்கள்)
- இலங்கைத் தமிழர் தொடர்பான சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
- ஜெயந்திரர் மீது ரஞ்சிதா வழக்கு- எழும்பூர் கோர்ட்டில் நேரில் மனு
| நடராஜனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் செய்த சதி - சக்தி எது? Posted: 11 May 2012 10:31 PM PDT சசிகலா நடராஜனுக்கு 6 வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததால் இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று அவரது வருகைக்காக சிறை வாசலில் பத்திரிகை யாளர்களை காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று நடராஜன் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களீடம் வந்து, இன்று நடராஜன் விடுதலை இல்லை என்று அவர்களை களைந்துபோகச்செய்தனர். பத்திரிகையாளர்கள் அங்கிருந்து அகன்ற நேரத்தில் ரகசியமாக சசிகலா நடராஜன் சிறையில் இருந்து வெளியேறி காரில் பறந்துவிட்டார். உடன் அவரது ஆதரவாளர்கள் துணை சென்றன்ர். வழக்கமாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் நடராஜன் எங்கேயும் சென்றதில்லை. முதல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு கொண்டுவரப்பட்டபோது, நள்ளிரவிலும் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் காவல் நிலையத்திலும் நீதிபதி வீட்டிற்கு முன்பும் அரசுக்கு எதிராக கோப கணலை கொட்டினார். அதன்பிறகும் அவர் மீது அடுக்கடுக்காக போடப்பட்ட 5 வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கும் , காவல் நிலையைத்திற்கும் கொண்டுவரப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என்று போலீசார் தடுத்த போதும், அதையும் மீறி பத்திரிகையாளர்களிடம் வழக்கு சம்பந்தமாகவும் அரசின் பழிவாங்கின் நோக்கத்தில் பொய்வழக்கு போடப்படுகிறது என்றும் பேசியிருந்தார். நேற்று 10.5.2012 கூட அவருக்கு அனைத்து வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது என்பதையும் இன்று விடுதலை ஆகி தஞ்சைக்கு வருவார் என்பதையும் அவரது வழக்கறிஞர் வடிவேலு பத்திரிகையாளர்களூக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியை சொல்லினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று சிறையில் இருந்து வெளியேறியிருக்கும் நடராஜனை பத்திரிகை யாளர்களை சந்திக்க விடாமல் செய்த சக்தி எது? என்று கூடியிருந்த பத்திரிகை யாளர்களுக்கும், அவருக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது. |
| பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி Posted: 11 May 2012 10:14 PM PDT ![]() மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். வழக்கமான தன் பாணியை முற்றாக விடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்கி வருகிறார். ஜீவாவுடன் பூஜா ஹெக்டே, நரேன் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் 250 பேர் பங்கேற்று வருகின்றனர். ஆரம்பத்தில் திருவல்லிக்கேணியில் க்ளைமாக்ஸின் ஒரு பகுதியைப் படமாக்கிய மிஷ்கின், இப்போது மொத்த குழுவுடன் காரைக்காலுக்கு இடம்பெயர்ந்துள்ளார். இங்கும் இரவு நேர ஷூட்டிங்தான். இதுகுறித்து ஜீவா கூறுகையில், "இவ்வளவு பெரிய க்ளைமாக்ஸ் இதுவரை நான் நடித்த படங்களில் வந்ததில்லை. வழக்கம்போல இரவு நேரத்தில்தான் படமாகிறது. படம் வந்தபிறகு இதற்கான காரணம் புரியும்," என்றார். யுடிவி நேரடியாக தயாரிக்கும் படங்களில் முகமூடியும் ஒன்று! |
| நித்தியானந்தா கெடு விவகாரம்! ஜெயேந்திரர் கருத்து கூற மறுப்பு! Posted: 11 May 2012 09:21 PM PDT மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், நித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும். ஆனால் நித்தியானந்தா அவ்வாறு செய்யவில்லை. மேலும் ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றார். இதற்கு பதிலளித்த நித்தியானந்தா இந்த கருத்தை காஞ்சி சங்கராச்சாரியார் 10 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என்று கெடு' விதித்தார். இதுகுறித்து ஜெயேந்திரரின் கருத்துக்களை பெறுவதற்காக திங்கள்கிழமை காலை காஞ்சி சங்கர மடத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு பூஜைகளை முடித்து வந்த ஜெயேந்திரர் முன் பத்திரிகையாளர்கள் நின்றனர். இதை பார்த்த ஜெயேந்திரர் தனது வாய் மீது கையை வைத்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பது போல கூறிவிட்டு, உலக நன்மைக்காக நடைபெறும் சகஸ்கர சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ஜெயேந்திரர் மவுனவிரதத்தில் இருக்கிறார். அதனால் இவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று தெரிவித்தனர். |
| புனேவை புரட்டியெடுத்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Posted: 11 May 2012 11:10 PM PDT நடப்பு ஐ.பி.எல்.5-வது தொடர்பில் கிறிஸ் கெய்ல் மற்றும் தில்ஷனின் அரைசதங்களால் புனேவை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளை ஆப் சுற்றுக்குச் செல்கிறது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. புனேவை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியோ 7-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. நேற்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் கங்குலி தமக்குத் தாமே ஓய்வு கொடுத்துக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஸ்மித் கேப்டனாக வழிநடத்தினார். பெங்களூர் அணியில் கிறிஸ் கெய் மற்றும் தில்ஷான் இருவரும் அரை சதங்களைக் கடந்தனர். அதுவும் கெய்ல் 31 பந்துகளிலேயே 57 ரன்களைக் குவித்தார். தில்ஷன் 44 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். புனேவின் புவனேஷ்குமார் பந்துகள் கெய்லிடம் சிக்கி சின்னாபின்னமானது குறிப்பிடத்தக்கது. தொடக்கம் முதலே ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினரின் பந்துவீச்சு அபாராமாக இருக்க புனே வாரியர்ஸ் அணியால் 138 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பெங்களூர் அணியின் வினய்குமார், முத்தையா முரளிதரன், ஜாஹீர்கான் ஆகியோர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்த்னர். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பேட்டிங்கும் அபாரமான பந்துவீச்சும் தொடரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. |
| Posted: 11 May 2012 09:16 PM PDT சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'மாற்றான்' படத்தினை பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது ஈராஸ் நிறுவனம். 'அயன்' பட வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். 'மாற்றான்' படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமைகளையும் மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு கொடுத்து வாங்கி இருக்கிறது ஈராஸ் நிறுவனம். இது குறித்து ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா " பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட இருக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தான் ரஜினி நடித்து வரும் 'கோச்சடையான்' படத்தினை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'மாற்றான்' படத்தில் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறாராம் காஜல். காஜலுக்கு இப்போது இந்தி, தெலுங்கிலும் நல்ல மார்கெட் இருப்பதால், இப்படத்தின் மூலம் மேலும் நல்ல வருவாய் வர வாய்ப்பிருக்கிறது என்கிறது கோலிவுட். "சுதந்திர தின ரிலீஸாம் 'மாற்றான்' " |
| எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் சுஷ்மா சுவராஜ்? - சீமான் ஆவேசம் Posted: 11 May 2012 09:00 PM PDT இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார்?, என கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். சுஷ்மா சுவராஜுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்று பேசியுள்ளார். இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா சுவராஜ், இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழர் கட்சியினர் என அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது, இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகிறதா, இந்திய அரசு அளித்த உதவிகள் அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவே தவிர, தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதல்ல. ஆனால் தமிழர்களின் நிலை அங்கு எப்படியிருக்கிறது, எந்த அளவிற்கு அங்கு இராணுவத்தின் அடக்குமுறை இன்றும் தொடர்கிறது, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்கள காலனிகளாக மாற்றப்படுகின்றனவே, இராணுவ ஆக்கிரமிப்பினால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே என்று தமிழர்கள் கூறியதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தங்கள் மாநாட்டில் பேசாத சுஷ்மா சுவராஜ், அவர்களின் அரசியல் விருப்பம் தனித் தமிழ் ஈழம் அல்ல என்று பதிவு செய்ய முற்படுவது ஏன்? தமிழர் பகுதிகளில் ஒரிரு நாட்கள் மட்டும் பயணம் செய்து ஒரிரு மணி நேரங்கள் மட்டும் சில தமிழர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் விரும்புவது தனித் தமிழ் ஈழம் அல்ல என்று சுஷ்மா பேசிகிறார் என்றால், அவர் தமிழர்களின் விருப்பத்தை விட, தமிழ் ஈழம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டையும், ராஜபக்சவின் விருப்பதையும்தான் பேசியுள்ளார். தங்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்க, பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்திருந்த தங்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், இரசாயணக் குண்டுகள் ஆகியவற்றை போட்டு கொத்துக்கொத்தாக தங்கள் சொந்தங்களை ஈவிருக்கமின்றி அழித்த இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா? இரண்டரையாண்டுக் காலப் போரில் தங்கள் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை திட்டமிட்டு இனப் படுகொலை செய்து, தங்கள் சகோதரிகள் ஒரு இலட்சம் பேரை விதவையாக்கி, வாழ வழியற்ற நிலையை ஏற்படுத்திய இனவெறி இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா? அரை நூற்றாண்டுக் காலமாக இராணுவத்தை பயன்படுத்தி தங்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் கட்டவிழ்த்துவிட்ட அரசுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று சுஷ்மாவிடம் எங்களது தமிழ்ச் சொந்தங்கள் கூறினரா? எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்! இலங்கைத் தமிழர்களின் விருப்பம் தனித் தமிழ் ஈழமல்ல என்று கூறும் சுஷ்மா சுவராஜூம், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இலங்கைத் தமிழர்களின் முடிவை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தயாரா என்று நாங்கள் கேட்கிறோம். இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கும், ஐ.நா.விற்கும் தமிழினம் விடுக்கும் கோரிக்கை இதுவே. அதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி முன் வைக்குமா? என்று கேட்கிறோம். அப்படிச் செய்தால் அது அறிவு நாணயமுடைய செயலாக இருக்கும். ஒரிரு மணி நேரங்கள் மட்டும் அங்குள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து அவர்கள் தமிழீழ தனி நாட்டை ஏற்கவில்லை என்று கூறுவது இந்திய, இலங்கை அரசுகளின் இரகசியத் திட்டத்தையே பிரதிபலிக்கிறதே தவிர, உண்மையை அல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, தங்கள் இனத்தை அழித்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதன் மூலம் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழினம் உலகளாவிய அளவில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் இருந்து தமிழினம் ஒரு போதும் பின்வாங்காது. தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல், எத்தனை மாநாடுகள் போட்டாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளராது. தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை இந்திய நாடாளுமன்றக் கருவூலத்திற்கு அளித்துவிட்டதாகக் கூறுகிறார் சுஷ்மா சுவராஜ். இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சென்ற உங்களுக்கு தமிழினத்தை அழித்தொழித்த ராஜபகச் எதற்காக பரிசுப் பொருட்களை வழங்க வேண்டும்? அதனை எதற்காக நீங்கள் பெற்றுக்கொண்டு வரவேண்டும்? உங்களுக்குப் பரிசுப் பொருட்களை ராஜபக்ச அளிக்கிறார் என்றால், நீங்கள் தமிழர்களுடைய சகோதரியா அல்லது ராஜபக்சவின் அறிவிக்கப்படாத தூதரா? தமிழினப் படுகொலை செய்த குற்றத்திற்காக உலகின் முன் ராஜபக்ச கும்பல் நடுநடுங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் ராஜபக்ச அரசை தூக்கி பிடித்துக்கொண்டு, தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன. இது கண்டனத்திற்குரியது. -இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார். |
| Posted: 11 May 2012 08:54 PM PDT தனது மூன்று வயது மகனுக்கு 26 வயது பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டுவது குறித்த பிரபல 'டைம்' பத்திரிகை அட்டைப்படத்துடன் வெளியிட்ட செய்தியால் அமெரிக்காவில் அனல் பறக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பிற்ந்த குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும்,மருத்துவ நிபுணர்களும் ஒருபுறம் வலியுறுத்தி வந்தாலும்,எந்திரமயமாகிப்போன வாழ்க்கைச் சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று அதிகம் போனால்,3 மாதங்களுக்குள்ளாகவே அதற்கு குட்பை சொல்லிவிடுகின்றனர் இன்றைய தலைமுறை பெண்கள். ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள தாய்ப்பாலுக்குப் பதிலாக,புட்டி பாலை அருந்தி வளரும் குழந்தைகளுக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கமாலேயே போய்விடுகிறது. இதனாலேயே தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் உலகம் முழுவதும் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இது ஒருவகையான பிரச்சாரம் என்று 'டைம்' ஏடு கருதியதோ என்னவோ,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஜெமி லியான் என்ற 26 வயது பெண் ஒருவர்,3 வ்யதாகிவிட்டபோதிலும் தனது மகனுக்கு தொடர்ந்து பாலூட்டி வருவது குறித்த செய்தியை,இந்த வாரம் அட்டைப்படமாக வெளியிட்டு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. தனது தாயார் தனக்கு 6 வயது வ்ரை பாலூட்டியதாக 'டைம்' ஏடுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ள ஜெமி,ஆனால் தனது 3 வயது மகனுக்கு தாம் பாலூட்டுவதை மற்றவர்கள் விநோதமாக பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,இது குழந்தையை துன்புறுத்துவதற்கு - child molestation - ஈடானது என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜெமியின் இந்த பாலூட்டும் கருத்து மற்றும் அத்னை வலியுறுத்துவதற்காக அவர் கொடுத்துள்ள அட்டை பட போஸ்-க்கு எதிர்ப்புகள் ஒருபுறம் எழுந்துள்ளபோதிலும்,ஆதரவு குரல்களும் வராமல் இல்லை. எதிர்ப்பு கருத்து தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கைகு ஈடாக,ஆதரவு மற்றும் ஜெமியை பாராட்டும் கருத்துக்களும் வெளிவந்துள்ளன. "உடலியல் ரீதியாக இது இயல்பானது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.இதனை (அட்டை படத்தை) ஏராளமான மக்கள் பார்த்தால் நமது கலாச்சாரத்தில் இது இயல்பானடதாகிவிடும்.அந்த நம்பிக்கையில்தான் நான் இந்த போஸை கொடுத்துள்ளேன்.மேலும் இது பெற்றோர் மீது குழந்தை கொண்டிருக்கும் பாசம் மற்றும் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார் ஜெமி. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றின் காலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல டாக்டர் மைக் ப்ரெஸென்னிலோ,இந்த அட்டைப்படம் குறித்து பதட்டப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். கூடவே ட்விட்டர் தளத்தில் இது சரியா...தவறா...?என்பது குறித்த விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கிறது.ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆதரவு அல்லது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதில் பங்கேற்ற 6 வயது மகனுக்கு தாயான பாபி மில்லர் என்ற பெண்,இந்த அட்டைப்படத்திற்கும்,ஜெமியின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்."ஒரு பசுமாட்டிற்கு கூட தனது பிள்ளைக்கு எப்பொழுது பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பது தெரியும்!" என்று அவர் அதில் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் இது குறித்து விவாதம் அனல் பறப்பது ஒருபுறம் இருக்கட்டும்;காதலர் தின கொண்டாட்டத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் கலாச்சார பாதுகாவலர்கள்(?!) உள்ள நம் இந்தியாவில், இப்படியெல்லாம் பத்திரிகையில் ஒரு பெண் துணிந்து பேட்டி கொடுத்துவிட முடியுமா என்ன?! |
| பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: மம்தா பானர்ஜி Posted: 11 May 2012 08:42 PM PDT அடுத்த ஆண்டே பாராளுமன்ற தேர்தல் வரலாம். அதனால் நமது கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்' என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மம்தா, 'லோக்சபா தேர்தலை 2013ம் ஆண்டே நடத்துவது தொடர்பாக, டில்லியில் ஒரு கட்சி ஆலோசனை நடத்தியுள்ளது. எனக்கு கிடைத்த தகவல் இது. இதில் உண்மை இல்லாமலும் இருக்கலாம். அந்தக் கட்சி எங்கு கூட்டத்தை நடத்தியது என்பது பற்றியெல்லாம் நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலை முன்னரே நடத்துவது தொடர்பாக விவாதித்துள்ளனர்' என்றார். மேலும், 'இத்தகைய தகவல்கள் வருவதால், எந்த நாளில் லோக்சபா தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம். அதற்காக நமது கட்சியினர் முறைகேடாக எதையும் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும். அதேபோல், கோஷ்டி அரசியலிலும் ஈடுபட வேண்டாம். ஏதாவது ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், அந்த நபர் நமக்கு தேவையில்லை' எனவும் மம்தா பானர்ஜி கூறினார். |
| ராணுவத்துக்கு ரூ.3000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல் Posted: 11 May 2012 08:40 PM PDT ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு, அமெரிக்காவிடமிருந்து, வெளிநாட்டு ராணுவ விற்பனை திட்டம் மூலம், எம்777 பி.ஏ.இ பீரங்கிகளை ராணுவத்துக்கு வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்777 ரக பீரங்கிகள் 4218 கி.கிராம் எடை உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 5 சுற்றுக்கள் வரை சுட முடியும். இந்த துப்பாக்கிகள் மூலம் 30 கி.மீ தூரம் வரை சுடலாம். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பாக ராணுவ தளபதி விகே சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 155 எம் எம் 39-காலிபர் பீரங்கிகள் எளிதாக மிகவும் உயரமான மலை பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும். இதன் படி இந்த வகை பீரங்கிகள் வட கிழக்கு இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள லடாக் பகுதியிலும் பயன்படுத்தப்படும். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை கொண்டு செல்ல வசதியாக வட கிழக்கு பகுதிகளில் சாலை வசதி மற்றும் ரயில் பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது. எம்777 ரக பீரங்கிகள் தற்போது அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போபர்ஸ் விவகாரத்திற்குப் பின்னர், கடந்த 27 வருடங்களில் பீரங்கிகள் வாங்குவது இது முதல் முறை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. |
| பில்லா-2 பற்றி பார்வதி ஓமனக்குட்டன்! Posted: 11 May 2012 12:07 PM PDT அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஹீரோயின் உலக அழகியான பார்வதி ஓமனக்குட்டன் இந்த படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அளிக்கும் என நம்புகிறார். பார்வதி ஓமனக்குட்டன் அளித்துள்ள பேட்டியில் அறிமுகமே அஜித்துடன் இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி என்ன கருதுகிறீர்கள்? மிகப்பெரிய பாக்யம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்டுடன் அதுவும் மாஸ் ஹீரோவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனது முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன் அஜித் பற்றிய உங்கள் கருத்து? மிகவும் எளிமையானவர் அஜித். லொக்கேஷனில் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன், முதல் கொண்டு ப்ரொடக்ஷன் பாய் வரை எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். கேமரா முன் நாம் ஏதாவது தவறாக செய்தால் பக்குவமாக எப்படி நடிக்க வேண்டும் என்று அறிவுரை கொடுப்பார். அவரோடு ஜோடி சேரும் முன்பு நான் அவர் மனைவியின் தீவிர ரசிகை. இதை நான் சொன்ன போது அவரும் அப்போது ஷாலினியின் ரசிகராக இருந்தார் என்று தெரியவந்தது. ரசிகராக இருந்து வாழ்க்கைத் துணையாக மாறியதில் அவருக்கு நான் வாழ்த்து சொன்னேன். 'பில்லா-2' படத்தின் கதை என்ன? உங்கள் கதாபாத்திரம் என்ன? கதை பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். கதையை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அஜித்துக்கு ஜோடியாக படத்தின் கதையை திசைதிருப்பும் கதாபாத்திரத்தில் தான் ஜேஸ்மின் நடிக்கிறார். பில்லா-2, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். ஒரு நடிகையை நிலைநாட்டுவது கவர்ச்சி தான். நீங்கள் கவர்ச்சிக்கு ஏதாவது எல்லை வகுத்துள்ளீர்களா? பார்வதி ஓமனக்குட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் என்னை அணுகாதீர்கள். கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு கவர்ச்சியை கொடுப்பேன். நடிப்பதற்கு வந்த பிறகு இதிலிருந்து பின்வாங்கமாட்டேன். அப்படி செய்வது நடிகைக்கு அழகல்ல. சினிமாவில் சாதிக்க நினைப்பது? மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். எவ்வளவு கடினமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனக்குட்டன் வெலுத்துகட்டுவார் என்று எல்லோரும் பெருமிதப்பட வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்காக அயறாது உழைக்கவும் தயாராக உள்ளேன்" என்று கூறினார். |
| பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படும்: கபில் சிபல் Posted: 11 May 2012 10:59 AM PDT சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்புக்கான பொலிட்டிக்கல் சைன்ஸ் பாடப்பிரிவில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சித்திரத்தை வரைந்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் பதிலளித்ததாவது: சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இந்த பாடப்புத்தகங்கள் 2006-ம் ஆண்டே தயாரித்து பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் அமைச்சர் பதவியில் இல்லை. எனினும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் மாதமே எனது கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பிடம் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மனிதவளத்துறையினால் அமைக்கப்பட்ட கமிட்டியால் பாடப்புத்தகங்களில் வரும் ஆட்சேபத்திற்குரிய விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து அடுத்த வருடம் நீக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இத்தகைய ஆட்சேபத்துக்குரிய விவகாரங்கள் வராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். |
| Posted: 11 May 2012 10:47 AM PDT காதல், அங்காடித்தெரு, கல்லூடி ஆகிய படங்களின் இயக்குனரான பாலாஜிசக்திவேல் இயக்கத்திலும், இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பிலும் உருவாகி ரசிகர்களின் ஆதரவோடும், மற்ற இயக்குனர்கள் மற்றும் முண்ணனி நடிகர்களின் நல்ல வாழ்த்துக்களுடனும் வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'வழக்கு எண் 18/9'. தமிழில் வெற்றியடைந்த படங்களை மற்ற மொழிகளில் உடனடியாக ரிமேக் செய்வது திரையுலகில் தற்போதைய வழக்கமாக இருக்கும் இச்சமயத்தில் வழக்கு எண்18/9 படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யும் முடிவில் இருக்கின்றனர் பாலிவுட்டின் முண்ணனி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். ஆமிர்கான், அனுராக் கஷ்யப், '3 Idiots' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி, எராஸ் இண்டர்நேஷனல் ஆகியோர் இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்களாம். இவர்கள் அனைவரும் நண்பர்களாகவும் இதற்கு முன் இணைந்து பல படங்களை தயாரித்திருப்பதால், ரீமேக் உரிமையை யார் வாங்கினாலும் அவர்களுடன் இணைந்து தயாரிப்பார்கள் எனத் தெரிகிறது. இருந்தாலும் ரீமேக் உரிமையை வாங்குவது யார் என்ற போட்டி வந்துவிட்டதால் அவர்களிடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவி வருகிறதாம். இந்தியிலும் பாலாஜி சக்திவேல் தான் இயக்குகிறார். இந்தியில் இது பாலாஜி சக்திவேலுக்கு முதல் படம் என்பதாலும், தமிழில் முன்னணி இயக்குனர்கள் எடுத்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது அவை தோல்வியடைந்ததாலும் இந்த ரீமேக் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. |
| கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்? Posted: 11 May 2012 10:35 AM PDT ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது. இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம். விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். |
| ஏ. ஆர். ரஹ்மானை மிஞ்சிய இளையராஜா ; நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!! Posted: 11 May 2012 09:04 AM PDT இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார். இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு. இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் எந்த நிறுவனத்துக்கும் ஆடியோவை விற்கவில்லை கவுதம் மேனன். அநேகமாக ரூ 2.50 கோடிக்கு இந்தப் படத்தின் ஆடியோ விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா பட ஆடியோ ரூ 1.75 கோடிக்கு விற்பனையானது. இதைவிட முக்கால் கோடி அதிக விலைக்கு நீதானே என் பொன்வசந்தம் விற்பனையாகவிருக்கிறது. |
| திருமண மற்றும் திருமண வரவேற்பு வீடியோ Posted: 11 May 2012 08:24 AM PDT |
| தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்கப்படும்: கபில் சிபல் Posted: 11 May 2012 07:40 AM PDT பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதமுள்ளவைகள் கிராம சேவாவின் கீழ் செயல்படுகிறது. 24, 969 தபால் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதில் 19,890 அலுவலகங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராம சேவாவின் கீழ் உள்ள அலுவலகங்கள் விரைவில் கணினிமயமாக்கப்படும். இதுபோன்ற தபால் துறை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக ரூ. 1,877.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தபால் துறை அலுவலகங்களில் ஏ.டி.எம். நிறுவனங்கள் அமைப்பதும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. விரைவில் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும். மேலும், தபால் அலுவலகத்தை வங்கிகளாக மாற்ற ஆகும் செலவு ஒரு வங்கியை தொடங்க ஆகும் செலவில் ஒரு பங்குதான் ஆகும். இதன்மூலம் தபால் துறைகள் வங்கிகளாக செயல்படும். இதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி கோரப்பட்டுள்ளது என கூறினார். |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு Posted: 11 May 2012 05:55 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆ. ராசா தவிர அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டார்கள். ஆ. ராசா கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு வரை ஜாமீன் மனு தாக்கல் செய்யாமலே இருந்தார். சில தினங்களுக்கு முன் சித்தார்த் பெகுராவுக்கும் ஆர்.கே.சந்தோலியாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராசாவும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அவருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| புதுக்கோட்டையில் யாருக்கு வாய்ப்பளிப்பார் விஜயகாந்த்? Posted: 11 May 2012 05:43 AM PDT புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வலுவான அதிமுகவுக்கு எதிராக யாரை விஜயகாந்த் களமிறக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் அத்தனை கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது. தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த்தான் ஒரே பலசாலி. எப்படி அதிமுக என்றால் ஜெயலலிதா, திமுக என்றால் கருணாநிதி, மதிமுக என்றால் வைகோவோ அதே போலத்தான் தேமுதிகவின் நிலையும். இந்தத் தலைவர்களின் முகத்தைப் பார்த்துத்தான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கள் விழுகின்றன. சொந்த செல்வாக்கு, பலம், தனித்துவம் கொண்ட வேட்பாளர்கள் என்று கிட்டத்தட்ட யாருமே எந்தக் கட்சியிலும் நிறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்டவர்களை தலைவர்களும் கூட பெரும்பாலும் விரும்புவதில்லை. அந்த வகையில் கார்த்திக் தொண்டைமான் ரூபத்தில் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் களம் கண்டுள்ளார். அதேபோல விஜயகாந்த் சார்பில் யார் புதுக்கோட்டையில் நிற்கப் போவது என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது வேட்பாளர் தேர்வில் விஜயகாந்த் மும்முரமாக உள்ளார். மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் பெயர் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், புதுக்கோட்டை தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் உள்ளதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த விஜயகாந்த் முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே விஜயகாந்த் யாரை நிறுத்தப் போகிறார், நிற்பவர் வெற்றிகரமாக முரசு கொட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். |
| உதயக்குமார் போராட்டத்தில் திடீர் திருப்பம்... அத்தனை பெண்களும் விலகல்! Posted: 11 May 2012 05:27 AM PDT கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து திடீரென பெண்களும், கிராம மக்களும் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையில் உதயக்குமார் இறங்கியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் போராட்டத்தை தற்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இடிந்தகரையில் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்று ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் உதயக்குமார் அறிவித்திருந்தார். இதையடுத்து இடிந்தகரை, கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை ஜூன் 7ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிந்தகரைக்கு யாரும் வந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை கிராமங்களின் எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் எதிர்பார்த்தபடி யாரும் வர முடியாமல் போய் விட்டது. இதையடுத்து அந்தந்த கிராமங்களிலேயே பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 9 கிராமங்களில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இடிந்தகரை போராட்டத்திலிருந்து பெண்கள் அனைவரும் திடீரென விலகி விட்டனர். யாரும் இன்று அங்கு வரவில்லை. இதனால் வெறும் 25 பேர் மட்டுமே தற்போது உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் கூடியுள்ளனர். தற்போது நடந்து வரும் போராட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு வெடித்ததால்தான் பெண்கள் வாபஸ் பெற்று விட்டதாக தெரிகிறது. இந்த சோதனை போதாது என்று ஆங்காங்கே கிராமங்களில் நடந்து வந்த போராட்டமும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் உதயக்குமார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளார். மக்களே போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருப்பதால் உதயக்குமாரின் போராட்டம் தொடருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவாரா அல்லது வாபஸ் பெறும் முடிவை எடுப்பாரா என்பது தெரியவில்லை. |
| சினேகாவை இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!(போட்டோக்கள்) Posted: 11 May 2012 05:19 AM PDT நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது. இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன. முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா. திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர். முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை. |
| இலங்கைத் தமிழர் தொடர்பான சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் Posted: 11 May 2012 03:31 AM PDT தமிழக அரசியல் கட்சிகள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பது ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழீழமே தீர்வு இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது. இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர். தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர். தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல. கடந்த போர் முடிந்த பிறகு இராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள். அவமானப்படுத்தாதீர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும். இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும். இந்தக் கோரிக்கையை இராசபக்சேயிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்றார் அவர். |
| ஜெயந்திரர் மீது ரஞ்சிதா வழக்கு- எழும்பூர் கோர்ட்டில் நேரில் மனு Posted: 11 May 2012 02:52 AM PDT நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார் என்று கூறி இருந்தார். இதற்கு நித்யானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன். நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் நடிகை ரஞ்சிதா எழும்பூர் கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதி வி.பி. ரவீந்திரன் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவரை நீதிபதி திங்கட்கிழமை வாருங்கள் என்றார். இதையடுத்து நடிகை ரஞ்சிதா கோர்ட்டை விட்டு வெளியில் வந்தார். அதன் பிறகு ரஞ்சிதா வக்கீல்கள் கூறுகையில், நீதிபதி முதலில் இந்த மனு விசாரணையை எடுத்தபோது, ரஞ்சிதா கோர்ட்டுக்கு வந்து சேர இயலவில்லை. எனவே திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றனர். இதையடுத்து நடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் கூறியதாவது:- என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர கோர்ட்டுக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











































.jpg)





.jpg)










